முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பதன்கோட் தாக்குதலை தொடர்ந்து டெல்லியை தகர்க்க திட்டமிட்ட 12 பாகிஸ்தான் தீவிரவாதிகள் கைது

புதன்கிழமை, 4 மே 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : டெல்லி போலீசார்  நேற்று பாகிஸ்தானின் 12 ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகளை கைது செய்தனர். அந்த தீவிரவாதிகள் தலைநகர் உள்ளிட்ட நகரங்களில் பயங்கர தாக்குதல் நடத்த  திட்டமிட்டு இருந்தது விசாரணையில் தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட நபர்கள் தீவிரவாத இயக்கத்தில் அமைதியாக பதுங்கி இருந்து பயங்கர விளைவை ஏற்படுத்தும் (Sleeper cell) பிரிவை சேர்ந்தவர்கள் ஆவார்கள். அவர்கள் டெல்லியிலும், நாட்டின் இதர முக்கிய நகரங்களிலும் தாக்குதல் நடத்த திட்டமிட்டுஇருந்தார்கள்.

பஞ்சாப் மாநிலம் பதன் கோட் விமானப்படை தளத்தில் கடந்த ஜனவரி மாதம் 2-ம் தேதியன்று பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலில் ஏழு இந்திய வீரர்கள் கொல்லப்பட்டார்கள். அந்த தீவிரவாத இயக்கத்தின்  தலைவர் மசூத் அசாருக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா வலியுறுத்தியது. இந்த முயற்சியை சீனா தனது வீடோ அதிகாரத்தை பயன்படுத்தி தடுத்தது. இருப்பினும் மசூத் அசாருக்கு சர்வதேச அளவில் தடை விதிப்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. இது தொடர்பாக ராஜிய ரீதியாக முயற்சிகளை மேற்கொண்டு சீனாவுடனும் இந்தியா பேசி வருகிறது.

இந்த நிலையில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த 12 தீவிரவாதிகளை சிறப்பு போலீசார் கைது செய்துள்ளனர். இது குறித்து சிறப்புபோலீஸ் கமிஷனர் (சிறப்பு பிரிவு) அரவிந்த் தீப் கூறுகையில்,, பாகிஸ்தான் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தின் 12 தீவிரவாதிகளை டெல்லி மற்றும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்து கைது செய்துள்ளோம். அவர்களை செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்திருக்கிறோம். அவர்களிடம் இருந்து வெடி பொருளும் கைப்பற்றப்பட்டிருக்கிறது என்றார். கைது செய்யப்பட் ட தீவிரவாதிகளில் சிலர் டெல்லியை நிரந்தர இருப்பிடமாக கொண்டவர்கள் ஆவார்கள். சிலர் அருகாமையில் உள்ள உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் .

போலீசாரின் தகவல்படி, கைது செய்யப்பட்ட தீவிரவாதிகள் அமைதியாக இருந்து பயங்கர தாக்குதல் நடத்தும் பிரிவை சேர்ந்தவர்கள் ஆவார்கள். அவர்கள் டெல்லி மற்றும் நாட்டின் இதர முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்தார்கள். அந்த தீவிரவாதிகளிடம் இருந்து ஐ.இ.டி. வெடி பொருள் கைப்பற்றப்பட்டது. கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளின் விவரங்களை போலீசார் வெளியிட மறுத்தனர். இதற்கிடையே அவர்களிடம் சிறப்பு விசாரணை பிரிவு நிபுணர்கள் மற்றும் புலனாய்வு துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விசாரணை ரகசிய இடத்தில் நடந்து வருகிறது.

ஜெய்ஷ் -இ-முகமது தீவிரவாதிகள் கடந்த 2008-ம் ஆண்டு முதல் இந்தியாவில் தாக்குதல் நடத்தும் செயலை தீவிரப்படுத்தியுள்ளது. 2008-ம் ஆண்டு மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய போது அந்த தாக்குதலுக்கு மூளையாக ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத தலைவர் மசூத் அசார் இருந்தார். அந்த தாக்குதலை தொடர்ந்து ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்திற்கு ஐக்கிய நாடுகள் சபை தடை விதித்தது. இருப்பினும் மசூத் அசாருக்கு தடை விதிக்கும் விவகாரத்தில் ஐ.நா. இன்னும் உறுதியான முடிவை எடுக்க வில்லை.

ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள் பாகிஸ்தான் எல்லையில் இருந்து அந்த நாட்டு ராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் இந்திய எல்லையில் நுழைந்து பதன் கோட் விமானப்படை தளத்தை தாக்கினார்கள். தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் உதவி செய்வதற்கு இந்தியா தொடர்ந்து கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்