முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருப்பு பண ஒழிப்பல்ல இது: ராமதாஸ் கடும் கண்டனம்

ஞாயிற்றுக்கிழமை, 4 டிசம்பர் 2016      அரசியல்
Image Unavailable

சென்னை: 500 மற்றும் 1000 ரூபாய் செல்லாது என்ற மத்திய அரசின் நடவடிக்கையால் ஏழை எளிய மக்களின் வாழ்க்கையில் சூறாவளி உருவாகியுள்ளது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்ற மாதம் 8ம் தேதி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. இதன் பிறகு, கருப்புப் பணம் ஒழிந்ததோ இல்லையோ, பழைய நோட்டை மாற்றுவதற்காக சென்று சுமார் 80 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் அன்றாட செலவிற்கு கூட பணம் இல்லாமல் திண்டாடி வருகின்றனர்.இந்நிலையில், கருப்புப்பணத்தை மீட்பதற்காக ஒட்டுமொத்த ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய சூறாவளியை ஏற்படுத்தியது என்று ராமதாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஏமாற்றம்தான் மிச்சம் :

இந்தியாவில் ரூ.1000, ரூ.500 தாள்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டிருப்பதால் பெருமளவில் கருப்புப்பணம் சிக்கும் என்றும், அதனால் ஏழை மக்களின் வாழ்க்கையே தலைகீழாக மாறும் என்றும் மத்திய அரசு பரப்புரை செய்து வருகிறது. இது உண்மை என பல்வேறு தரப்பினரும், பொதுமக்களும் நம்பிய நிலையில், இதுதொடர்பாக வெளியாகும் செய்திகள் பெரும் ஏமாற்றம் அளிப்பவையாக உள்ளன
கருப்புப்பண ஒழிப்பு நடவடிக்கைகளால் ரூ.3 லட்சம் கோடி முதல் ரூ.5 லட்சம் கோடி வரை கருப்புப் பணம் பிடிபடும் என்பது தான் மத்திய அரசின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால், களநிலைமை முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரங்களை மேற்கோள்காட்டி, ஐ.ஏ.என்.எஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி உண்மை நிலையை உணர்த்துவதாக உள்ளது. கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கைகளை கடந்த நவம்பர் 8-ஆம் தேதி அறிவித்த போது, இந்திய ரிசர்வ் வங்கியிடம் கையிருப்பாக இருந்த ரொக்கத்தின் மதிப்பு ரூ.4,06,966 கோடி ஆகும்.
இதுதவிர அன்றாட பரிமாற்றத்திற்காக நவம்பர் 8-ஆம் தேதி வங்கிகளிடம் இருந்த தொகை ரூ.70,000 கோடி ஆகும். இதில் ரூ.500, ரூ.1000 தாள்களின் மதிப்பு மட்டும் ரூ.50,000 கோடி இருக்கலாம். ஆக மொத்தம் ரூபாய் தாள்கள் செல்லாது அறிவிப்பு வெளியிடுவதற்கு முன் வங்கிகள் மற்றும் ரிசர்வ் வங்கியிடம் இருந்த தொகை ரூ.4.57 லட்சம் கோடி ஆகும். அதன்பின்னர் நவம்பர் 28-ஆம் தேதி வரை வங்கிகளில் திருப்பிச் செலுத்தப்பட்ட பழைய தாள்களின் மதிப்பு ரூ. 8.44 லட்சம் கோடியாகும்.

வங்கிக்கு திரும்பிய 13.50 லட்சம் கோடி :

அதாவது நவம்பர் 28-ஆம் தேதி வரை புழக்கத்திலிருந்து எடுக்கப்பட்ட பழைய தாள்களின் மதிப்பு ரூ.13 லட்சம் கோடி என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்பிறகு கடந்த ஒரு வாரத்தில் வங்கியில் திருப்பிச் செலுத்தப்பட்ட பழைய ரூபாய் தாள்களின் மதிப்பு ரூ.50,000 கோடி என வைத்துக் கொண்டால் ஒட்டுமொத்தமாக திரும்பப்பெறப்பட்ட பழைய ரூபாய் தாள்களின் மதிப்பு ரூ.13.50 லட்சம் கோடி ஆகும்

வரவேண்டிய நோட்டு எவ்வளவு :

இந்திய ரிசர்வ் வங்கியால் ஒட்டுமொத்தமாக புழக்கத்தில் விடப்பட்ட அதிக மதிப்பு கொண்ட ரூபாய் தாள்களின் மதிப்பு ரூ.15.44 லட்சம் கோடி என்று கடந்த 29ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நிதித்துறை இணையமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால் தெரிவித்திருக்கிறார். அதன்படி பார்த்தால் வங்கி வளையத்திற்கு வெளியில் உள்ள பழைய தாள்களின் மதிப்பு ரூ.1.94 லட்சம் கோடி தான். இம்மாத இறுதிவரை வங்கிகளிலும், மார்ச் இறுதிவரை ரிசர்வ் வங்கியிலும் பழைய தாள்களை மாற்ற அவகாசம் இருப்பதால் மேலும் 94 ஆயிரம் கோடி பணம் திரும்பப்பெறப்படுவதற்கு வாய்ப்புள்ளது

சப்பை கட்டும் அருண் ஜெட்லி :

அதற்குப் பிறகு வெளியில் இருக்கும் பழைய தாள்களின் மதிப்பு ரூ. 1 லட்சம் கோடி மட்டுமே. இந்தியப் பொருளாதாரத்துடன் ஒப்பிடும்போது இது ஒரு பெரிய தொகையல்ல. தானாக முன்வந்து வருமானத்தை தெரிவிக்கும் திட்டத்தின் கீழ் எந்த சிரமும் இன்றி ரூ.65,000 கோடி கருப்புப் பணம் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அதைவிட சற்று அதிக கருப்புப்பணத்தை மீட்பதற்காக ஒட்டுமொத்த ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய சூறாவளியை ஏற்படுத்தியது தேவையா? என்பதை மத்திய அரசு சிந்தித்து பார்க்க வேண்டும். ரூபாய் தாள் செல்லாது அறிவிப்பு வெளியிடப்பட்ட பிறகு ஏற்பட்ட வணிகம் மற்றும் உற்பத்தி இழப்புடன் ஒப்பிட்டு பார்க்கும்போது இது மிகவும் குறைந்த தொகையாகும். இதை மூடிமறைப்பதற்குத் தான் வங்கியில் போடப்பட்ட பணம் எல்லாம் வெள்ளையல்ல என்று மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி சப்பைக்கட்டு கட்டி வருகிறார் என்பதை உணரமுடிகிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்