முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீர் பிரச்சனைக்கு அரசியல் மட்டத்திலேயே தீர்வுகாண முடியும் :சுப்ரீம் கோர்ட் கருத்து

செவ்வாய்க்கிழமை, 23 ஆகஸ்ட் 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  - காஷ்மீர் பிரச்சனைக்கு அரசியல் மட்டத்திலேயே இப்பிரச்சனைக்கு தீர்வுகாண முடியும் என சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்து உள்ளது. இந்தியாவின் தலைமை நீதிபதி டி.எஸ் தாகூர், பிரச்சினை பல்வேறு பரிமாணங்களைக் கொண்டது, நீதிமன்ற ஆணையானது சரியானதாக இருக்காது, அரசியல் மட்டத்திலேயே இப்பிரச்சனைக்கு தீர்வுகாண முடியும், என்று கூறி உள்ளார்.

கடந்த மாதம் 9-ம் தேதி காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத் தளபதி பயங்கரவாதி புர்கானி வானி பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதையடுத்து அங்கு அவருடைய ஆதரவாளர்களும், காஷ்மீர் பிரிவினைவாதிகளும் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வன்முறைக்கு இதுவரை 67 பேர் பலியாகிவிட்டனர். பொதுமக்களில் 5 ஆயிரம் பேரும், பாதுகாப்பு படையினரில் 4 ஆயிரம் பேரும் காயம் அடைந்துள்ளனர்.

40 நாட்களுக்கு மேலாகியும் காஷ்மீரில் இன்னும் நிலைமை சீரடையவில்லை. அங்கு தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு மற்றும் பிரிவினைவாதிகளின் முழு அடைப்பு போராட்டம் காரணமாக இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கி உள்ளது. இந்நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் ஜம்மு-காஷ்மீர் தேசிய கருஞ்சிறுத்தை கட்சி தலைவரும், வழக்கறிஞருமான பீம் சிங் மனுதாக்கல் செய்தார். காஷ்மீர் பிரச்சினைக்கு பல்வேறு நிவாரணங்களைக் கோரியிருந்த பீம்சிங், காஷ்மீரில் ஆளுநர் ஆட்சியை அமல்படுத்த கோரிக்கை விடுத்து இருந்தார்.

இந்த மனுவானது தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் தலைமையில் நீதிபதிகள் ஏஎம் கான்வில்கர், டிஒய் சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது “இப்பிரச்சினை பல்வேறு பரிமாணங்களைக் கொண்டது. எல்லாவற்றையும் நீதித்துறை அளவுகோள்களின் அடிப்படையிலேயே கையாள முடியாது, அரசியல் மட்டத்திலேயே இப்பிரச்சனைக்கு தீர்வுகாண முடியும்,” என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியது.  காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, காஷ்மீரின் மற்ற எதிர்க்கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடியை நேற்று முன்தினம் சந்தித்தார்.

காஷ்மீர் மாநில பிரச்சினைகளுக்கு அரசியல் சாசனத்துக்கு உட்பட்டு நிரந்தர தீர்வை காணவேண்டும் என்று காஷ்மீர் எதிர்க்கட்சிகளிடம் பிரதமர் மோடி வலியுறுத்தினார். காஷ்மீர் எதிர்க்கட்சிகள் தலைவர் குழுவில் பீம் சிங்கும் கலந்துக் கொள்ள சுப்ரீம் கோர்ட்டு கேட்டுக் கொண்டது. ஆனால் பீம் சிங் “ஆர்.எஸ்.எஸ் சர்வாதிகார அரசு தன்னை அழைக்கவில்லை” என்றார்.இதற்கு பதிலளித்த நீதிபதிகள், “கோர்ட்டு வளாகத்திற்குள் அரசியல் பேசக்கூடாது. நீங்கள் பிரதமரைச் சந்திக்க விரும்புகிறீர்களா இல்லையா” எனக்கேட்டு, சொலிசிட்டர் ஜெனரலிடம் உரிய ஏற்பாடுகளைச் செய்ய அறிவுறுத்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்