முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிங்கப்பூர் முன்னாள் அதிபர் எஸ்.ஆர். நாதன் உடல் தகனம்!

சனிக்கிழமை, 27 ஆகஸ்ட் 2016      உலகம்
Image Unavailable

சிங்கப்பூர் : சிங்கப்பூர் முன்னாள் அதிபர் எஸ். ஆர். நாதனின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கின் போது எஸ்.ஆர். நாதனுக்கு பிடித்தமான சேரன் இயக்கிய பொற்காலம் படத்தில் வைரமுத்து எழுதிய தஞ்சாவூரு மண்ணு எடுத்து... என்ற பாடல் ஒலிபரப்பு செய்யப்பட்டது.எஸ். ஆர். நாதன் என்று அழைக்கப்படும் செல்லப்பன் ராமநாதன் மலேசியாவிலும், அமெரி க்காவிலும் சிங்கப்பூரின் தூதராக சிறப்பாக பணியாற்றியவராவார்.

சிங்கப்பூரின் அதிபராக 1-9-1999ம் ஆண்டு முதன்முதலாக பதவி ஏற்றார். பின்னர் 2011 வரை இருமுறை சிங்கப்பூரின் அதிபராக இருந்து, நீண்ட காலம் அதிபராக இருந்தவர் என்ற பெருமையை பெற்றார்.கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர், சிங்கப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவர் காலமானார். எஸ்.ஆர்.நாதனின் உடல் அடக்கம் அரசு மரியாதையுடன் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

சிங்கப்பூர் நாட்டின் தேசிய கொடியால் மூடப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக நாடாளுமன்ற வளாகத்தில் வைக்கப்படிருந்த எஸ்.ஆர்.நாதனின் உடலுக்கு ஆயிரக்கணக்கான தலைவர்களும், பொதுமக்களும் இறுதி அஞ்சலி செலுத்தினர்.கென்யா நாட்டுக்கு சென்று கொண்டிருந்த ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, வழியில் சிங்கப்பூரில் விமானத்தை நிறுத்தி, தனது மனைவியுடன் சிங்கப்பூர் நாடாளுமன்ற வளாகத்துக்கு வந்து, ஜப்பான் மக்களின் சார்பில் எஸ்.ஆர்.நாதனின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

பகல் 2 மணியளவில் எஸ்.ஆர்.நாதனின் இறுதி யாத்திரை தொடங்கியது. சிங்கப்பூரின் முக்கிய சாலைகள் வழியாக அவரது உடல் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு பல்கலைக்கழகத்தை வந்தடைந்தது.இறுதி மரியாதை சடங்குகள் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் உள்ள பல்கலைக்கழக கலாச்சார மையத்தில் நடைபெற்றது. இறுதி மரியாதையில் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் உள்பட பலர் அஞ்சலி நிகழ்த்தினர் மாலை சுமார் 5 மணியளவில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.முன்னதாக எஸ்.ஆர். நாதனுக்கு பிடித்தமான தமிழ் பட பாடல் ஒலிபரப்பானது.

சேரன் இயக்கிய பொற்காலம் படத்தில் வரும் தஞ்சாவூரு மண்ணு எடுத்து தாமிரபரணி தண்ணிய விட்டு... என்ற பாடல் எஸ்.ஆர். நாதனுக்கு பிடித்தமான பாடலாகும். இந்த பாடலை எழுதியவர் வைரமுத்து ஆவர்.வைரமுத்துவிடம் இந்த பாடலைப் பற்றி அடிக்கடி பேசுவாராம் எஸ். ஆர். நாதன், அதற்குக் காரணம், என் பூர்வீகம் தமிழ்நாடு என்றாலும் எந்த ஊர் என் சொந்த ஊர் என்று எனக்குத் தெரியாது. உங்கள் பாடலைக் கேட்கும்போதெல்லாம் இந்த ஊர்களில் ஒன்று என் சொந்த ஊராக இருக்குமோ என்று என் நெஞ்சம் பரவசம் அடைகிறது என்று வைரமுத்துவிடம் கூறுவாராம் எஸ்.ஆர். நாதன். அதனால்தான் எஸ்.ஆர்.நாதனின் இறுதிச்சடங்கில் அவருக்குப் பிடித்தமான பாடல் ஒலிபரப்பு செய்யப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்