முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக திட்டங்களுக்கு மத்திய அரசின் அனுமதி பெற்று தருவதில் முன்நிற்பவர் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு - முதல்வர் ஜெயலலிதா பாராட்டு

சனிக்கிழமை, 23 ஜூலை 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழக நலன்களை காப்பதிலும், தமிழக அரசின் திட்டங்களுக்கு மத்திய அரசின் அனுமதியை விரைந்து பெற்றுத் தருவதிலும் முன் நிற்பவர் வெங்கையா நாயுடு என்று முதல்வர் ஜெயலலிதா பாராட்டு தெரிவித்துள்ளார்.

சென்னை வண்ணாரப்பேட்டை முதல் திருவொற்றியூர்- விம்கோ நகர் வரையிலான சென்னை மெட்ரோ ரயிலின் முதல் கட்ட நீட்டிப்புத் திட்டத்திற்கு ஆர்.கே.நகர் பாபுஜி ஜெகஜீவன்ராம் விளையாட்டித்திடலில் முதல்வர் ஜெயலலிதா நேற்று அடிக்கல் நாட்டி வைத்து பணிகளைத் துவக்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது.,

சென்னை மெட்ரோ ரயில் முதல் வழித்தடத்தை, வண்ணாரப்பேட்டையிலிருந்து திருவொற்றியூர் - விம்கோ நகர் வரை நீட்டிக்கும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி, பணிகளை துவக்கி வைத்ததில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இந்த வழித் தடத் திட்டத்திற்கு மத்திய அரசின் ஒப்புதலை பெற்றுத் தருவதில் முக்கியப் பங்காற்றியவர் வெங்கையா நாயுடு. எனவே தான், இந்த திட்ட துவக்க விழாவில் அவர் கலந்து கொள்ள வேண்டும் என்று நான் உறுதியாக இருந்தேன். கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான 10.15 கிலோ மீட்டர் உயர்த்தப்பட்ட வழித் தடத்தில் சென்னை மெட்ரோ ரயில் பயணிகள் சேவையை 2015-ம் ஆண்டு ஜூன்- 29-ம் தேதி   துவக்கி வைத்தேன்.

அந்த துவக்க விழாவிற்கு தமிழக அரசின் சார்பில், வெங்கையா நாயுடுவை அழைத்திருந்தேன். ஆனால், அலுவல் காரணமாக வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை இருந்த காரணத்தால் அப்போது அவரால் அந்த விழாவில் கலந்து கொள்ள இயலவில்லை. அவரது மத்திய நகர்ப்புற மேம்பாடு துறை அதிகாரிகள் அந்த விழாவில் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டின் உற்ற நண்பர் வெங்கையா நாயுடு  ஆவார். தமிழக நலன்களை காப்பதிலும் தமிழக அரசின் திட்டங்களுக்கு மத்திய அரசின் அனுமதியை விரைந்து பெற்றுத் தருவதிலும் முன் நிற்பவர் வெங்கையா நாயுடு என்று சொன்னால் அது மிகையல்ல.

மத்தியில், பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான அரசு அமைந்த ஒரு சில மாதங்களிலேயே 5.9.2014 அன்று சென்னையில் வெங்கையா நாயுடு என்னை சந்தித்த போது பிரதமர் மோடியிடம்  தமிழக அரசின் சார்பில் நான் சமர்ப்பித்த கோரிக்கைகளில், வெங்கையா நாயுடுவின்  துறை தொடர்பானவற்றை நான் விவாதித்தேன். அப்போது, வண்ணாரப்பேட்டை முதல் திருவொற்றியூர் - விம்கோ நகர் வரையிலான மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்க கேட்டுக் கொண்டேன். அவரது ஆலோசனைப்படி தமிழக அரசின் அதிகாரிகள், மத்திய அரசு அதிகாரிகளோடு இது தொடர்பாக விரிவாக விவாதித்தனர்.

அதன் அடிப்படையில், வெங்கையா நாயுடு அவர்கள் பொறுப்பு வகிக்கும் நகர்ப்புற வளர்ச்சித் துறை இதனை பரிந்துரைத்து. வெங்கையா நாயுடுவின்  ஒப்புதலைப் பெற்றது.

2015-ம் ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி   சென்னையில் என்னை சந்தித்து வெள்ள நிவாரணம் மற்றும் இதர திட்டங்கள் குறித்து அவர் விவாதித்த போது வண்ணாரப்பேட்டை முதல் திருவொற்றியூர்-விம்கோ நகர் வரையிலான மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டத்திற்கு தன்னுடைய அமைச்சகம் ஒப்புதல் அளித்து மத்திய அரசின் நிதித் துறையின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டதாகத் தெரிவித்ததுடன் மத்திய அரசின் நிதித் துறையும் விரைந்து ஒப்புதல் வழங்கத் தேவையான நடவடிக்கைகளை தான் எடுப்பதாக உறுதியளித்தார்.

வெங்கையா நாயுடு முயற்சி மற்றும் பாரதப் பிரதமர்  மோதி ஒத்துழைப்பாலேயே இன்று இந்த திட்டம் துவக்கப்படுகிறது. எனவே தான், தற்போது நாடாளுமன்றம் நடைபெறுகின்ற சூழ்நிலையில் வெங்கையா நாயுடு அவர்கள் பங்கேற்பதற்கு ஏதுவாக நாடாளுமன்றக் கூட்டம் நடைபெறாத சனிக்கிழமை அன்று, இந்த விழாவை ஏற்பாடு செய்ய வேண்டும் என நான் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தேன். இந்த விழாவில், வெங்கையா நாயுடு  கலந்து கொண்டதில் நான் உண்மையிலேயே மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.  இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்