பன்னீர்செல்வம் -சசிகலா இருவருக்கும் ஆதரவில்லை ஆலோசனைக்கு பின் ராகுல் காந்தி முடிவு

சனிக்கிழமை, 11 பெப்ரவரி 2017      அரசியல்
Rahul 2016 12 18

 சென்னை  - தமிழக அரசியலில் இது வரை எந்த தெளிவும் ஏற்படவில்லை. எனவே தற்போது ஒ.பன்னீர் செல்வம், சசிகலா இருவரையும் ஆதரிக்க வேண்டாம். சூழ்நிலைக்கேற்ப பிறகு முடிவு செய்வோம்’’ என  ராகுல் காந்தி கூறியுள்ளார்.

ராகுல் டெல்லியில் ஆலோசனை :
தமிழக அரசியல் நிலவரம் குறித்து காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் நேற்று தமிழக காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். காலை 9 முதல் 11 மணி வரை 2 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர், முன்னாள் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், சுதர்சன நாச்சியப்பன், சட்டப் பேரவை காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி, முன்னாள் மாநிலத் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், கே.வீ.தங்கபாலு, எம்.கிருஷ்ணசாமி, குமரிஅனந்தன், அகில இந்திய செயலாளர்கள் ஜெயக்குமார், செல்லக்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

தலைவர்கள் விளக்கம் :
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழகத்தில் நடந்து வரும் அரசியல் மாற்றங்கள், அதிமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டது, அதை எதிர்த்து முதல்வர் பன்னீர் செல்வம் போர்க்கொடி தூக்கியிருப்பது, அதனால் ஏற்பட்டுள்ள சூழ்நிலை குறித்து ஒவ்வொருவரிடமும் ராகுல் காந்தி விளக்கமாக கேட்டுள்ளார்.

மாநில தலைவர் திருநாவுக்கரசர் :
அப்போது பேசிய திருநாவுக்கரசர், ‘‘அருணாச்சலப் பிரதேசத்தில் முதல்வர் உள்ளிட்ட அனைத்து எம்.எல்.ஏ.க்களையும் கூண்டோடு கட்சி மாற்றி அங்கு பாஜக ஆட்சி அமைத்தது. இது போல தமிழகத்திலும் பின்வாசல் வழியாக ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற பாஜக திட்டமிடுகிறது. அதனை முறியடிக்கும் வகையில் நமது செயல்பாடுகள் அமைய வேண்டும். சசிகலா முதல்வர் ஆவதை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது. எனவே, சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும்போது சசி கலாவுக்கு ஆதரவாக காங்கிரஸின் 8 எம்.எல்.ஏ.க்களும் ஆதரவளிக்க வேண்டும்’’ என கூட்டத்தில் தெரிவித்தனர்.

சிதம்பரம், ஈ.வி.கே .எஸ் மறுப்பு :
திருநாவுக்கரசரை தொடர்ந்து சசிகலாவை ஆதரிக்க வேண்டும் என சுதர்சன நாச்சியப்பனும் வலியுறுத்தியுள்ளார். இதற்கு ப.சிதம்பரம், இளங்கோவன், ராம சாமி உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரி வித்துள்ளனர். ‘‘மக்கள் ஆதரவு இல்லாதவர்களை ஆதரித்தால் காங்கிரஸ் செல்வாக்கு இழக்க நேரிடும்’’ என்று சிதம்பரம் கூறியுள்ளார். திருநாவுக்கரசருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த இளங்கோவன், ‘‘சசிகலாவை காங்கிரஸ் ஒரு போதும் ஆதரிக்கக் கூடாது. நாம் இப்போது திமுக கூட்டணியில் இருக்கிறோம். சசிகலாவை ஆதரித் தால் இருப்பதையும் இழக்க வேண் டியிருக்கும்’’ எனக் கூறியுள்ளார். இரு தரப்பினரையும் அமைதிப் படுத்தி இறுதியாக பேசிய ராகுல் காந்தி, ‘‘தமிழக அரசியலில் இது வரை எந்த தெளிவும் ஏற்படவில்லை. எனவே, தற்போது ஓபிஎஸ், சசிகலா இருவரையும் ஆதரிக்க வேண்டாம். சூழ்நிலைக்கேற்ப பிறகு முடிவு செய்வோம்’’ என கூறியுள்ளார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: