முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

8 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தி டெல்லி அணி வெற்றி

புதன்கிழமை, 4 மே 2016      விளையாட்டு
Image Unavailable

ராஜ்கோட் : ராஜ்கோட்டில் நடந்த லீக் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தி டெல்லி அணி வெற்றி தனது 5-வது வெற்றியை பதிவு செய்தது. 9-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ராஜ்கோட்டில் நேற்று முன்தினம் இரவு நடந்த 31-வது லீக் ஆட்டத்தில் குஜராத் லயன்சும், டெல்லி டேர்டெவில்சும் மோதின. ‘டாஸ்’ ஜெயித்த டெல்லி கேப்டன் ஜாகீர்கான், குஜராத்தை முதலில் பேட் செய்ய பணித்தார். இதன்படி குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக வெய்ன் சுமித்தும், பிரன்டன் மெக்கல்லமும் களம் இறங்கினர்.

மெக்கல்லம் (1 ரன்), ஜாகீர்கானின் வேகத்தில் கிளீன் போல்டு ஆனார். சுழற்பந்து வீச்சாளர் ஷபாஸ் நதீம் ஒரே ஓவரில் வெய்ன் சுமித் (15 ரன்), ஆரோன் பிஞ்ச் (5 ரன்) ஆகியோரை கழற்ற, குஜராத் அணி நெருக்கடிக்குள்ளானது. ‘பவர்-பிளே’யான முதல் 6 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 35 ரன்களுடன் தத்தளித்த குஜராத்துக்கு, இந்த சீசனில் மோசமான ‘பவர்-பிளே’ ஸ்கோர் இது தான். அணியை சரிவில் இருந்து மீட்க போராடிய கேப்டன் சுரேஷ் ரெய்னா (24 ரன்) முக்கியமான நேரத்தில் ஸ்டம்பிங் செய்யப்பட்டார்.

இதன் பின்னர் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கும், ரவீந்திர ஜடேஜாவும் இணைந்து நேர்த்தியாக ஆடினர். இவர்கள் ஆடிய விதத்தை பார்த்த போது அந்த அணி 160 ரன்களை கடக்கும் போல் தோன்றியது. ஆனால் டெல்லி கேப்டன் ஜாகீர்கானின் பீல்டிங் வியூகமும், பவுலிங்கை மாற்றிய விதமும் எதிரணியின் ஸ்கோரை கட்டுப்படுத்த வெகுவாக உதவியது.  அணியின் ஸ்கோர் 127 ரன்களை எட்டிய போது, தினேஷ் கார்த்திக் 53 ரன்களில் (43 பந்து, 5 பவுண்டரி) வீழ்ந்தார். அடுத்து வந்த பவுல்க்னெர் 7 ரன்னிலும், இஷன் கிஷான் 2 ரன்னிலும் வெளியேற்றப்பட்டனர்.

20 ஓவர்களில் குஜராத் அணி 7 விக்கெட்டுக்கு 149 ரன்கள் மட்டுமே எடுத்தது. ரவீந்திர ஜடேஜா 36 ரன்களுடன் (26 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தார். டெல்லி தரப்பில் ஷபாஸ் நதீம் 2 விக்கெட்டுகளும், கிறிஸ் மோரிஸ், ஜாகீர்கான், முகமது ஷமி, அமித் மிஸ்ரா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

பின்னர் 150 ரன்கள் இலக்கை நோக்கி டெல்லி அணி ஆடியது. தொடக்க ஆட்டக்காரர்கள் 18 வயதான ரிஷாப் பான்ட் 69 ரன்களும் (40 பந்து, 9 பவுண்டரி, 2 சிக்சர்), குயின்டான் டி காக் 46 ரன்களும் (45 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) நொறுக்கி வெற்றிப்பாதைக்கு அடித்தளமிட்டனர். டெல்லி அணி 17.2 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 150 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றியை வசப்படுத்தியது. சஞ்சு சாம்சன் 19 ரன்களுடனும், டுமினி 13 ரன்களுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

இதன் மூலம் டெல்லி அணி ஏற்கனவே குஜராத்திடம் ஒரு ரன் வித்தியாசத்தில் அடைந்த தோல்விக்கும் பழிதீர்த்துக் கொண்டது.7-வது ஆட்டத்தில் ஆடிய டெல்லிக்கு இது 5-வது வெற்றியாகும். குஜராத்துக்கு 3-வது தோல்வியாகும். சிறப்பாக ஆடிய டெல்லி அணியின் ரிஷாப் பான்ட்-க்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. குஜராத் லயன்ஸ் 10–வது போட்டியில் ஐதராபாத்தை நாளை சந்திக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்