முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி.யில் 5-வது கட்ட தேர்தல் பிரசாரம் முடிந்தது: நாளை வாக்குப்பதிவு

சனிக்கிழமை, 25 பெப்ரவரி 2017      இந்தியா
Image Unavailable

அமெதி  - உத்தரப்பிரதேச மாநிலத்தில் 5-வது கட்ட தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. நாளை வாக்குப்பதிவு நடக்கிறது.  நாட்டிலேயே உத்தரப்பிரதேச மாநிலம் பெரியதாகும். அதனால் 403 தொகுதிகளை கொண்ட சட்டசபைக்கு 7 கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் 15 மாவட்டங்களை உள்ளடக்கிய 73 தொகுதிகளுக்கு முதல் கட்டமாக தேர்தல் நடைபெற்றது. அதனையடுத்து 12 மாவட்டங்களை உள்ளடக்கிய 67 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. 3-வது கட்டமாக 63 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. அதனையடுத்து 12 மாவட்டங்களை உள்ளடக்கிய 53 தொகுதிகளுக்கு 4-வது கட்ட தேர்தல் நடைபெற்றது. அதனையடுத்து 5-வது கட்ட தேர்தல் பிரசாரம் சூடு பிடித்தது. அரசியல் கட்சி தலைவர்கள் முழுவீச்சில் தீவிரபிரசாரத்தில் ஈடுபட்டனர். அதோடுமட்டுமல்லாமல் ஒருவருக்கொருவர் கடுமையாக தாக்கி பேசினர். கழுதை, தீவிரவாதி என்றெல்லாம் அரசியல்வாதிகள் தாக்கி பேசினர்.

5-வது கட்ட தேர்தல்:
இந்தநிலையில் 5-வது கட்ட பிரசாரம் நேற்றுமாலையுடன் முடிவடைந்தது. 5-வது கட்டமாக அம்பேத்கர் நகர், அமெதி, பக்ரச், பலராம்பூர், பஸ்தி, பைசாபாத், ஹோண்டா, சந்த்சுபீர் நகர், சரஸ்வதி, சித்தார்த் நகர், சுல்தான்பூர் ஆகிய 11 மாவட்டங்களை உள்ளடக்கிய 52 தொகுதிகளில் வாக்குப்பதிவு நாளை நடக்கிறது. இந்த 5-வது கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கோடீசுவரர்களாகவும்  சில பேர்  கிரிமினல்களாக இருப்பதாலும் பிரசாரம் முன்பு நடந்த 4 கட்ட தேர்தல்களை விட விறுவிறுப்பாகவும் அனல் பறக்கும் வகையிலும் இருந்தது. பாரதிய ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி, கட்சியின் தலைவர் அமீத் ஷா, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்பட கட்சியின் முக்கிய தலைவர்கள் பிரசாரம் செய்தனர். காங்கிரஸ்-சமாஜ்வாடி கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி, முதல்வர் அகிலேஷ் யாதவ், முலாயம்சிங் யாதவ், சிவபால் சிங் ஆகியோரும், பகுஜன்சமாஜ் கட்சியை ஆதரித்து மாயாவதி, சர்மா ஆகியோரும் தீவிரமாக பிரசாரம் செய்தனர். பிரசாரம் நேற்று பிற்பகல் 5 மணியுடன் முடிவடைந்தது.

பாதுகாப்பு:
5-வது கட்ட தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுவதால் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பதட்டம் நிறைந்த பகுதிகளுக்கு கூடுதல் போலீசாரும் கலவரம் ஏற்படலாம் என்று கருதப்படும் தொகுதிகளுக்கு இணைராணுவ படையினரும் அனுப்பப்பட்டு வருகின்றனர்.நாளை வாக்குப்பதிவு நடக்கிறது. நாளை காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடையும். முதல் 4 கட்ட தேர்தல்கள் பெரும்பாலும் அமைதியாகவே நடந்தது. 4-வது கட்ட தேர்தலில் மட்டும் ஒரு தொகுதியில் துப்பாக்கிச்சூடு நடந்ததாக கூறப்படுகிறது.

6-வது கட்ட தேர்தல்:
வரும் மார்ச் 4-ம் தேதி 6-வது கட்ட தேர்தல் நடக்கவுள்ளது. மகராஜ்கஞ்ச், கோரக்பூர், தியோரியா, அசம்கர், மா, பாலியா, ஆகிய 6 மாவட்டங்கள் உள்ளடக்கிய 49 தொகுதிகளில் வரும் 4-ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. 7-வது கட்டமாக வரும் 8-ம் தேதி 40 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்கவுள்ளது. 11-ம் தேதி தேர்தல் முடிவு அறிவிக்கப்பட உள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்