முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொங்கல் பொங்கட்டும், தமிழர்களின் வாழ்வில் என்றென்றும் மகிழ்ச்சி தங்கட்டும் : அ.தி.மு.க பொதுச்செயலாளர் சசிகலா வாழ்த்து

வெள்ளிக்கிழமை, 13 ஜனவரி 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை  - பொங்கல் பொங்கட்டும் தமிழர்களின் வாழ்வில் என்றென்றும் மகிழ்ச்சி தங்கட்டும் அதைக்கண்டு இந்த நாடே மகிழட்டும் என்று அ.தி.மு.க. பொதுசெயலாளர் சசிகலா வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அ.தி.மு.க பொதுசெயலாளர் சசிகலா வெளியிட்ட பொங்கல் வாழ்த்து செய்தி வருமாறு:-

பொங்கல் வாழ்த்து
உலகத் தமிழர்கள் அனைவரும் எழுச்சியுடனும், உற்சாகத்துடனும், உவகையுடனும் கொண்டாடி மகிழும் பொங்கல் திருநாளில், அனைவருக்கும் எனது உளமார்ந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜாதி, வேறுபாடுகளைக் களைந்து சமத்துவமும், சகோதரத்துவமும் நிறைந்து நின்று பொங்கும் மகிழ்ச்சியை வெளிக்காட்டும் விதத்தில், புதுநெல்லு, புதுப்பானை, கரும்பு, மஞ்சள், வாழை என விளைந்த பொருட்களை வைத்து ``பொங்கலோ பொங்கல்'' என்று மகிழ்ச்சிக் குரலிட்டு இறைவனையும், இயற்கையையும் வணங்கி கொண்டாடும் திருநாள் பொங்கல் பண்டிகை என்னும்

நன்நாள் ஆகும்.
சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் அதனால
உழந்தும் உழவே தலை
- எனும் வள்ளுவப் பேராசானின் குறள் மொழிக்கேற்ப, உலகில் வாழும் மக்கள் எண்ணற்ற தொழில்கள் பல செய்து வந்த போதும், உழவுத் தொழில் தான் முதன்மையானதாகவும், சிறப்பு வாய்ந்ததாகவும் போற்றப்படுகிறது.

உழவர்களுக்கு திட்டம்
இத்தகைய பெருமைக்கும், புகழுக்கும் உரிய உழவர் பெருமக்களின் நலனை பேணிக் காத்திடவும், உழவர்களின் பெருவாழ்வு மனமகிழ்ச்சியையும், அவர்தம் வாழ்க்கை சிறந்திடவும், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அரசு பல்வேறு சீரிய திட்டங்களைத் தீட்டி விவசாயப் பெருமக்களைக் காத்து வருகிறது.

பொங்கல் பரிசு தொகுப்பு
பொங்கல் பண்டிகையை, தமிழக மக்கள் அனைவரும் இன்புற்று கொண்டாடி மகிழ, இன்முகம் என்றும் பூத்துக் குலுங்கிட, ஜெயலலிதாவின் அரசு பொங்கல் பரிசு தொகுப்பினை தமிழக மக்களுக்கு வழங்கி சிறப்பித்துள்ளது என்பதை மகிழ்ச்சியோடு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். பொங்கல் பொங்கட்டும் தமிழர்களின் வாழ்வில் என்றென்றும் மகிழ்ச்சி தங்கட்டும் அதைக் கண்டு இந்த நாடே மகிழட்டும்என்று மனமார வாழ்த்தி, என் அன்பிற்கினிய தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை உரித்தாக்கி மகிழ்கின்றேன்.
இவ்வாறு அந்த வாழ்த்துச்செய்தியில் சசிகலா தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்