முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இளையராஜா-எஸ்.பி.பி. பிரிவால் இசை ரசிகர்கள் மன வேதனை

செவ்வாய்க்கிழமை, 21 மார்ச் 2017      சினிமா
Image Unavailable

சென்னை, காப்புரிமை பிரச்சினையில் இளையராஜா-எஸ்.பி.பி. பிரிவால் இசை ரசிகர்கள் வேதனை அடைந்துள்ளனர். மேலும் இதற்கு ஒரு நிரந்தர தீர்வு வேண்டும் என்றும் கேட்கின்றனர்.

இசை அமைப்பாளர் இளையராஜா ‘காப்புரிமை பெறாமல் என் பாடலை கச்சேரிகளில் பாடக் கூடாது’ என்று எஸ்.பி. பாலசுப்பிரமணியத்துக்கு நோட்டீஸ் அனுப்ப, அதை ஏற்றுக் கொண்டு ‘இனி உன் பாடலை பாட மாட்டேன்’ என்றார் எஸ்.பி.பி.பால்ய நண்பர்களான இவர்கள் இருவரிடையே என்ன நடந்தது? கச்சேரிகளில் மேடைகளில் ரசிகர்கள் முன் இரு வரும் ஒருவரையொருவர் வாடா.... போடா... என்று பேசிக் கொள்ளும் அளவுக்கு நெருக்கமாக இருந்தார்கள்.

ஆனால் இப்போது இருவருக்கும் இடையே என்ன நடந்தது? என்று ஆயிரம் கேள்விகள், சந்தேகங்கள், யூகங்கள்.. அரசியல் பரபரப்பையும் மீறி, இவர்கள் பற்றியே இப்போது விவாதங்கள் எழுந்துள்ளன.ஒரு திரைப்பட பாடலானது இசை அமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என மூவரது பங்களிப்புடன் உருவாகிறது.இதில் இசைஅமைப்பாளருக்குத்தான் பெரும் பங்கு இருக்கிறது. பாடலை காட்சிக்கு ஏற்ப எந்த ராகத்தில் உருவாக்க வேண்டும். என்னென்ன இசைக் கருவிகளை எந்தெந்த இடத்தில் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதையெல்லாம் இசை அமைப்பாளர்தான் உருவாக்கி அதை இசைக் குறிப்பாக இசைக் கலைஞர்களிடம் கொடுக்க அதன்படி இசைக் கலைஞர்கள் இசைக்க இப்படித்தான் இசை உருவாகிறது.

யார் பாட்டெழுதினால், எப்படி எழுதினால் பொருத்தமாக இருக்கும் என்பதையும் இசை அமைப்பாளர்தான் முடிவு செய்வார்.இசை அமைப்பாளர் உருவாக்கிய டியூனுக்கு தகுந்தவாறு பாடல் ஆசிரியர் பாடல் வரிகளை எழுதிக் கொடுப்பார். அதை தனது இசைக் குழுவில் உள்ள சாதாரண பாடகர்களைக் கொண்டு பாட வைத்து ரிகர்சல் (மாதிரி) எடுத்து அதில் திருத்தங்கள் செய்யப்படும். கடைசியாக பாடகர்களைக் கொண்டு பாடச் செய்து பதிவு செய்யப்படும். பாடலின் ஏற்ற இறக்கங்கள், ராகங்கள் போன்றவற்றையும் இசை அமைப்பாளரே திருத்தங்கள் செய்வார்.எஸ்.பி.பாலசுப்பிரமணியம், ஜேசுதாஸ் போன்ற பாடகர்கள் தாங்கள் பெற்ற அனுபவத்தாலும், இசை ஞானத்தாலும் எளிதில் இசை அமைப்பாளர்கள் நினைப்பதை புரிந்து கொண்டு பாடி விடுவார்கள். இதனால்தான் திரை உலகில் பிரபலங்களுக்கு மவுசு உண்டாகிறது.

படத்துக்கு யார் இசை அமைப்பாளர் என்பதை படத்தின் தயாரிப்பாளர் முடிவு செய்து அவருக்கு மொத்தமாக சம்பளம் பேசி கொடுத்து விடுகிறார்.அதன் பிறகு யார் பாடுவது? பாடலாசிரியர் யார்? இசைக் கலைஞர்கள் போன்ற மற்ற முடிவுகளை இசை அமைப்பாளரே எடுக்கிறார்.ஒரு படத்துக்காக உருவாக்கப்படும் பாடல்களை படத்தயாரிப்பாளர் இசை நிறுவனங்களுக்கு விற்பனை செய்வார். காப்புரிமை சட்டப்படி ஒரு பாடலுக்கான காப்புரிமையில் தயாரிப்பாளருக்கு பாதி பங்கும் மீதியில் இசை அமைப்பாளர், பாடல் ஆசிரியர் ஆகியோருக்கு சொந்தம் என்று கூறப்பட்டுள்ளது. இப்போதுள்ள காப்புரிமை சட்டப்படி பாடகர்களுக்கு எந்த உரிமையும் இல்லை. எனவே தான் காப்புரிமையில் தங்களுக்கும் பங்கு வேண்டும் என்று பாடகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதில் இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை.

பாடல்களை விலைக்கு வாங்கிய இசை நிறுவனங்கள் தங்களுக்குத்தான் பாடலுக்கான காப்புரிமை சொந்தம் என்றும் கூறுகிறது.பொதுவாக ஒரு இசை நிகழ்ச்சி நடத்தும் போது நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஐ.பி.ஆர்.எஸ். (இந்தியன் பெர்பார்மிங் ரைட் சொசைட்டி) நிறுவனத்திடம் ஒரு தொகையை கட்டி அனுமதி பெற வேண்டும். இந்த தொகை இசை நிறுவனம், இசை அமைப்பாளர், பாடல் ஆசிரியர் என மூவருக்கும் 5: 3: 2 என்ற விகிதத்தில் பிரித்து கொடுக்கப்பட வேண்டும்.இந்த ஐ.பி.ஆர்.எஸ். அமைப்பு தனது வேலையை சரியாக செய்யவில்லை என்பதே இப்போதைய குற்றச்சாட்டு.

தற்போது யு டியூப், எப்.எம்., தொலைக்காட்சி மற்றும் இசை சேனல்கள், இசை ஆப்கள் ஏராளமாக உருவான நிலையில் அவைகளிடம் இருந்து வசூலிக்கப்படும் காப்புரிமை தொகை இசை அமைப்பாளர்களுக்கு உரிய முறையில் போய்ச் சேரவில்லை.இசையில் முன்னணியில் இருக்கும் இளையராஜாவுக்கே ஆண்டுக்கு ரூ.15 லட்சம்தான் கிடைக்கிறது. எனவேதான் தனது பாடல்களை அனுமதியின்றி பாடுவதை எதிர்த்து களம் இறங்கி இருக்கிறார். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் வசூலிக்கும் பெரும் தொகை எங்கு செல்கிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.வருகிற 31-ந்தேதி காப்புரிமை அமைப்பான ஐ.பி.ஆர்.எஸ். புதிய உறுப்பினர்கள் தேர்வு நடக்கிறது. அவர்கள் தான் இதுபற்றி முடிவு செய்வார்கள்.இதை எதிர்நோக்கித்தான் தற்போது காப்புரிமை தொடர்பான மோதல் ஏற்பட்டுள்ளது.

இதுபற்றி பின்னணி பாடகர் ஸ்ரீனிவாஸ் கூறிய தாவது:-ஐ.பி.ஆர்.எஸ். அமைப்பு தான் ராயல்டியை பிரித்துக் கொடுக்கிறது. வருகிற 31-ந் தேதி ஐ.பி.ஆர்.எஸ். அமைப்புக்கு தேர்தல் நடத்தி புதுபோர்டு வருகிறது. ராயல்டியை மாற்றி அமைப்பது பற்றி புதுபோர்டு முடிவு செய்ய இருக்கிறது.இசை அமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் பாட்டு போடுவதைத் தவிர எதையும் எதிர்பார்த்தது கிடையாது. இன்றைக்கு இசை வணிக மயமாகி விட்டது. பணம்தான் முக்கியமானதாக கருதப்படுகிறது.நான் இளையராஜா ரசிகன். எஸ்.பி.பி. கச்சேரிக்கு ரசிகனாக செல்கிறேன். அப்போது “மன்றம் வந்த தென்றலுக்கு”..., “இளைய நிலா பொழிகிறதே...”, “பொத்திவச்ச மல்லிகை மொட்டு...”, “சுந்தரி கண்ணால் ஒரு சேதி...” பாடல்களை விரும்பி கேட்பேன். இதற்கு தடை போடக்கூடாது என்றார்.

தமிழ் ரசிகர்களைப் பொறுத்தவரை இளையராஜா - எஸ்.பி.பி. இருவர் மீதும் அளவிட முடியாத பாசம் கொண்டுள்ளனர். இருவரையும் சேர்த்துத்தான் பார்க்கிறார்கள். காப்புரிமை பிரச்சினையை சட்டப்படி முடிவு செய்யட்டும். ஆனால் எங்களால் இசையை கேட்காமல் இருக்க முடியாது என்று ரசிகர்கள் வேதனை அடைந்துள்ளனர்.இளையராஜா நோட்டீஸ் அனுப்பினார், இந்தப் பிரச்சினையை பெரிதுபடுத்த வேண்டாம் என்றார் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். இதுதான் அவர்களுக்கிடையேயான பெருந்தன்மை. இதையே சிலர் உள்ளே புகுந்து சொந்த பகையை தீர்த்துக் கொள்வது சரியல்ல என்பதே ரசிகர்கள் கருத்து

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்