முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவின் கடும் எதிர்ப்பையும் மீறி சிரியா அரசுக்கு ரஷ்யா - ஈரான் ஆதரவு

திங்கட்கிழமை, 10 ஏப்ரல் 2017      உலகம்
Image Unavailable

பெய்ருட்  - சிரியாவில் உள்நாட்டு மக்கள் கொடூரமாக கொல்லப்படுவதற்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் சிரியா அதிபர் பஷர் அல் ஆசாத் தலைமையிலான அரசுக்கு ரஷ்யாவும் ஈரானும் தொடர்ந்து ஆதரவு அளிக்க முன்வந்துள்ளன.

கிளர்ச்சியாளர்கள் ...
சிரியாவில் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக உள்நாட்டு கிளர்ச்சியாளர்கள் ஆயுதமேந்திய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் மறைமுகமாக ஆதரவு தெரிவித்து வருகின்றன. அதேவேளையில், அமெரிக்காவுடன் மோதல் போக்கை கடைபிடித்துவரும் ரஷ்யா, ஈரான் ஆகிய நாடுகள் அதிபர் பஷர் அல் ஆசாத் தலைமையிலான அரசையும், கிளர்ச்சியாளர்கள் மீதான அரசுப் படைகளின் தாக்குதலையும் ஆதரித்து வருகின்றன.

அமெரிக்கா தாக்குதல்
இந்நிலையில், சமீபத்தில் கிளர்ச்சியாளர்கள் முகாமின் மீது சிரியா நாட்டு விமானப்படை ரசாயன ஆயுதங்களை வீசி தாக்குதல் நடத்தியதாகவும், இதில் சுமார் நூறு பேர் உயிரிழந்ததாகவும் அமெரிக்கா குற்றம்சாட்டியது. இதற்கு பதிலடியாக சிரியா நாட்டு விமானப் படைக்கு சொந்தமான தளத்தின்மீது சக்திவாய்ந்த ஏவுகணைகளை வீசி அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.

ஐ.நா.வில் விவாதம்
மேலும், சிரியாவில் ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டது மற்றும் சிரியாவின் இறையாண்மையை அவமதிக்கும் வகையில் அமெரிக்கா ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது தொடர்பாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் காரசாரமான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின்போது அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகள் சிரியா அரசுக்கு எதிராகவும், ரஷ்யா, ஈரான் உள்ளிட்ட நாடுகள் சிரியா அதிபர் பஷர் அல் ஆசாத்தின் நடவடிக்கைக்கு ஆதரவாகவும் உரையாற்றினர்.

மாற்றம் இல்லை
இந்நிலையில், சிரியா அதிபருடன் தொலைபேசி மூலம் பேசிய ஈரான் அதிபர் ஹசன் ரவுஹானி, அமெரிக்காவின் அத்துமீறலுக்கு அடி பணிய வேண்டாம் என வலியுறுத்தினார். நேற்று முன்தினம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினையும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட ரவுஹானி, சிரியா விவகாரம் தொடர்பாக நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார். பின்னர், சிரியா அரசை தொடர்ந்து ஆதரிப்பது என்னும் தங்களது நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை என அவர்கள் தீர்மானித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்