முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மநாதபுரம் மாவட்டத்தில்

செவ்வாய்க்கிழமை, 24 ஜனவரி 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய கண்காணிப்பு குழு அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

     ராமநாதபுரம் மாவட்டத்திற்கு  வருகை தந்துள்ள மத்திய கண்காணிப்பு குழு அலுவலர்களான மத்திய ஊரக வளர்ச்சித்துறை துணை செயலாளர் எஸ்.பி.திவாரி, மத்திய நீர்வளத்துறை இயக்குநர் ஆர்.அழகேசன் ஆகியோர், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வறட்சியின் காரணமாக ஏற்பட்டுள்ள பயிர் பாதிப்புகள் குறித்து நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து விவசாயிகளிடத்தில் பாதிப்பு குறித்த விவரங்களை கேட்டறிந்தார்கள். தமிழ்நாடு அரசு வேளாண்மைத்துறை இயக்குநர் வி.தட்ஷிணாமூர்த்தி அவர்கள் மற்றும் மாவட்ட கலெக்டர் முனைவர் ச.நடராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

மத்திய கண்காணிப்பு குழு அலுவலர்கள் முதலாவதாக ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி ஊராட்சி ஒன்றியம், கடுகுசந்தை கிராமத்தில் விவசாயிகளின் மூலம் பயிரிடப்பட்டு  வறட்சியின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள கம்பு பயிர்களையும், கடலாடி ஊராட்சி ஒன்றியம், கடுகுசந்தை சத்திரம் கிராமத்தில் விவசாயிகளின் மூலம் பயிரிடப்பட்டு வறட்சியின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நிலக்கடலை பயிர்களையும், கீழச்செல்வனூர், கீழக்கிடாரம் ஆகிய கிராமங்களில் விவசாயிகளின் மூலம் பயிரிடப்பட்டு  வறட்சியின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நெற் பயிர்களையும், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம், பனையடியேந்தல் கிராமத்தில் விவசாயிகளின் மூலம் பயிரிடப்பட்டு  வறட்சியின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மிளகாய் பயிர்களையும், நல்லான்குடி கிராமத்தில் விவசாயிகளின் மூலம் பயிரிடப்பட்டு  வறட்சியின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிர்களையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து விவசாயிகளிடத்தில் பயிர் பாதிப்பு குறித்த விவரங்களை நேரடியாக கேட்டறிந்தார்கள்.

அதன்பின்பு மத்திய நீர்வளத்துறை இயக்குநர் ஆர்.அழகேசன் செய்தியாளர்களிடத்தில் தெரிவித்ததாவது:- தமிழகத்தில் பெரும்பான்மையான பகுதிகளில்  போதிய அளவு வடகிழக்கு பருவமழை பெய்யாத காரணத்தினால் வறட்சி ஏற்பட்டு விவசாயிகள் மூலம் பயிரிடப்பட்டுள்ள பல்வேறு வகையான பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பயிர்பாதிப்பு குறித்த விவரங்களை நேரடியாக கள ஆய்வு செய்து விவசாயிகளுக்கு உரிய வறட்சி நிவாரணத் தொகை வழங்கிட ஏதுவாக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நேரடியாகச் சென்று ஆய்வு செய்திட 4 மத்திய கண்காணிப்பு குழுக்களின் கீழ்  மொத்தம் 10 மத்திய கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்தவகையில் நேற்றைய தினம் விருதுநகர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களிலும், இன்றைய தினம் தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களிலும், தொடர்ச்சியாக 25.01.2017 அன்று புதுக்கோட்டை மாவட்டத்திலும் எங்கள் தலைமையிலான மத்திய கண்காணிப்பு குழு பயிர் பாதிப்பு குறித்த விவரங்களை ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. 

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளின் மூலம் மொத்தம் 1லட்சத்து 22ஆயிரத்து 32 ஹெக்டேர் பரப்பளவில் நெற்பயிர்களும், 5ஆயிரத்து 571 எக்டேர் பரப்பளவில் சிறுதானியங்களும், 4ஆயிரத்து 113  எக்டேர் பரப்பளவில் பயிர் வகைகளும், 15ஆயிரத்து 22 எக்டேர் பரப்பளவில் மிளகாய் பயிர்களும், 3 ஆயிரத்து 655  ஹெக்டேர் பரப்பளவில் எண்ணெய்வித்து பயிர்களும், ஆயிரத்து 568 ஹெக்டேர் பரப்பளவில் கொத்தமல்லி உள்பட பருத்தி, கத்தரி, வெங்காயம் என மொத்தம் 1லட்சத்து 53ஆயிரத்து 397 எக்டேர் பரப்பளவில் பல்வேறு பயிர்கள்  பயிரிடப்பட்டுள்ளன.

ராமநாதபுரம் மாவட்டத்தில் வறட்சி நிவாரணத்திற்காக இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள கள ஆய்வுகளின் அடிப்படையில்  1லட்சத்து 21ஆயிரத்து 790 எக்டேர் பரப்பளவிலான நெற்பயிர்களும், 14ஆயிரத்து 421 எக்டேர் பரப்பளவிலான மிளகாய் பயிர்களும், 5ஆயிரத்து 496 எக்டேர் பரப்பளவிலான சிறுதானியப் பயிர்களும், 4ஆயிரத்து 79 எக்டேர் பரப்பளவிலான பயிர்வகைகளும், 3ஆயிரத்து 348 எக்டேர் பரப்பளவிலான எண்ணெய்வித்து பயிர்களும், ஆயிரத்து 506 ஹெக்டேர் பரப்பளவிலான கொத்தமல்லி உள்பட  பருத்தி, கத்தரி, வெங்காயம் என மொத்தம் 1லட்சத்து 50ஆயிரத்து 879 எக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள பல்வேறு பயிர்கள் வறட்சியின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன. இது பயிரிடப்பட்டுள்ள மொத்த  பரப்பளவில் 98சதவீதம் ஆகும்.  நடப்பு ஆண்டில் பிரதம மந்திரியின் புதிய பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இதுவரை 1,10,626 ஹெக்டேர் பரப்பில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்களுக்கு 1,15,312 விவசாயிகளின் மூலமாகவும், 6,756 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டள்ள மிளகாய் பயிர்களுக்கு 8,507 விவசாயிகளின் மூலமாகவும் பயிர்க்காப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இத்தகைய சூழ்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில்  பயிர் பாதிப்பு குறித்த அனைத்து விவரங்களும் எங்களது மத்திய குழுவின் தலைமைக்கு அறிக்கையாக சமர்பிக்கப்பட்டு அதனடிப்படையில் மதிப்பீடு செய்து  விவசாயிகளின் நலனுக்காக விரைவில் வறட்சி நிவாரணம் மற்றும் பயிர் காப்பீடு இழப்பீட்டுத் தொகை பெற்றிடும் விதமாக அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். இவ்வாறு தெரிவித்தார். இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் மு.அலி அக்பர், பரமக்குடி சார் ஆட்சியர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன்,வேளாண்மைத்துறை இணை இயக்குநர் ஆர்.அரிவாசன், கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் தி.மோகன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வி.எஸ்.வெள்ளைச்சாமி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ.அண்ணாதுரை, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் தமிழ்வேந்தன் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்