முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீகாரைபோல தமிழ்நாட்டிலும் பா.ஜ.வுக்கு ரூ.120 கோடி சொத்து: திருநாவுக்கரசர்

திங்கட்கிழமை, 28 நவம்பர் 2016      அரசியல்
Image Unavailable

சென்னை, பீகாரைபோல தமிழ்நாட்டிலும் ஆள் இல்லாத பா.ஜனதாவுக்கு ரூ.120 கோடி  சொத்திருப்பதாக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் குற்றம்சாட்டி உள்ளார்.

மத்திய அரசுக்கு எதிராக சென்னையில் நேற்று நடந்த காங்கிரஸ் ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் திருநாவுக்கரசர் பேசியதாவது:-

ஒரு வாரத்திற்குள் மக்களுக்காக 2 போராட்டங்களை காங்கிரஸ் நடத்தி உள்ளது. மக்களுக்கு தொல்லை தரக்கூடாது என்பதற்காகதான் பந்த் நடத்தாமல் ஆர்ப்பாட்டம் நடத்தும்படி ராகுல்காந்தி அறிவித்தார். சில இடங்களில் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து போராடுகிறோம். சில இடங்களில் தனித்து போராடுகிறோம். தி.மு.க.வும் தனித்து போராடுகிறது. காங்கிரசும் தனித்து போராடுகிறோம்.அந்தந்த இடங்களில் சூழ்நிலைக்கு ஏற்ப போராட்டம் நடைபெறுகிறது. சம்பள தேதி நெருங்குகிறது. எவ்வாறு சம்பளத்தை பட்டுவாடா செய்ய போகிறார்கள் என்பது தெரியவில்லை. ஏ.டி.எம். வங்கிகள் மூடி கிடக்கின்றன.

மோடி 500, 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவிக்கும் முன்பே பீகாரில் பா.ஜனதாவினர் சொத்துக்களை வாங்கி குவித்து உள்ளனர். தமிழ்நாட்டில் பா.ஜனதா என்ற கட்சியே கிடையாது. அந்த கட்சிக்கு ஆட்களும் கிடையாது. ஆனால் ஒவ்வொரு மாவட்டத்திலும் ரூ.2 கோடி வீதம் அனைத்து மாவட்டங்களிலும் 120 கோடி செலவில் இடம் வாங்கி அலுவலகம் கட்ட முடிவு செய்துள்ளார்கள். கட்சியே இல்லாத தமிழ்நாட்டில் இவ்வளவு நடக்கிறது என்றால் இந்தியா முழுவதும் எந்த அளவுக்கு பணத்தை முதலீடு செய்திருப்பார்கள். அந்த பணம் அவர்களுக்கு எங்கிருந்து வந்தது என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.கோடீஸ்வரர்கள் யாரும் பணத்திற்காக ரோட்டிற்கு வரவில்லை.

சாதாரண மக்கள்தான் பணம் கிடைக்காமல் போராடுகிறார்கள். மக்களின் போராட்டம் நியாயமானது என்று அவர்களின் கூட்டணி கட்சியான சிவசேனா கூட கண்டித்து உள்ளது. மோடியின் விவேகம் அற்ற, அர்த்தம் அற்ற, திட்டமிடாத இந்த நடவடிக்கையை நாட்டு மக்கள் அனைவரும் கண்டிக்கிறார்கள். ஆனால் மோடியோ இன்றும் 50 நாட்கள் பொருத்திருங்கள் என்கிறார்.

எந்த தேதியில் இருந்து 50 நாட்கள் கணக்கிடுவது? இந்த நிலைமை சீரடைய 7 மாதங்களுக்கு மேல் ஆகும் என்று முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் கூறி இருக்கிறார். இதற்கு மோடியின் பதில் என்ன? எல்லோரும் செல்போன் மூலம் பண பரிவர்த்தனை செய்யுங்கள் என்கிறார்.எனக்கே செல்போனில் எல்லா வசதிகளையும் கையாள தெரியாது. கிராமத்து பெண்கள் இந்த வசதிகளை கற்றுக் கொள்ள இன்னும் பல ஆண்டுகள் ஆகலாம். எடுத்த எடுப்பிலேயே மாற்றத்தை கொண்டு வந்திட முடியாது.

இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்