முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடகத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி: முதல்வர் ஜெயலலிதா உத்தரவுப்படி தமிழக எல்லையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

ஞாயிற்றுக்கிழமை, 29 மே 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை : கர்நாடக மாநிலத்தில் பறவை காய்ச்சல் பரவி வருவதை அடுத்து, தமிழகத்தில் பறவை  காய்ச்சல் பரவாமல் தடுக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவுப்படி, மாநில எல்லையில் 24 மணி நேர  கண்காணிப்பு பணி, மற்றும் தடுப்பு சோதனை சாவடி அமைக்கபட்டு கிருமி நீக்க மருந்து தெளிக்கும் பணிகள் நடைப்பெற்றன. இவற்றை தமிழக கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி  ஆய்வு செய்தார்.

கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டத்தில் உள்ள ஹம்னாபாத் கிராமத்தில் ரமேஷ் குப்தா என்பவரது கோழிப்பண்ணையில் கடந்த மாதம் நோய் தொற்று ஏற்பட்டு 8 ஆயிரம் கோழிகள் இறந்தன. கடந்த 3-ம் தேதியன்று 23 ஆயிரம் கோழிகள் இறந்தன. இது பற்றி ரமேஷ் குப்தா கர்நாடக மாநில கால்நடைத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் கோழிப்பண்ணையை பார்வையிட்டார்கள். இறந்த கோழிகளின் மாதிரிகளையும் அவர்கள் போபாலில் உள்ள கால் நடை ஆய்வு மையத்திற்கும் சோதனைக்கு அனுப்பினார்கள். அந்த பரிசோதனையில் பறவைக்காய்ச்சலால் கோழிகள் இறந்திருப்பது தெரிய வந்தது.

கர்நாடக மாநில கால்நடைத்துறை அமைச்சர் மஞ்சு மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் சென்று பறவைக்காய்ச்சல் பாதித்த பண்ணையை பார்வையிட்டார்கள். அப்போது அங்குள்ள ஒன்றரை லட்சம் கோழிகளுக்கு பறவைக்காய்ச்சலை உண்டாக்கும் எச்-5 என்-1 வைரஸ் தாக்கி இருப்பது தெரிய வந்தது. பறவைக்காய்ச்சல் பிற இடங்களுக்கு பரவாத வகையில், அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். முதல் கட்டமாக அவர்கள்  பறவை காய்ச்சல் பாதித்த ஒன்றரை லட்சம் கோழிகளை ஆழமாக தோண்டி புதைத்தார்கள். அங்கிருந்த 1 லட்சம் முட்டைகளையும் புதைத்தனர். கர்நாடகத்தில் கடந்த ஒரு மாதத்தில் 2 லட்சம் கோழிகள் இறந்துள்ளன. இதனால் ரூ.6.5 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் பரவிவரும் பறவைகாய்ச்சல் தமிழகத்தில் பரவாமல் தடுக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவுப்படி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த பணிகளை தமிழக கால்நடைத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வுக்கு பிறகு அமைச்சர் கூறியதாவது:–

முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில் கர்நாடக மாநிலத்தில்  பரவிவரும் பறவை காய்ச்சல் தமிழகத்தில் பரவாமல் தடுக்க பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாநில  எல்லையான ஓசூர் பகுதியில் உள்ள ஜீஜீவாடி, அந்திவாடி, பேரிகை கக்கனூர்,  பாகலூர், குருவிநாயனபள்ளி ஆகிய இடங்களில் சோதனை சாவடி அமைத்து கர்நாடகாவில்  இருந்து வரும் வாகனங்களுக்கு பறவை காய்ச்சல் நோய் தடுப்பு மருந்து  தெளிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் கர்நாடக, தமிழக நுழைவு பகுதியான ஜீஜீ வாடி தேசிய  நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள நோய் தடுப்பு மையத்தில் ஆயிரக்கணக்கான  வாகனங்களுக்கு மருந்து தெளிக்கப்படுகிறது. 24 மணி நேரமும் விசை தெளிப்பான்கள்  மூலம் மருந்து தெளிக்கவும், இரவு நேரங்களில் மின் விளக்குகள் அமைத்து,  காவல் துறை துணையுடன் மருத்துதெளிக்கும் பணிகள் நடைப்பெற 3 குழுக்கள்  அமைக்கபட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று கூறினார்.

இப்பணிக்கு தேவையான  அனைத்து மருந்துகள் மற்றும் உபகரணங்கள் தயார் நிலையில் இருப்பதாகவும்,  அனைத்து வாகனங்களுக்கும் கிருமி நீக்க மருந்து தெளிப்பு பணி தொய்வின்றி  நடைபெற மருத்துவ குழுவிற்கு அறிவுரை வழங்கி உள்ளதாகவும் அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி மேலும் தெரிவித்தார்.

ஆய்வின் போது மண்டல இனை இயக்குநர் செல்ல துரை மாவட்ட கால்நடை  பண்ணை துணை இயக்குனர் சிவகிருஷ்ணன், உதவி இயக்குனர் மணிமாறன், முதன்மை  மருத்துவர் சின்னசாமி, குழு மருத்துவர்கள் சுகந்தி, தயாநிதி மற்றும்  மாவட்ட கவுன்சிலர் சந்திரசேகர், நகர மன்ற துணைதலைவர் ராமு, கூட்டுறவு  மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஜெயபிரகாஷ், நாராயணன், அசோகன், ஸ்ரீதர்,  பிரபாகர் ரெட்டி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்