முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பருவகாலங்களில் ஏற்படும் காய்ச்சல் கட்டுப்பாட்டில் உள்ளது: அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் ஆய்வு

செவ்வாய்க்கிழமை, 21 பெப்ரவரி 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஜெயலலிதாவின் அரசு எடுத்த நடவடிக்கைகளினால் பருவக்காலங்களில் ஏற்படும் காய்ச்சல்கள் கட்டுப்பாட்டில் உள்ளது; தேவையான மருந்து மாத்திரைகள், முக கவசங்களும் கையிருப்பில் உள்ளது என்று திட்டப்பணிகளை ஆய்வு செய்த மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் கூறினார்.

ஜெயலலிதாவின் அரசு, பருவக்காலங்களில் ஏற்படும் காய்ச்சல் மற்றும் தொற்று நோய்களை கட்டுப்படுத்த பல்வேறு தீவிர நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. பன்றிக்காய்ச்சல் பருவக்காலங்களில் ஏற்படும் ஒரு விதமான காய்ச்சல் ஆகும். எனவே, மக்கள் பதற்றமோ, பீதியோ அடையத்தேவையில்லை என்று வேலூர் மாவட்டத்தில் நேற்று (21–ந்தேதி) நடைபெற்ற ஆய்விற்கு பிறகு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார். இவ்வாய்வில் வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் கே.சி. வீரமணி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர் நிலோபர் கபில் ஆகியோர் கலந்து கொண்டனர்.

காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் வகையில் மாவட்டம் தோறும் மக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து, ரெயில் நிலையங்கள், வழிபாட்டுத் தளங்கள், சந்தைகள், அனைத்து மருத்துவக் கல்லூரிகள், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள், வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகிய இடங்களில் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. மேலும் போதிய அளவு மருந்து, மாத்திரைகள், தடுப்பூசிகள், பாதுகாப்பு கவசங்கள் இருப்பில் உள்ளது என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

காய்ச்சல், சளி மற்றும் தொண்டை வலி போன்ற அறிகுறிகள் தென்பட்டவுடன் தாங்களாகவே மருந்துகளை எடுத்துக்கொள்ளாமல் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனையையோ அல்லது உரிய மருத்துவரையோ அனுகி முறையான சிகிச்சை பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. மேலும் தனியார் மருத்துவர்கள் பன்றிக்காய்ச்சல் நோய் என சந்தேகிக்கப்படும் நபர்களுக்கு சிகிச்சை வழங்கும்போது உரிய வழிகாட்டுதலில் தெரிவித்துள்ளவாறு மட்டுமே பரிசோதனை மற்றும் சிகிச்சை மேற்கொள்ளபடவேண்டும் என அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்தார்.
சிகிச்சையினை எக்காரணம் கொண்டும் தாமதிக்கக்கூடாது எனவும், பன்றிக்காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டவுடன் டாமிபுளு மாத்திரைகள் மருத்துவர் அறிவுரைப்படி உட்கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் அறிவுறித்தினார். தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தேவையான டாமிபுளூ மாத்திரைகள் அந்தந்த மாவட்ட பொது சுகாதாரத் துறை துணை இயக்குநர் மூலம் இலவசமாக வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பன்றிக்காய்ச்சல் நோய் பரவுவதை தவிர்க்க தும்பும்போதும் மற்றும் இரும்பும்போதும் மூக்கு மற்றும் வாயினை கைக்குட்டை கொண்டு மூடுதல், கைகளை சுத்தமாக சோப்பு போட்டு நன்கு கழுவுதல் போன்ற சுகாதாரமான பழக்க வழக்கங்களை கடைபிடிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழகத்தில் 13,81,508 டாமிபுளு மாத்திரைகள், 21,567 டாமிபுளு சிரப், 60,461 மருத்துவ பாதுகாப்பு கவசங்கள், 33,819 என் 95 பாதுகாப்பு முக கவசங்கள் மற்றும் 11,72,990 மூன்று அடுக்கு முக கவசங்களும் கையிருப்பில் உள்ளன. இக்கூட்டத்தில் மீசல்ஸ் ரூபல்லா தடுப்பூசி குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் இதுவரை 60 லட்சம் குழந்தைகளுக்கு மீசல்ஸ் ரூபல்லா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மீதமுள்ள காலத்தில் இலக்கினை எட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

ஜெயலலிதாவின் அரசு பன்றிக்காய்ச்சல் நோய் கட்டுப்படுத்த தேவையான அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொண்டு வருகிறது. பொது மக்கள் காய்ச்சல் குறித்து 24 மணிநேரமும் மருத்துவ ஆலோசனைகள் பெறும் வகையில் தகவல் மையம் (தொலைப்பேசி எண் 044 – 24350496 , 24334811 , 9444340496, 9361482899) ஏற்படுத்தப்பட்டுள்ளது மேலும் தகவல்கள் பெற 104″ சேவையையும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.இவ்வாய்விற்கு முன்பாக மக்கள் கூடும் இடங்களில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்குவதை அமைச்சர்கள் விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி, நிலோபர் கபில் பார்வையிட்டனர்.

செவிலிய பயிற்சி மாணவர்களின் கைகளை கழுவும் செயல் முறை விளக்கத்தினை தொடங்கி வைத்து, தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழக கிடங்கில் மருந்துகளின் இருப்பையும் மற்றும் வேலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளையும் அமைச்சர்கள் பார்வையிட்டனர்.இவ்வாய்வின்போது சட்டமன்ற உறுப்பினர்கள் சோளிங்கர் என்.ஜி. பார்த்திபன், அரக்கோணம் சு. ரவி, கே.வி.குப்பம் ஜி. லோகநாதன், குடியாத்தம் ஜெயந்தி பத்மநாபன், ஆம்பூர் ஆர். பாலசுப்பிரமணியன், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், வேலூர் மாவட்ட ஆட்சியர் சி.அ. ராமன், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் டாக்டர் க.குழந்தைசாமி மற்றும் மருத்துவத் துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்