முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதலமைச்சராக பதவியேற்க வந்த ஜெயலலிதாவுக்கு மக்கள் மகிழ்ச்சி பொங்க மாபெரும் வரவேற்பு

திங்கட்கிழமை, 23 மே 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை : முதலமைச்சராக பதவி ஏற்க வந்த ஜெயலலிதாவுக்கு மக்கள் வழிநெடுக வெள்ளமென திரண்டிருந்து மகிழ்ச்சி பொங்க வரவேற்பு அளித்தார்கள். சட்டமன்ற தேர்தலில் தனித்து நின்று போட்டியிட்டு 134 தொகுதிகளில் அதிமுக மகத்தான வெற்றி பெற்றது. அதிமுக பொதுசெயலாளரும் முதலமைச்சருமான ஜெயலலிதா , ஆர்.கே.நகரில் வெற்றி பெற்றார்.

1984–ம் ஆண்டுக்குப்பின் அதாவது 32 ஆண்டுகளுக்குப்பின் ஆட்சியில் இருந்த ஒரு கட்சி தொடர்ச்சியாக அடுத்து ஆட்சியை பிடித்த சரித்திர சாதனையை ஜெயலலிதா படைத்திருக்கிறார். அதே போன்று இதுவரை 6–வது முறையாக யாரும் முதலமைச்சராக பதவி ஏற்றது இல்லை. அந்த வரலாற்று  சாதனையையும் ஜெயலலிதா பிடித்திருக்கிறார்.
ஜெயலலிதா பதவி ஏற்ற நிகழ்ச்சி சென்னை கடற்கரை சாலையில் உள்ள பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் கோலாகலமாக நடைபெற்றது.

ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பதவி ஏற்கும் நிகழ்ச்சியை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்களும் தொண்டர் களும் சென்னையில் குவிந்தனர். முதலமைச்சர் ஜெயலலிதாவின் இல்லமான போயஸ் தோட்ட இல்லத்திலிருந்து பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபம் வரை சாலையின் இருபக்கமும் மக்கள் வெள்ளமென திரண்டிருந்தனர்.

ஜெயலலிதா வந்தபோது வாழ்த்து கோஷம் எழுப்பியும் கொடிகளை அசைத்தும் உற்சாகமாக வரவேற்றார்கள். மகளிர் அணியினர் மலர் தூவியும், பூரண கும்ப மரியாதை அளித்தும் முதலமைச்சரை வரவேற்றார்கள். பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபம் அருகே கடற்கரை சாலையில் மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காத அளவில் இருந்தது. மக்கள் வெள்ளத்தில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கார் மெல்ல ஊர்ந்து வந்தது. மக்களின் எழுச்சி வரவேற்பை ஜெயலலிதா கைகூப்பியும், கை அசைத்தும் பெற்றுக் கொண்டார்.

படுகர் இன மக்கள் பாரம்பரிய உடை அணிந்து நடனமாடி ஜெயலலிதாவை வரவேற்றார்கள். செண்டை மேளம், நாதஸ்வரம், தாரை தப்பட்டை, பேண்டு வாத்தியம் முழங்க கொம்பு ஊதியும் மற்றும் பல்வேறு இசை கருவிகள் இசைக்க ஜெயலலிதாவுக்கு எழுச்சி வரவேற்பு அளிக்கப்பட்டது.

பதவி ஏற்பு விழா மண்டபம் நடந்த வளாகம் மக்கள் வெள்ளமாக காட்சி அளித்தது. பதவி ஏற்பு விழா நிகழ்ச்சியை காண பல்வேறு இடங்களில் பெரிய எல்.இ.டி. திரை வைக்கப்பட்டு அதில் ஒளிபரப்பப்பட்டது.

தமிழகம்  முழுவதும் ஒளிபரப்பு
முதலமைச்சர் ஜெயலலிதாவின் பதவி ஏற்பு விழா நிகழ்ச்சிகள் தமிழகம்  முழுவதும் நவீன மின்னணு வீடியோ வேன் மூலம் பெரிய திரையில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எங்கும் எழுச்சி, உற்சாகம் காணப்பட்டது. 6–வது முறையாக முதலமைச்சர் ஜெயலலிதா பதவி ஏற்றதை அடுத்து தமிழகம் முழுவதும் மக்கள் இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். ஜெயலலிதாவின் வீட்டில் இருந்து பதவி ஏற்பு விழா நடந்த மண்டபம் வரை வழிநெடுக அ. தி.மு.க. கொடிகள் கட்டப்பட்டிருந்தது. எங்கும் விழாக்கோலம் பூண்டிருந்தது.

கோட்டையில் ஜெயலலிதா
முதலமைச்சர் ஜெயலலிதா பதவி எற்றதும் சென்னை தலைமை செயலகத்துக்கு வந்தார். அங்கு உயர் அதிகாரிகள், போலீஸ் டி.ஜி.பி. ஆகியோர் மலர்கொத்து வழங்கி வரவேற்றார்கள். பின்னர் முதலமைச்சர் 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். அதன்பின் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். தலைமைச் செயலக நுழைவு வாயிலில் நாகதேவதை அம்மன் ஆலயம் உள்ளது. அங்கு சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் நேராக ஜெயலலிதா கவர்னர் மாளிகை சென்றார். அங்கு செம்மலை தற்காலிக சபாநாயகராக பதவி ஏற்கும் நிகழ்ச்சிக்கு சென்றார். அப்போதும் வழிநெடுக ஜெயலலிதாவுக்கு மக்கள் திரண்டிருந்து எழுச்சி வரவேற்பு அளித்தனர்.

ஜே.சி.டி.பிரபாகர்
அ. தி.மு.க. சிறுபான்மை பிரிவு துணைச் செயலாளர்  ஜே.சி.டி.பிரபாகர் மலர்கொத்துடன் நின்றார். உடனே காரை நிறுத்தி அவரிடம் மலர்கொத்து பெற்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்