முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தலுக்கான பா.ஜ.க. தேர்தல் அறிக்கை வெளியீடு : அம்த் ஷா வெளியிட்டார்

சனிக்கிழமை, 28 ஜனவரி 2017      அரசியல்
Image Unavailable

லக்னோ  - உத்தரப்பிரதேச மாநில சட்டசபை தேர்தலுக்கான பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை, அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா லக்னோவில் நேற்று வெளியிட்டார்.

பா.ஜ.க தனித்துப் போட்டி
நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேச மாநிலத்தின் சட்டசபை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது.  மத்தியில் ஆளும் பா.ஜ.க. உத்தரப்பிரதேசத்தில் உள்ள  403 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது.  இந்நிலையில், பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையை ”லோக் கல்யான் சங்கல்ப் பத்ரா” (மக்கள் நல்வாழ்வுக்கான உறுதிமொழி) என்ற பெயரில் பா.ஜ.க தேசியத்தலைவர் அமித் ஷா , லக்னோவில் நேற்று வெளியிட்டார்.

9 பிரிவாக தேர்தல் அறிக்கை
அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில், ஒட்டு மொத்த மாநில வளர்ச்சியை கருத்தில் கொண்டு 9 பிரிவாக தேர்தல் அறிக்கை பிரிக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க.வின் முதல் கட்ட தேர்தல் அறிக்கையில், 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இலவசமாக கல்வி, பள்ளியில் சிறப்பாக பயிலும் மாணவர்களுக்கு கல்லூரிக் கட்டணத்தில் சலுகை, மாநிலத்தின் கனிம வளத்தை கொள்ளையடிக்கும் கும்பலை பிடிக்க தனிப்படை, மூன்றாம் மற்றும் நான்காம் நிலை அரசு பணிகளுக்கான தேர்வில் நேர்முகத் தேர்வு ரத்து ஆகிய அதிரடி அறிவிப்புகள் உள்ளன.

அமித் ஷா குற்றச்சாட்டு
தேர்தல் அறிக்கையை வெளியிட்டுப் பேசிய அமித் ஷா, “உத்தரப்பிரதேசத்தை தவிர, பீகார், மத்தியப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய பெரிய மாநிலங்கள் முன்னேற்றம் அடைந்துள்ளன. உ.பி. முன்னேறவில்லை. உத்தரப்பிரதேச வளர்ச்சிக்காக மத்திய அரசு ஒரு லட்சம் கோடியை ஒதுக்கியது. ஆனால் மாநிலத்தில் எதுவும் நடக்க வில்லை” என குற்றம் சாட்டினார்.

பா.ஜ.க. தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்
1) உத்தர பிரதேசத்தில் 90 சதவீத வேலைவாய்ப்புகள் உள்ளூர் இளைஞர்களுக்கு வழங்கப்படும்.
2) தகுதிமிக்க மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் வழங்குவதற்காக ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
3) சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும்.
4) கரும்பு விவசாயிகளுக்கு 120 நாட்களுக்குள் அனைத்து நிலுவைத்தொகையும் பட்டுவாடா செய்யப்படும்.
5) உணவு பதப்படுத்துதல் பூங்கா அமைக்கப்படும்.
6) 24 மணி நேரமும் மின்சாரம் வழங்கப்படும், ஏழைகளுக்கு குறைந்த கட்டணம் நிர்ணயிக்கப்படும்.
7) பெண் குழந்தைகள் மற்றும் மாணவிகளின் பாதுகாப்புக்கு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
8) மாணவர்களுக்கு எந்த பாரபட்சமும் இன்றி லேப்டாப்கள் வழங்கப்படுவதுடன், மாதம் 1ஜிபி டேட்டாவும் இலவசமாக வழங்கப்படும்.
9) ஏழைக் குடும்பங்களில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ரூ.5000 ஆயிரம் வழங்கப்படும். விதவை பென்சன் பெறுவதற்கு வயது வரம்பு ஏதும் இருக்காது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்