முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துயில் மயக்க நோய் ஏற்பட காரணம் என்ன?

திங்கட்கிழமை, 27 மார்ச் 2017      வாழ்வியல் பூமி
Image Unavailable

Source: provided

எல்லோரும் எப்போதாவது ஒருமுறை இப்படியொரு அனுபவத்தை நிச்சயமாக பெற்றிருப்பார்கள். அதாவது இரவில் நாம் தூங்கிக் கொண்டிருக்கும்போது, யாரோ நம் மீது பெரிய பாறாங்கல்லை ஏற்றி வைத்து அமுக்குவது போல் தெரியும். நம்மால் கண்ணைத் திறக்க முடியாது. கத்தலாம் என்றாலும் முடியாது. குரல் கூட வெளியே வராது. உடலை அசைக்கக் கூட முடியாது. கொஞ்ச நேரம் கழித்துதான் எதையுமே செய்ய முடியும். நாம் எழுந்து பார்த்தால் நம் அருகில் யாரும் இருக்க மாட்டார்கள். ஏன், அந்த அறையில் கூட யாரும் இருக்க மாட்டார்கள். யார் இதை செய்தார்கள் என்று குழம்பி போய் இருப்போம். மறுநாள் விவரம் தெரிந்தவர்களிடம் கேட்டால் அது அமுக்குவான் பேயின் வேலை என்பார்கள். நீங்கள் உயிரோடு பிழைத்தது பூர்வஜென்ம புண்ணியம் என்பார்கள். அந்த இடத்தில் படுக்காமல் வேறு இடத்தில் படுத்து தூங்குங்கள் என்று அறிவுரை மேல் அறிவுரையாக சொல்வார்கள்.

நகரங்களை விட கிராமங்களில் இந்த அமுக்குவான் பேய் மிக பிரசித்தம். உண்மையில் அமுக்குவான் பேய் இருக்கிறதா? அது உயிரை எடுக்கும் அளவுக்கு கொடூரமான பேயா? என்று ஆராய்ச்சியாளர்களிடம் கேட்டால், அப்படி எந்த பேயும் உலகில் இல்லை. அது ஒரு உடலின் சமநிலை பிறழ்வு என்கிறார்கள்.

பொதுவாக நாம் தூங்கும் போது உடலும் மூளையும் ஒரே நேரத்தில் ஓய்வெடுக்கும். இப்படி இரண்டும் ஒரே சமயத்தில் நடக்கும் போது எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், அபூர்வமாக சில நேரங்களில் நாம் தூங்கிக் கொண்டிருக்கும் போது மூளை மட்டும் விழித்துக் கொள்ளும். நம் உடலோ தூங்கிக் கொண்டே இருக்கும். அப்போது நம்மால் எழுந்திருக்கவோ, பேசவோ, ஏன் கண்களை திறக்கக் கூட முடியாது. சிறிது நேரத்தில் நமது உடலும் விழித்துக் கொள்ளும் போது தான் நம்மால் எழுந்திருக்க முடியும். இந்த கோளாறை மருத்துவத்தில் 'தூக்க பக்கவாதம்' என்கிறார்கள்.

இது எப்போவாவது ஒரு முறை ஏற்படுவது அனைவருக்குமே இயல்பான ஒன்று. ஆனால், ஒருவருக்கு திரும்ப திரும்ப ஏற்பட்டாலோ, ஒருசில நாட்களுக்கு ஒருமுறை ஏற்பட்டாலோ அது மருத்துவரை சந்திக்க வேண்டிய கோளாறு. இது சிலருக்கு பிறவியில் இருந்தே தொடர்கிறது என்றும் கூறுகிறார்கள்.

இதை 'துயில் மயக்க நோய்' என்றும் கூறுகிறார்கள். இது பெரும்பாலும் ஒற்றைத் தலைவலி, தூக்கத்தில் மூச்சு திணறல் நோய் உள்ளவர்களுக்கு அதிகம் ஏற்படும் என்கிறார்கள். காதல் தோல்வி போன்றவற்றால் உருவாகும் ஏக்க நோய்களும் இது உருவாக காரணமாக இருக்கிறது.

தூக்க பக்கவாத நோயை இரண்டு விதமாக பிரிக்கிறார்கள். ஒன்று தனிமைத் தூக்க பக்கவாதம், மற்றொன்று தொடர் தனிமைத் தூக்க பக்கவாதம். இதில் தனிமைத் தூக்க பக்கவாதம் என்பது ஒரு மனிதரின் வாழ்வில் எப்போதாவது ஒரு சில நிமிடங்கள் தோன்றி மறையக் கூடியது. இந்த அனுபவத்தைதான் எல்லோரும் வாழ்வில் ஒருமுறையாவது பெற்றிருப்பார்கள். இதனால் பிரச்சனை இல்லை.

தொடர் தனிமைத் தூக்க பக்கவாதம் அப்படியல்ல. அது பிரச்சனை தரக்கூடியது. இது ஒவ்வொருவருக்கும் ஒரு விதமாக இருக்கும். இவர்கள் அடிக்கடி அமுக்குவான் பேய் தங்களை தாக்குவதாக சொல்லிக்கொண்டே இருப்பார்கள். இது ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் என்று நீடிக்கும். சில நேரங்களில் அந்தரத்தில் பறப்பதுபோல் தோன்றும். இது எல்லாமே இந்த நோயின் பாதிப்பால் உருவாவதுதான். இவர்கள் தான் மந்திரவாதிகளையும் சாமியார்களையும் தேடி போகிறார்கள். இது மருத்துவ கோளாறுதான். இதற்கு மருத்துவர்களைத் தான் நாட வேண்டும்.
துயில் மயக்க நோய் ஏற்பட உடல்நலக் குறைவுதான் காரணம்.

ஏவல், பில்லி, சூன்யம், அமுக்குவான் பேய் என்ற எதுவும் காரணமில்லை. அதனால் இதை மருத்துவமனைய்லே சிகிச்சை எடுத்து சரி செய்யலாம். அதைவிடுத்து மாந்திரீகம் என்று நினைத்து மந்திரவாதிகளை நாடுவது நோயின் தன்மையை மேலும் அதிகப்படுத்தவே செய்யும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்