முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கலைக்கு இனி ஆற்ற வேண்டிய பணிகளுக்கான ஊக்கியாக செவாலியே விருதை உணர்கிறேன் : நடிகர் கமல்ஹாசன் பேட்டி

திங்கட்கிழமை, 22 ஆகஸ்ட் 2016      சினிமா
Image Unavailable

சென்னை - பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய ‘செவாலியே’ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டமைகாக நன்றி தெரிவித்துள்ள நடிகர் கமல்ஹாசன், கலை, இலக்கியத்துக்கு ஆற்ற வேண்டிய பணிகளுக்கான ஊக்கியாக கருதும் இவ்விருதினை எனது ரசிகர்களுக்கும், அபிமானிகளுக்கும் அர்ப்பணம் செய்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டில் 1960-ம் ஆண்டு வெளிவந்த ‘களத்தூர் கண்ணம்மா’ திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கமல்ஹாசன். முதல் படத்திலேயே சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதை அவர் பெற்றார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் என பல மொழிகளில் நடிப்பு ஆற்றலை வெளிப்படுத்தி வரும் கமல்ஹாசன், இதுவரை 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

1975-ம் ஆண்டு வெளியான ‘அபூர்வ ராகங்கள்’ திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமான அவரது திரை வாழ்க்கையில், ‘16 வயதினிலே’, ‘சிகப்பு ரோஜாக்கள்’, ‘நீயா?’, ‘வறுமையின் நிறம் சிகப்பு’, ‘வாழ்வே மாயம்’, ‘மூன்றாம் பிறை’, ‘நாயகன்’, ‘தேவர் மகன்’, ‘அவ்வை சண்முகி’, ‘இந்தியன்’, ‘தசாவதாரம்’, ‘பாபநாசம்’ உள்ளிட்ட படங்கள் முக்கிய மைல்கற்களாக அமைந்தன. ஒருநடிகராக மட்டுமல்லாமல் இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், தயாரிப்பாளர், பின்னணி பாடகர், பாடலாசிரியர் என பன்முக திறமைகளை கமல்ஹாசன் வெளிப்படுத்தி இருக்கிறார். 50 ஆண்டுகள் திரைத்துறையில் காலடி பதித்துள்ள அவருக்கு, சிறந்த நடிப்புக்காக மத்திய அரசின் ‘பத்மஸ்ரீ’, ‘பத்மபூஷண்’, மாநில அரசின் ‘கலைமாமணி’ போன்ற பல்வேறு விருதுகள் கிடைத்துள்ளன. இதுதவிர, தேசிய விருதை 4 முறையும், 19 முறை ‘பிலிம்பேர்’ விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.

தற்போது இவருக்கு பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய விருதான ‘செவாலியே’ விருது வழங்கப்படுவதாக அந்நாட்டின் கலாசாரத்துறை அறிவித்துள்ளது. சிறந்த நடிப்பு ஆற்றலுக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. ‘செவாலியே’ விருது பெற இருக்கும் நடிகர் கமல்ஹாசனுக்கு திரை உலகத்தினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். காலில் காயம் ஏற்பட்டு அறுவை சிகிச்சைக்கு பிறகு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது வீட்டில் ஓய்வெடுத்து வரும் கமல்ஹாசன் பாராட்டு மழையில் நனைந்து வருகிறார்.
இந்நிலையில், கலை, இலக்கியத்துக்கு செய்ய வேண்டிய பணிகள் ஏராளம் உள்ளன. அதற்கான ஊக்கியாகவே இந்த செவாலியர் விருதை கருதுகிறேன் என கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து, வாட்ஸ் ஆப்பில் வெளியிட்டுள்ள ஆடியோ வடிவிலான செய்திக்குறிப்பில் அவர் பேசியிருப்பதாவது., பிரெஞ்சு அரசு கலை, இலக்கியத்திற்கான செவாலியே விருதை எனக்கு அளிக்க மனமுவந்துள்ளது. பெருமிதத்துடன், நன்றியுடன் பணிவுற்று அவ்விருதினை ஏற்கிறேன். அவ்விருதின் பெருமையை தமிழக மக்களுக்கு அறிமுகப்படுத்திய ஐயா சிவாஜி கணேசன் அவர்களையும், வடநாட்டு பாமரரையும் அறியச்செய்த காலஞ்சென்ற சத்யஜித் ரே-யையும் என் கரம் கூப்பி வணங்குகிறேன்.
இனி நாம் செய்ய வேண்டிய கலை, இலக்கிய பணிக்கான ஊக்கியாகவே இவ்விருதினை நான் உணர்கிறேன்.

கலை கடற்கரையில், கை மண்ணளவு அள்ளிவிட்ட பெருமை, எவ்வளவு சிறுபிள்ளைத்தனமானது? என்பதை நான் உணர்கிறேன். வயதிலாது என்றும் ஆர்ப்பரிக்கும் கலைக்கடல் அலைகள், இத்தகைய தருணங்களில் கரைமோதி, என் போன்றோர் முகத்தில் தெளித்து, பெருவேச மயக்கம் கலைத்து, உதடும் நனைத்து, உப்பிட்டவர் நினைவை உணரச் செய்கிறது. இதுவரையான என் கலைப் பயணம், தனிமனிதப் பயணம் இல்லை என்பதை உணர்கிறேன். கைதாங்கி, எழுத்தும், கலையும் அறிவித்த பெருங்கூட்டத்துடன் நாம் ஏற்ற யாத்திரை இது என்பதையும் உணர்கிறேன். அக்கூட்டத்தில் பெரும்பான்மை தமிழகத்து ரசிகர்கள், 4 வயது முதல் என் கைப்பிடித்து படியேற்றி, பீடத்தில் அமர்த்தி பார்க்கும் தாய்மை உள்ளம் கொண்ட அவர்களுக்கும் இவ்விருது அர்ப்பணம்.
என்னைப் பெற்றோர் இருந்து பார்க்க இயலாத குறை, என் குடும்பத்தில் எஞ்சிய பெரியோரும், இளையோரும், என் சிறுவெற்றிக்கும் ஆர்ப்பரிக்கும் என் ரசிகர் கூட்டமும் போக்கி விடுகிறது. நன்றியுடன் உங்கள் கமல்ஹாசன்! இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்