முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொறியியல் பொதுக்கலந்தாய்வு இன்று தொடக்கம் - 1.29 லட்சம் மாணவர்கள் பங்கேற்க அழைப்பு

ஞாயிற்றுக்கிழமை, 26 ஜூன் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை : பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்வதற்காக பொது கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. இந்த கலந்தாய்வில் பங்கேற்க 1 லட்சத்து 29 ஆயிரம் மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். கலந்தாய்வில் பங்கேற்க வரும் மாணவிகளுக்கு தங்குமிட வசதி செய்து தரப்படும் என்று அண்ணாபல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.  

தமிழ்நாடு பொறியியல் படிப்பில் சேர்வதற்கு, 1 லட்சத்து 34 ஆயிரத்து 944 பேர் விண்ணப்பித்துள்ளனர். . இந்த மாணவர்களுக்கான ரேண்டம் எண், கடந்த  20 ம் தேதி வெளியிடப்பட்டது தரவரிசைப் பட்டியல் 22 ம் தேதி வெளியிடப்பட்டது.    தமிழகத்தில் உள்ள 524 கல்லூரிகளில் 1 லட்சத்து 92 ஆயிரத்து 9 இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்காக 1 லட்சத்து 34 ஆயிரத்து 994 பேர்  விண்ணப்பம் செய்தனர். அவர்களில் 3,812 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. தகுதியான விண்ணப்பங்களாக 1 லட்சத்து 31 ஆயிரத்து 182 விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டன.  இவர்களில்  விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கு கடந்த 24 ம் தேதி நடைபெற்ற கலந்தாய்வில் 1,195 மாணவர்கள் கலந்து கொள்ள அழைக்கப்பட்டனர். அவர்களுக்கு உரிய 500 இடங்களில் 352 இடங்களை தேர்வுச் செய்தனர்.

அதேபோல் மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கான 25 ம் தேதி நடைபெற்றது. அதில் தகுதியான 221 மாணவர்கள் அழைக்கப்பட்டனர். அவர்களில் காதுகேளாதோர் பிரிவில் 29 பேர் கலந்துக் கொண்டத்தில் 26 மாணவர்கள் இடத்தினை தேர்வு செய்தனர். பார்வையற்றோர் பிரிவில் கலந்துக் கொள்ள அழைக்கப்பட்ட 14 பேரில் 12 பேரும், ஊனமுற்றோர் பிரிவில் கலந்துக் கொண்ட 185 பேரில் 122 பேரும் இடங்களை தேர்வுச் செய்தனர்.         பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று  தொடங்கி  ஜூலை 21 ம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த கலந்தாய்வில் கலந்துக் கொள்வதற்கு 78ஆயிரத்து 816 மாணவர்களும், 50 ஆயிரத்து 215 மாணவிகளும் என 1 லட்சத்து 29 ஆயிரத்து 31 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். மாணவர்கள் தங்களுக்கான அழைப்பு கடித்தத்தை இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.பொதுப்பிரிவு கலந்தாய்விற்கு வரும் மாணவர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை சென்னை அண்ணாப் பல்கலை கழக வளாகத்தில் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் கலந்தாய்விற்கு வரும் போது எவ்வித சிரமமும் இருக்க கூடாது என்பதனை கருத்தில் கொண்டு, வழிகாட்டு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட நேரதிற்கு 2 மணி நேரம் முன்னதாக மாணவர்கள் வர வேண்டும். அங்கிருந்து வங்கி கவுண்டருக்கு சென்று கலந்தாய்விற்கான கட்டணத்தை செலுத்தி, கலந்தாய்விற்கான படிவத்தினை பெற வேண்டும்.

பின்னர் கலந்தாய்விற்கு முன்னர் மாணவர்களுக்கு கல்லூரியை தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள அரங்கிற்கு செல்ல வேண்டும். அந்த அரங்கில் வைக்கப்பட்டுள்ள 6 டிஜிட்டல் திரைகளில் மண்டலம் வாரியாக கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களின் விவரம் ஒளிப்பரப்பட்டு கொண்டு இருக்கும். மாணவர்கள் அதனை பார்த்து    தங்களுக்கு தேவையான சுமார் 3  கல்லூரியையும், துறையையும் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் கலந்தாய்வு அறைக்கு அழைக்கப்பட்டதும், மாணவருடன், ஒருவரை அழைத்துக் கொண்டு சென்று தங்களுக்கு தேவையான கல்லூரி மற்றும் பாடத்தினை தேர்வு செய்ய வேண்டும்.

கலந்தாய்விற்கு முன்னர் மாணவர்களும், பெற்றோர்களும் அமர்வதற்கான அரங்கில் சென்னை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, மதுரை ஆகிய மண்டலங்களுக்கு தனித்தனியாகவும்,  அண்ணா பல்கலை கழகம் மற்றும் அதன் உறுப்புகல்லூரி, அரசு,அரசு உதவி பெறும் கல்லூரி ஆகியவற்றிக்கு தனியாகவும் டிஜிட்டல் திரை அமைக்கப்பட்டுள்ளது.மேலும் கலந்தாய்விற்கு வருபவர்களிடம் துண்டுபிரச்சுரங்கள் வழங்கவோ (அ) ஒரு கல்லூரியில் சேரவோ வலியுறுத்த கூடாது. மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் கல்விக் கடன் பெறுவதற்கு வங்கிகளின் கிளைகளும் தங்களின் அரங்கினை அமைத்துள்ளன. உணவு வசதி, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, மருத்துவ வசதி போன்றவையும் செய்யப்பட்டுள்ளன. மேலும் அம்மா சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்படுத்தி தருவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  மாணவிகள் தங்களின் தாய் அல்லது சகோதரியுடன்  கலந்தாய்விற்கு முதல்நாள் வந்தால் அவர்கள் தங்குவதற்கு அண்ணா பல்கலை கழகத்தில் ஹாஸ்டல் வசதியும் அண்ணா பல்கலை கழகத்தால் செய்யப்பட்டுள்ளன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்