முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தஞ்சாவூர், அரவக்குறிச்சி தேர்தலை ஜூன் 1–ந்தேதிக்குள் நடத்த தேர்தல் கமிஷனுக்கு கவர்னர் கடிதம்

வெள்ளிக்கிழமை, 27 மே 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை,  தஞ்சாவூர், அரவக்குறிச்சி சட்டசபை தொகுதிகளுக்கு ஜூன் 1–-ந் தேதிக்கு முன்பாக தேர்தல் நடத்த வேண்டும் என்று தலைமை தேர்தல் கமிஷனர் நஜீம் ஜைதிக்கு தமிழக கவர்னர் ரோசய்யா கடிதம் எழுதி உள்ளார்.

இதுகுறித்து கவர்னர் மாளிகை நேற்று முன் தீனம் இரவு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:–-

அரவக்குறிச்சி சட்டசபை தொகுதி அ  தி.மு.க. வேட்பாளர் வி.செந்தில் பாலாஜியும், தஞ்சாவூர் சட்டசபை தொகுதி அண்ணா தி.மு.க. வேட்பாளர் எம்.ரங்கசாமியும் கடந்த 22–-ந் தேதியன்று கவர்னர் ரோசய்யாவை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். இந்த இரண்டு தொகுதிகளின் தேர்தலை கவர்னரின் அனுமதியின்றி தேர்தல் கமிஷன் தள்ளி வைத்திருப்பதாக அவர்கள் கூறினர்.

பண பட்டுவாடா புகாரை கோர்ட்டில் தான் தீர்மானிக்க வேண்டும் என்றும், அதற்காக தேர்தலை தள்ளிவைத்தால், தேர்ந்தெடுக்கப்பட உள்ள எம்.எல்.ஏ.க்களின் பதவிக்காலம் குறைந்து விடும் என்றும் அவர்கள் அந்த மனுவில் கூறி இருந்தனர்.

இதையடுத்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரியை கடந்த 23–-ந் தேதியன்று அழைத்து கவர்னர் ஆலோசனை நடத்தினார். மறுநாள் (24–-ந் தேதி) தலைமை தேர்தல் கமிஷனின் அறிக்கையை கவர்னரிடம் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தாக்கல் செய்தார்.

மக்கள் பிரதிநிதித்துவ சட்ட விதிமுறைகள், அரசியல் சட்டம், முந்தைய வழக்குகளில் சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில், அண்ணா தி.மு.க. வேட்பாளர்களின் கோரிக்கை மனுக்களையும், தலைமை தேர்தல் கமிஷனின் விரிவான அறிக்கையையும் கவர்னர் ஆய்வு செய்தார். இந்த 2 தொகுதிகளுக்கான தேர்தலை தள்ளிவைத்ததன் மூலம், அத்தொகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட உள்ள எம்.எல்.ஏ.க்கள், நடைபெற உள்ள டெல்லி ராஜ்யசபை தேர்தலில் ஓட்டுபோடும் சட்டப்பூர்வ உரிமையை இழக்க வேண்டி இருக்கும் என்ற உண்மையையும் கருத்தில் கொண்டார்.

அதன் அடிப்படையில், பொது நலன் மற்றும் அனைத்து தரப்பினரின் நலன் கருதி, தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளுக்கான தேர்தலை கூடிய விரைவில், குறிப்பாக ஜூன் 1–-ந் தேதிக்கு முன்பே நடத்துமாறு சிபாரிசு செய்து தலைமை தேர்தல் கமிஷனருக்கு கவர்னர் கடிதம் எழுதி உள்ளார்.   இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்