முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சட்டசபையில் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த சபாநாயகர் தனபாலுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

வியாழக்கிழமை, 23 மார்ச் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழக சட்டசபை சபாநாயகர் தனபாலை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் தோல்வியடைந்தது. தீர்மானத்திற்கு ஆதரவாக 97 பேரும், எதிர்ப்பாக 122 பேரும் வாக்களித்தனர். இதில் ஒ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த நட்ராஜூம் சபாநாயகர் தனபாலுக்கு ஆதரவாக வாக்களித்தார்.

சபாநாயகர் வேண்டுகோள்

தமிழக சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் சபாநாயகர் தனபால், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த ‘‘பேரவை தலைவரை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்ற தீர்மானத்தை’’ எடுத்துக் கொள்வதாக அறிவித்தார். முன்மொழிவதற்கு பேரவை இசைவு தர வேண்டும். இந்த தீர்மானத்திற்கு இசைவு தருபவர்கள் எழுந்து நி்ல்லுங்கள் என்று சபாநாயகர் கேட்டுக்கொண்டார். இதனையடுத்து தி.மு.க. எம்.எல்.ஏக்கள் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் எழுந்து நின்றார்கள். தீர்மானத்தை எடுத்து கொள்வதற்கு 35 உறுப்பினர்களுக்கு குறையாமல் ஆதரவு தர வேண்டும். இப்போது அந்த தீர்மானத்தை எடுத்துக்கொள்வதற்கு பேரவையின் அனுமதி கிடைத்துள்ளது. இந்த தீர்மானத்தை உடனடியாக எடுத்துக்கொள்ளலாம். இந்த தீர்மானத்தை முன்மொழிந்து விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதற்காக பேரவை அலுவல்களை ஏற்று நடத்துமாறு துணை சபாநாயகரை கேட்டுக் கொள்கிறேன் என்று சபாநாயகர் தனபால் தெரிவித்தார்.

விவாதம் தொடர்ந்தது

இதனையடுத்து சபாநாயகர் தனது இருக்கையில் இருந்து இறங்கி அவரது அறைக்கு போய் அமர்ந்தார். சபாநாயகர் இருக்கையிலிருந்து எழுந்து சென்றதும், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் சபையை நடத்தினார். எதிர்க்கட்சி தலைவர் தீர்மானத்தை முன்மொழியலாம் என்று துணை சபாநாயகர் கேட்டுக்கொண்டார். அதன்படி, ‘பேரவை தலைவரை பதவியிலிருந்து நீக்க வேண்டும்’ என்ற தீர்மானத்தை முன்மொழிவதாக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். இந்த தீர்மானத்தை வழிமொழிவதாக தி.மு.க. துணைத்தலைவர் துரைமுருகன் கூறினார். இதனையடுத்து விவாதம் தொடர்வதாக துணை சபாநாயகர் தெரிவித்தார்.

நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்து எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் ராமசாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் முகமது அபுபக்கர் ஆகியோர் பேசினார்கள். இந்த தீர்மானத்தை எதிர்த்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சரும், அவை முன்னவருமான கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் பேசினார்கள்.

குரல் வாக்கெடுப்பு

இதனையடுத்து இந்த தீர்மானத்தை குரல் வாக்கெடுப்புக்கு விடுவதாக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் அறிவித்தார். குரல் வாக்கெடுப்பில் தீர்மானத்திற்கு எதிராக அதிகம் பேர் இருந்ததால், இந்த தீர்மானம் தோற்றுப் போனதாக துணை சபாநாயகர் அறிவித்தார். உடனே எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் எழுந்து, வாக்கெடுப்பை டிவிஷனுக்கு விடவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதனையடுத்து துணை சபாநாயகர் டிவிஷன் வாக்கெடுப்புக்கு விடுவதாக அறிவித்தார்.

தீர்மானம் தோல்வி

இப்போது 3 முறை அழைப்பு மணி ஒலிக்க வேண்டும் என்று துணை சபாநாயகர் கூறினார். உடனே சட்டசபையிலிருந்த அழைப்பு மணி 3 முறை ஒலிக்கப்பட்டது. இந்த அழைப்பு மணி முடிவடைந்ததும், பேரவை வாயில்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என்று துணை சபாநாயகர் கூறினார். உடனடியாக பேரவையின் அனைத்து வாயில்களும் மூடப்பட்டன. மீண்டும் இந்த தீர்மானத்தை குரல் வாக்கெடுப்புக்கு விடுவதாக துணை சபாநாயகர் மீண்டும் அறிவித்தார். குரல் வாக்கெடுப்பில் தீர்மானம் தோல்வி அடைந்தது.

அப்போது குரல் ஓட்டெடுப்பை எதிர்க்கட்சி தலைவர் ஏற்காததால், எண்ணி கழிக்கும் முறைப்படி வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது. எனவே அனைத்து உறுப்பினர்களும் அவரவர் இருக்கையில் அமர வேண்டும். வாக்கெடுப்பு முடியும் வரை யாரும் வெளியே செல்லக்கூடாது என்று துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறினார்.
சபையில் 6 பகுதிகள் உள்ளன. ஒவ்வொரு பிரிவு வாரியாக வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று துணை சபாநாயகர் கூறினார்.

வாக்கெடுப்பு நடந்தது

இதன்பின் 12.14 மணிக்கு வாக்கெடுப்பு துவங்கியது. ஒவ்வொரு பகுதி வாரியாக (டிவிஷன்) வாக்கெடுப்பு நடந்தது. பேரவை தலைவரை நீக்க வேண்டும் என்ற தீர்மானத்தை ஆதரிப்போர் எழுந்து நிற்கலாம் என்று துணை சபாநாயகர் கூறினார். முதல் பிரிவில் யாரும் எழுந்து நிற்கவில்லை. அதன் பின்னர் இந்த தீர்மானத்தை எதிர்ப்போர் எழுந்து நில்லுங்கள் என்று கூறினார். உடனே முதல் பகுதியில் இருந்த முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் எழுந்து நின்றார்கள்.

எதிர்த்து வாக்கு

முதல் பகுதியில் மயிலாப்பூர் தொகுதி அ. தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் ஆர்.நடராஜ் இருந்தார். அவர் சென்றமுறை நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை எதிர்த்து வாக்களித்தார். ஆனால் நேற்று, நடராஜ் சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தார். அவருக்கு அ.தி.மு.கவை சேர்ந்த உறுப்பினர்கள் மேசையை தட்டி பாராட்டினார். தொடர்ந்து ஒவ்வொரு பகுதி வாரியாக வாக்கெடுப்பு நடந்தது. சட்டசபை செயலாளர் ஒவ்வொரு எம்.எல்.ஏ.க்களின் பெயரையும் படித்தார். ஒவ்வொருவரும் தங்களது பெயர் படிக்கப்பட்டவுடன் இருக்கையில் அமர்ந்தனர். 12.14 மணிக்கு துவங்கிய வாக்கெடுப்பு 12.28 மணிக்கு முடிவடைந்தது. தீர்மானத்தை ஆதரிப்போரும், எதிர்ப்போரும் இருந்தனர். யாரும் நடுநிலை வகிக்கவில்லை.

ஒ.பி.எஸ் அணி புறக்கணிப்பு

ஒ.பன்னீர்செல்வம் அணியில் மொத்தம் 11 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். நேற்று சபைக்கு ஒ.பன்னீர்செல்வம் உட்பட 11 எம்.எல்.ஏ.க்கள் வரவில்லை. தீர்மானத்தை ஆதரித்து தி.மு.க., காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் வாக்களித்தனர். ஓட்டெடுப்பு முடிந்ததும் சிறிது நேரத்தில் முடிவுகளை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் அறிவித்தார். பதவியிலிருந்து சபாநாயகரை நீக்ககோரும் தி.மு.க. தீர்மானத்தை ஆதரித்து 97 எம்.எல்.ஏ.க்களும், அதனை எதிர்த்து 122 எம்.எல்.ஏ.க்களும் வாக்களித்திருப்பதாக துணை சபாநாயகர் அறிவித்தார். எதிர்க்கட்சி தலைவர் முன்மொழிந்து துணைத்தலைவர் வழிமொழிந்த இந்த தீர்மானம் தோல்வியுற்றது என துணை சபாநாயகர் அறிவித்தார்.

மொத்தம் 230 உறுப்பினர்கள்

அப்போது அ. தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் நீண்ட நேரம் மேஜையை தட்டி பலத்த ஆரவாரம் செய்தனர். சட்டசபையில் மொத்த உறுப்பினர்கள் 234 பேர். இதில் ஜெயலலிதா மரணமடைந்ததால் ஆர்.கே.நகர் தொகுதி காலியாக உள்ளது. தி.மு.க. தலைவர் கருணாநிதி சட்டசபைக்கு வரவில்லை. சபாநாயகர், துணை சபாநாயகர் வாக்களிக்கவில்லை. எனவே மொத்தம் உள்ள 230 எம்.எல்.ஏ.க்களில் அண்ணா தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 122 பேரும், தி.மு.க., காங்கிரஸ், முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் 97 பேரும் வாக்களித்தனர். ஒ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த 11 பேரும் நேற்று சபைக்கு வராமல் புறக்கணித்தனர்.

துணை சபாநாயகர் புகழாரம்

ஓட்டெடுப்பு முடிந்து அறிவிப்பை வெளியிட்டபின் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது.,

சபாநாயகர் பல்வேறு பதவிகளை வகித்தவர். மூத்தவர். பேரவை தலைவர் என்பது மலர்பாதை அல்ல. முட்கள் உள்ள பாதையில் நடக்கும் பணி. மிக கண்ணியமாக மரபுகள்படி, விதிப்படி சபையை நடத்தினார். 6 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார். அமைச்சராக இருந்திருக்கிறார். துணை சபாநாயகராக இருந்திருக்கிறார். ஆளும் கட்சி உறுப்பினர்களை விட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேச அதிக நேரம் வாய்ப்பு கொடுத்தவர் என்று துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறினார்.

சரியாக 12.34 மணிக்கு வாக்கெடுப்பு முடிந்தது. பின்னர் சபாநாயகர் சபைக்கு வந்தார். அப்போது அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நின்றார்கள். ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் மேஜையை தட்டி பலத்த ஆரவாரம் செய்து வரவேற்றார்கள். அப்போது சபாநாயகர் தனபால் பேசியதாவது:-

ஜெயலலிதா பாராட்டு

3-6-2016 அன்று நான் பேரவைத் தலைவராக மீண்டும் பொறுப்பேற்றபோது, என்னை வாழ்த்திப் பேசிய முதல்வர் அம்மாவுக்கு நன்றியைத் தெரிவித்து உரையாற்றுகையில் நான் குறிப்பிட்டதை நினைத்துப் பார்க்கிறேன். அப்போது நான் குறிப்பிட்டது, “அம்மா என்னைப் பாராட்டிப் பேசியது, என்னுடைய வாழ்நாளில் நான் பெற்ற பெரும் வரமாகவே கருதுகிறேன். இனி, என் வாழ்நாளில் எவ்வளவு பெரிய வளம் கிடைத்தாலும், இந்த அளவுக்கு அவை எனக்கு மகிழ்ச்சியைத் தராது, இன்பத்தைத் தராது. மனதாரச் சொல்கிறேன், இதற்கு ஈடு இணை எதுவும் கிடையாது. என் வாழ்வில் நான் பெற்ற பேரின்பம், பெரிய பாக்கியம், ஜெயலலிதா என்னைப் பாராட்டியது ஒன்றுதான் என்றேன்.” பெரும் மகிழ்ச்சியைத் தந்துவிட்டு, மீளாத் துயரில் ஆழ்த்திவிட்டு அம்மா மறைந்துவிட்டார்.

விருப்பு-வெறுப்பு இல்லை

அன்றைக்கு அம்மா வாழ்த்திப் பேசுகையில், “எல்லோரும் உணர்ச்சிவசப்பட்டாலும், கட்சி மாச்சரியங்களைப் புறந்தள்ளி, அனைவரையும் ஒருசேர நினைத்து நடுவராக இருந்து தீர்ப்பு அளிக்கும் பணியினை, நீங்கள் நடுநிலையோடு ஆற்றுவீர்கள் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை” எனக் குறிப்பிட்டதற்கு மாறாக, ஒரு துளியேனும் விலகி செயல்படக்கூடாது என்பதை சிந்தையில் நிறுத்தி செயல்படுபவன் நான்.

இன்றைக்கு என்னை பதவியிலிருந்து நீக்க வேண்டுமென்கிற தீர்மானம் தோல்வியுற்றுள்ளது. அம்மாவின் ஆசியோடு, பேரவைத் தலைவர் பதவியில் இருக்கும் எனக்கு, யார் மீதும் தனிப்பட்ட முறையில் விருப்பு வெறுப்பு கிடையாது. இந்த அவை இயற்றிக் கொடுத்த, விதிகளின்படி, மரபின்படியே நான் செயல்பட்டு வருகிறேன் என்பதை மட்டும் நான் இந்த நேரத்தில் தெரிவித்துக்கொண்டு அடுத்த அலுவலுக்குச் செல்கிறேன்.
இவ்வாறு சபாநாயகர் பேசினார்.

துறைமுருகன் பேச்சு

பின்னர் எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் பேசினார். இந்த தீர்மானத்தை நாங்கள் வெற்றி பெறுவோம் என்று கொண்டுவரவில்லை. தங்களை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாபாராட்டியது பற்றி நீங்கள் குறிப்பிட்டீர்கள். உங்கள் கட்சி தலைவர் பாராட்டி இருக்கிறார். இந்த சட்டசபை முடியும் வரை நாங்களும் உங்களை பாராட்டும் அளவுக்கு உங்களது பணி இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த தீர்மானத்தை கொண்டு வந்தோம் என்று கூறினார்.

விவாதம் முடிந்தது

11.15 மணிக்கு எடுத்துக் கொண்ட இந்த தீர்மானம் 12.36 மணி அளவில் முடிந்தது. ஏற்கனவே கடந்த 18-ம் தேதி அன்று சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கொண்டு வந்து அதில் வெற்றி பெற்றார். இப்போது சபாநாயகர் தனபாலை பதவியிலிருந்து நீக்க கோரும் தி.மு.க. கொண்டு வந்த தீர்மானம் தோல்வி அடைந்துள்ளது. இதனையடுத்து தி.மு.க.வினர் பெரும் விரக்தியில் காணப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்