முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அந்தமான் அருகே மேலடுக்கு சுழற்சி: வங்கக்கடலில் புதிய புயல் உருவாகுகிறது தமிழகத்தில் பலத்த மழை பெய்யும்

சனிக்கிழமை, 3 டிசம்பர் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை  - அந்தமான் அருகே வங்கக்கடலில், மேலடுக்கு சுழற்சி காரணமாக புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு உள்ளதாகவும், இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

புயலாக உருவாகிறது: தமிழகத்தில் உள்பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை, மேற்குநோக்கி நகர்ந்து லட்சத்தீவு அருகே மையம் கொண்டுள்ளது. இதனிடையே, அந்தமான் மற்றும் சுமத்ரா தீவு அருகே ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி அடுத்த 24 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி, இது அடுத்த 48 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும், அது புயலாக உருமாறுமா என தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர்   ஸ்டெல்லா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில பகுதிகளில் மழை பெய்யும் என்றும், நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் தெரிவித்துள்ளார். சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் விருதுநகரில் 8 சென்டி மீட்டரும், மதுரை, சென்னை விமான நிலையம், சிவகாசி, காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் தலா 7 சென்டி மீட்டரும், செம்பரம்பாக்கம், பூந்தமல்லி ஆகிய இடங்களில் தலா 6 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே நேற்று மதுரை, திருச்சி, குமரி உள்ளிட்ட பல மாவட்டங்களில்  மழை பெய்தது. அதே நேரம் இரவு நேரங்களில் குளிர்ந்த காற்று மக்களை வாட்டி வதைத்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்