முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தலைவர் நியமனம் தாமதம்: தமிழக காங்கிரசில் குழப்பம் நீடிப்பு

செவ்வாய்க்கிழமை, 16 ஆகஸ்ட் 2016      அரசியல்
Image Unavailable

சென்னை, மாநில தலைவரை நியமனம் செய்வதில் காங்கிரஸ் கட்சியில் தொடர்ந்து குழப்பம் நீடிக்கிறது.
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியை இளங்கோவன் ராஜினாமா செய்து 3 மாதம் ஆகப்போகிறது. புதிய தலைவராக யாரை நியமிப்பது என்று கட்சி மேலிடம் அவசர அவசரமாக ஆலோசனையில் ஈடுபட்டது.

பதவியை கைப்பற்ற களம் இறங்கிய ப.சிதம்பரம், திருநாவுக்கரசர், பீட்டர் அல்போன்ஸ், வசந்தகுமார், செல்லக்குமார், சுதர்சன நாச்சியப்பன், கராத்தே தியாகராஜன், குஷ்பு உள்ளிட்ட சுமார் 20 பேரை சோனியாவும், ராகுலும் சந்தித்து பேசினார்கள். அத்தனை பேரிடம் நேர்காணல் நடத்தியும் யாரையும் தேர்வு செய்ய முடியாமல் கட்சி மேலிடம் குழப்பத்தில் ஆழ்ந்தது. இதனால் யாரை தலைவராக தேர்வு செய்வது என்ற ஆலோசனை முற்றுப் பெறாமல் உள்ளது. டெல்லிக்கு படையெடுத்த தலைவர்களும் எத்தனை நாள்தான் டெல்லியிலேயே தங்கி இருப்பது... என்று ஊர் திரும்பி விட்டார்கள். ஒரு கட்டத்தில் ஓரிருவரின் பெயர்களை தேர்வு செய்து அவர்களை நியமிப்பது பற்றி ப.சிதம்பரம், இளங்கோவன் ஆகியோரிடம் கருத்து கேட்டுள்ளனர்.சுதர்சன நாச்சியப்பன் சிவகங்கைக்காரர். அவரை நியமித்தால் தனக்கு சிக்கலாகி விடும் என்பதால் அவரை நியமிப்பதற்கு ப.சிதம்பரம் ஆப்பு வைத்தார். பீட்டர் அல்போன்சும் இளங்கோவனுக்கு நெருக்கமானவர் என்பதால் அவரையும் நியமிக்கக் கூடாது என்பதை காதில் போட்டு வைத்தார். கூடவே தனக்கு தலைவர் பதவி தந்தால் ஏற்க தயார் என்ற ஆசையையும் கூறி இருக்கிறார்.

ப.சிதம்பரம் மேல்-சபை எம்.பி.யாக இருக்கிறார். பாராளுமன்றத்தில் வாதம் செய்ய தகுதியான எம்.பி. தேவை. எனவே அவரை மாநில பதவிக்கு அனுப்புவது சரிப்பட்டு வராது என்று மேலிடம் கருதுகிறது. தனக்கு இல்லாவிட்டாலும் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு பதவியை பெற காய்களை நகர்த்தினார். அதுவும் எடுபடவில்லை. இளங்கோவனோ, திருநாவுக்கரசருக்கு எதிரான கருத்தை கூறினார். அவர் அ.தி.மு.க., பா.ஜனதா ஆகிய கட்சிகளில் பதவியை அனுபவித்தும் விசுவாசமாக இருக்கவில்லை. காங்கிரசுக்கு விசுவாசமாக இருப்பாரா? இப்போதும் அவர் எம்.ஜி.ஆர். விழா கொண்டாடி திராவிட கட்சி தலைவராக செயல்படுகிறார். எனவே அவர் சரிப்பட்டு வர மாட்டார் என்று தனது கருத்தை முன் வைத்தார். சுதர்சன நாச்சியப்பன், பீட்டர் அல்போன்ஸ் இருவரில் யாரை வேண்டுமானாலும் நியமிக்கலாம் என்ற தனது விருப்பத்தையும் சொன்னார். தனக்கு பதவி வேண்டும் என்று படையெடுத்தவர்கள், மற்றவர்கள் மீது புகார் கொடுத்தவர்கள் என்று எல்லா விவரங்களையும் ஆய்வு செய்த மேலிடம், எந்த முடிவும் எடுக்க முடியாமல் குழப்பத்தில் தவித்தது.யாரை தலைவராக போட்டாலும் அடுத்த சில மாதங்களில் அவரை மாற்ற வேண்டும் என்று அதிருப்தியாளர்கள் படையெடுப்பார்கள். எனவே புதிய தலைவரை தேர்வு செய்வதை பார்த்துக் கொள்ளலாம் என்று மேலிடமும் கிடப்பில் போட்டு விட்டது.தலைவர் இல்லாமலே ஒருவழியாக சுதந்திர தினத்தை கொண்டாடி விட்டார்கள். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த அகில இந்திய செயலாளர் சின்னாரெட்டி, தலைவரை நியமிக்க தாமதமானால் தற்காலிக தலைவராக ஒருவர் நியமிக்கப்படுவார் என்று திடீரென்று அறிவித்தார்.தற்காலிக தலைவராக யாரை நியமிப்பார்கள் என்ற எண்ணம் கட்சி நிர்வாகிகளிடம் பரபரப்பாக பேசப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்