முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக மீனவர்களிடம் பறிமுதல் செய்த படகுகளை திருப்பி தர இலங்கை மறுப்பு

திங்கட்கிழமை, 7 நவம்பர் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை, தமிழக மீனவர்கள் - இலங்கை மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையில் தமிழக மீனவர்களிடம் பறிமுதல் செய்த படகுகளை விடுவிக்க கோரிய இந்தியாவின் வேண்டுகோளை இலங்கை அரசு நிராகரித்தது.

தமிழக மீனவர்கள் பாக் ஜலசந்தி பகுதியில் மீன் பிடிக்க செல்லும்போது அவர்களுக்கும், இலங்கை மீனவர்களுக்கும் அடிக்கடி மோதல் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. மேலும் கடலில் எல்லைதாண்டி வந்து மீன்பிடிப்பதாக தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கும் சம்பவங்களும், மீன வர்கள் சிறை பிடிக்கப்படும் சம்பவங்களும் அடிக்கடி நடந்து வருகிறது.40 ஆண்டு காலமாக இந்த பிரச்சினை தொடர்கிறது. இந்தியா-இலங்கை நாடுகளிடையே பலமுறை பேச்சுவார்த்தை நடந்தும் இதற்கு தீர்வு எட்டப்படவில்லை.இந்த நிலையில் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் சம்பவத்துக்கு நிரந்தர தீர்வு காண டெல்லியில் கடந்த 2-ந்தேதி மத்திய அரசு மற்றும் தமிழக மீனவர் சங்க பிரதிநிதிகள், இலங்கை மீனவர் சங்க பிரதிநிதிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.அதன் தொடர்ச்சியாக கடந்த 5-ந்தேதி டெல்லியில் இருநாட்டு மந்திரிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் மத்திய மந்திரிகள் சுஷ்மாசுவராஜ், ராதா மோகன்சிங், பொன்.ராதாகிருஷ்ணன், இலங்கை மந்திரிகள் மங்கள சமரவீரா, மகிந்தா சமரவீரா, இலங்கை எம்.பி. சுமந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.இந்த பேச்சுவார்த்தையில் பல முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக இரு நாட்டு மந்திரிகளும் 6 மாதங்களுக்கு ஒரு முறை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவது, கடலில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் கூட்டு நடவடிக்கை குழு ஒன்றை அமைப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.கைது செய்யப்பட்ட மீனவர்கள் மீது எந்த வகையான தாக்குதலையும் மேற்கொள்ளக் கூடாது என்றும் அவர்கள் உயிருக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.இதையடுத்து தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு இனி விடிவு காலம் பிறக் கும் என்று எதிர்பார்க்கப்பட் டது. இது நீண்ட கால பிரச்சினைக்கு தீர்வாக அமையும் என்றும் கருதப்பட்டது.ஆனால் இந்தியா வைத்த சில கோரிக்கைகளை ஏற்க இலங்கை அரசு மறுத்து விட்டது.

மன்னார் வளைகுடாவிலும், பாக் ஜலசந்தி பகுதியிலும் தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதை படிப்படியாக நிறுத்துவதற்கு 3 ஆண்டுகள் அவகாசம் அளிக்குமாறு இந்தியா வேண்டுகோள் விடுத்தது. இந்தியாவின் இந்த கோரிக்கையை இலங்கை அரசு நிராகரித்து விட்டது.

மேலும் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்குமாறும், இலங்கை கடல் பகுதியில் தமிழக மீனவர்கள் 80 நாட்களுக்கு மீன்பிடிக்க அனுமதிக்குமாறும் இந்தியா வேண்டுகோள் வைத்தது. அதையும் நிராகரித்த இலங்கை அரசு தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்த படகுகளை திருப்பித் தர மறுத்து விட்டது.மத்திய மந்திரிகளுடன் விவாதிக்கும்போது இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண இயலவில்லை என்று இலங்கை மந்திரி மகிந்த சமரவீரா தெரிவித்துள்ளார்.பேச்சுவார்த்தைக்கு பிறகு இலங்கை எம்.பி. சுமந்திரன் கூறுகையில், “இலங்கை கடற்பகுதியில் சுமார் 1000 தமிழக மீன்பிடி படகுகள் இயங்குகின்றன. இது மீன்வளத்தை பாதிக்கும் செயல்” என்றார்பேச்சுவார்த்தையின் மூலம் இருதரப்பு மீனவர்களுக்கும் இடையே உள்ள முட்டுக்கட்டையை முழுமையாக நீக்க இலங்கை தரப்பு மந்திரிகள் தவறி இருப்பது இதன்மூலம் தெளிவாகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்