முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோயம்பத்தூர் மாவட்டம் யானைகள் நலவாழ்வு முகாம் நிறைவு நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி , இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் ஆகியோர் யானைகளை கொடியசைத்

சனிக்கிழமை, 11 மார்ச் 2017      கோவை

 

          கோயம்புத்தூர் மாவட்டம் தேக்கம்பட்டி ஊராட்சி, பவானி ஆற்றுப்படுகையில் இந்து சமய அறநிலைத்துறை சார்பாக நடைபெற்ற யானைகள் நலவாழ்வு நிறைவு நிகழ்ச்சியில்  நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி , இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன்  ஆகியோர் மாவட்ட கலெக்டர் த.ந.ஹரிஹரன்   தலைமையில் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்கள்.

          பின்னர் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர்  தெரிவித்ததாவது

          பகுத்துணரும் ஆற்றலும் உணர்ந்ததை எடுத்துச் சொல்லும் திறனும் கொண்ட சிறப்பான பிறவி மானிடப்பிறவி ஆகும். ஆனால் மனிதனுடைய உணர்வுகளைப் போலப் பகுத்துணரும் ஆற்றலுடன் தன் பிணைகளை விட்டுக்கொடுக்காது காலமெல்லாம் காப்பாற்றி வாழும் கூட்டுக் குடும்பக் கட்டமைப்பைப் பெற்றவை யானைகள் என்பது சங்க இலக்கியங்கள் மூலமாக நமக்கு தெரியவருகிறது. மனிதர்கள் மட்டுமல்லாமல் ஏனைய உயிரினங்களும் நம்முடைய அன்புக்கு உரியவை என்ற அடிப்படையில் விலங்குகளிடத்தில் அன்பும், கருணையும் கொண்ட  அம்மா  2003-ஆம் ஆண்டில் மயிலாப்பூரில் ஒரு யானை, கடுமையாக நடத்தப்பட்டு பிச்சை எடுப்பதற்கு அதனை முறைகேடாக பயன்படுத்துவதை அறிந்து மருத்துவ சிகிச்சையும் அடைக்கலமும் அளிப்பதற்காக அந்த யானையை வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு அனுப்பி அதனைப் பாரமரிக்க ஏற்பாடுகள் செய்தார்.

          யானைகளை தொடர்ந்து பணியில் ஈடுபடுத்தாமல் போதுமான ஒய்வு தரவும், சத்தான உணவளித்து யானைகளை முறையாக பராமரிக்கவும், உடல்நலத்தைப் பேணவும் தேவையான நடவடிக்கைகள் எடுத்து சிகிச்சை அளிக்க வேண்டுமென  அம்மா  ஆணையிட்டு 2003 ஆண்டில் நீர் வசதிமிக்க சிறப்பான சுற்றுச்சூழல் அமைந்த முதுமலை (தெப்பக்காடு) வனவிலங்குச் சரணாலயத்தில் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் நடத்திட ஆணையிட்டார்கள். அதனை தொடர்ந்து நடப்பு முகாமினையும் சேர்த்து இது வரை 9 யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாங்கள் நடைபெற்றுள்ளன. இந்த ஆண்டு நடைபெற்ற யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாமிற்கு ரூ.1,16,85,000/- (ரூபாய் ஒரு கோடியே பதினாறு இலட்சத்து எண்பத்தி ஐந்தாயிரம்) அரசால் நிதி வழங்கப்பட்டுள்ளது. இந்த யானைகள் நலவாழ்வு முகாமில் தமிழ்நாட்டில் உள்ள திருக்கோயில்கள் மற்றும் திருமடங்களுக்குச் சொந்தமான 31 யானைகளும், பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்திலிருந்து 2 யானைகளும் ஆக மொத்தம் 33 யானைகள் கலந்து கொண்டு புத்துணர்வு பெற்றுள்ளன.

          முகாமிற்கு வர இயலாத யானைகளுக்கு அவைகள் இருக்கும் இடத்திலேயே முகாமில் வழங்கப்படுவது போன்று உணவு மற்றும் மருத்துவ வசதிகள் செய்து தரப்பட்டது. முகாமில் உள்ள யானைகளுக்கு கால்நடை மருத்துவர்களின் ஆலோனைப்படி பசுந்தீவனங்கள், பழங்கள், அஷ்டசூர்ணம், பயோ பூஸ்ட் ஆகியன வழங்கப்பட்டது. காலை மாலை இருவேளையும் யானைகளுக்கு நடைபயிற்சி அளிக்கப்பட்டது. அத்துடன் யானைகளை அன்புடன் பராமரிக்கும் அவசியத்தை உணர்த்தும் வகையில் எல்லா யானைப் பாகன்களுக்கும் சிறப்புப் பயிற்சியும் தரப்பட்டது. சுமார் 9 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த யானைகளின் சிறப்பு நலவாழ்வு முகாமினை சுற்றிலும் பாதுகாப்பினை பலப்படுத்த சோலார் தொங்கும் மின்வேலி, சோலார் மின்வேலி மற்றும் தகர தடுப்பு வேலி ஆகியன அமைக்கப்பட்டது. காட்டு விலங்குகளின் நடமாட்டத்தினை காண்காணிக்கும் வகையில் முகாமில் ஐந்து இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

          பாகன்களின் உடல் நலத்தை கண்காணிப்பதற்காக சுகாதாரத்துறையின் மூலம் மருத்துவ அரங்கு அமைக்கப்பட்டு, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை கொண்டு தினசரி மருத்துவ உதவிகள் செய்யப்பட்டு வந்தது. அதே போன்று தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை மருத்துவர்களை கொண்டு தினசரி யானைகளுக்கு மருத்துவ உதவிகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும், யானை பாகன்களின் மனநலம் புத்துணர்வு பெறும் வகையில் பொழுது போக்குக்கூடம், விளையாட்டு களம் ஆகியவை ஏற்படுத்தப்பட்டதுடன், யோகா பயிற்சி மற்றும் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு கடந்த 04.03.2017 அன்று பரிசுகள் வழங்கப்பட்டன.

          கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம், வனத்துறை, காவல்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, பொது சுகாதாரத்துறை, பொதுப் பணித்துறை, தமிழ்நாடு மின்சார வாரியம் ஆகியத்துறைகளின் முழு ஒத்துழைப்போடு நடைபெற்று வந்த யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் இனிதே நிறைவு பெற்றது என இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேவூர்.எஸ்.இராமச்சந்திரன்  தெரிவித்தார்.

                இந்நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ், இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் விரசண்முகமணி, மாவட்ட வருவாய் அலுவலர் துரைரவிச்சந்திரன், மாவட்ட வன அலுவலர் ராமசுப்ரமணியன் இ.வ.ப மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்