முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓகீபே - லயன் சுழலில் சுருண்டது: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இந்தியா படு தோல்வி

சனிக்கிழமை, 25 பெப்ரவரி 2017      விளையாட்டு
Image Unavailable

புனே - ஆஸ்திரேலியாவுக்கு எதிரான புனேயில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 333 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. ஓகீபே 6 விக்கெட்டுகளையும், லயன் 4 விக்கெட்டுகளையும் எடுத்து வெற்றிக்கு வித்திட்டனர். இதன் மூலம் இந்திய அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தது ஆஸ்திரேலியா.

இந்திய அணி திணறல்
இந்தியா– ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மராட்டிய மாநிலம் புனேயில் கடந்த 3 நாட்களுக்கு முன் தொடங்கியது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி  முதல் இன்னிங்சில்  94.5 ஓவர்களில் 260 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆனது. இதைத் தொடர்ந்து இந்திய அணி முதல் இன்னிங்சை விளையாடியது. ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய இந்திய அணி

105 ரன்களில் சுருண்டது
முதல் இன்னிங்சில் 40.1 ஓவர்களில் 105 ரன்களில் சுருண்டது. விஜய், ராகுல், ரஹானே தவிர இந்திய அணியில் வேறு யாரும் இரட்டை இலக்கை தொடவில்லை. கடைசி 7 விக்கெட்டுகளை இந்திய அணி வெறும் 11 ரன்களில் பறிகொடுத்தது. பின்னர் 155 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை துவங்கிய ஆஸ்திரேலிய அணி  2–வது நாள் ஆட்ட நேர இறுதியில்  4 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் சேர்த்து இருந்தது.

285 ரன்களுக்கு ஆல் அவுட்
இதையடுத்து நேற்றைய 3-வது நாள் ஆட்டம் துவங்கியதில் இருந்து அசத்தலாக ஆடிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித்  சதம் அடித்தார். அவருக்கு பக்கபலமாக மறுமுனையில் வந்த வீரர்களும் கணிசமான ரன்களை சேர்த்து சீரான இடைவெளியில் ஆட்டமிழந்து வெளியேறினர்.  109 ரன்கள் அடித்த ஸ்மித் 7-வது விக்கெட்டாக ஆட்டமிழந்தார்.  87 ஓவர்கள் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 285 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.  இந்திய அணி தரப்பில் அஷ்வின் 4 விக்கெட்டுகளையும் ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், யாதவ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.

441 ரன்கள் இலக்கு
இதையடுத்து 441 ரன்கள் என்ற இமாலய வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்சை போலவே 2-வது இன்னிங்சிலும் ஏமாற்றம் அளித்தது. முதல் இன்னிங்சில் இந்திய பேட்ஸ்மேன்களை மிரட்டிய ஓ கீபே  2-வது இன்னிங்சிலும் இந்திய பேட்ஸ்மேன்களை தனது சுழலில் திக்குமுக்காடச்செய்தார்.

ஆஸ்திரேலியா வெற்றி
ஓ கீபே- லயன் சுழல்  கூட்டணி இந்திய பேட்ஸ்மேன்களை ஒட்டுமொத்தமாக பெவிலியனுக்கு அனுப்பியது. முரளி விஜய்(2 ரன்கள்) கே.எல்.ராகுல் (10 ரன்கள்), புஜாரா(31 ரன்கள் ), விராட் கோலி(13 ரன்கள்) என முன்னணி பேட்ஸ்மேன்கள் ஒருவர் பின் ஒருவராக நடையை கட்டினர். 33.5 ஓவர்கள் மட்டுமே விளையாடிய இந்திய அணி 107 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 333 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதல் மற்றும் 2-வது இன்னிங்சில் தலா 6 விக்கெட்டுகளை (12 விக்கெட்டுகள்) கைப்பற்றிய ஓகீபே ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

ஆஸி. முன்னிலை
ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஓகீபே 6 விக்கெட்டுகளையும் லயன் 4 விக்கெட்டுகளையும் அள்ளினர். இந்த வெற்றியின் மூலம் 4 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் ஆஸ்திரேலிய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது  டெஸ்ட் கிரிக்கெட் வரும் மார்ச் 4 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த  தோல்வியின் மூலம் தொடர்ந்து 19 போட்டிகளாக வெற்றி பெற்று வந்த இந்திய அணியின் வெற்றிப்பயணத்துக்கு ஆஸ்திரேலிய அணி முட்டுக்கட்டை போட்டது.

18-வது டெஸ்ட் சதம் !
நேற்று 3-வது நாள் ஆட்டத்தில் 298 ரன் முன்னிலை, கைவசம் 6 விக்கெட் என்ற நிலையில் ஆஸ்திரேலியா அணி தொடர்ந்து விளையாடியது. 5-வது விக்கெட்டை ஜடேஜா கைப்பற்றினார். மிச்சேல் மார்ஷ் 31 ரன்னில் அவரது பந்தில் ஆட்டம் இழந்தார். அப்போது ஸ்கோர் 164 ஆக இருந்தது. அடுத்து மேத்யூ வாடே களம் வந்தார். மறுமுனையில் இருந்த கேப்டன் சுமித் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 64.1-வது ஓவரில் ஆஸ்திரேலியா 200 ரன்னை தொட்டது.இந்த ஜோடியை உமேஷ்யாதவ் பிரித்தார். வாடே 20 ரன்னில் வெளியேறினார். அப்போது ஸ்கோர் 204 ஆக இருந்தது. 7-வது விக்கெட்டுக்கு சுமித்துடன் ஸ்டார்க் ஜோடி சேர்ந்தார். சுமித் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். அவர் 187 பந்துகளில் 11 பவுண்டரியுடன் 100 ரன்னை தொட்டார். 51-வது டெஸ்டில் விளையாடும் அவருக்கு இது 18-வது சதமாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்