முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி-20 கிரிக்கெட் வரலாற்றில் 10 ஆயிரம் ரன்களை கடந்து கிறிஸ் கெய்ல் சாதனை

புதன்கிழமை, 19 ஏப்ரல் 2017      விளையாட்டு
Image Unavailable

பெங்களூரு : டி-20 கிரிக்கெட் வரலாற்றில் 10 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையை வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரரான கிறிஸ் கெய்ல் பெற்றுள்ளார்.

‘சிக்சர் மன்னன்’

வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல். ‘சிக்சர் மன்னன்’ என்று செல்லமாக அழைக்கப்படும் இவர், டி20 கிரிக்கெட்டில் முடிசூடா மன்னராக விளங்கி வருகிறார். வெஸ்ட் இண்டீஸ் டி20 சர்வதேச கிரிக்கெட் அணிக்காக மட்டுமே விளையாடி வரும் கெய்ல், உலகின் பல்வேறு பகுதியில் நடைபெற்று வரும் தொழில்முறை கிரிக்கெட்டான டி20 லீக்கில் இடம்பிடித்து விளையாடி வருகிறார்.

10 ஆயிரம் ரன்

இந்த லீக் தொடர்களில் சிக்சர் மழை பொழிவதால் கெய்லுக்கென்றே தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. குறிப்பாக இந்தியாவில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரில் அவருக்கு அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர். இந்த தொடர் தொடங்குவதற்கு முன் டி20 கிரிக்கெட்டில் 286 போட்டிகளில் 9937 ரன்கள் எடுத்திருந்தார். 63 ரன்கள் எடுத்தால் டி20 கிரிக்கெட் வரலாற்றில் 10 ஆயிரம் ரன்னைக் கடக்கும் முதல் வீரர் என்ற அரிய சாதனையை படைக்கும் நோக்கத்தில் ஐ.பி.எல். சீசன் 2017-ல் களமிறங்கினார்.

77 ரன்கள்

சன்ரைசர்ஸ் அணிக்கெதிரான முதல் போட்டியில் 32 ரன்னும், டெல்லிக்கெதிராக 6 ரன்னும், மும்பை அணிக்கெதிராக 22 ரன்களும் எடுத்திருந்தார். மூன்று போட்டிகளில் 60 ரன்கள் எடுத்திருந்த நிலையில் நேற்று முன்தினம் குஜராத் அணிக்கெதிராக களம் இறங்கினார். இந்த போட்டியில் 3 ரன்கள் எடுத்திருக்கும்போது 10 ஆயிரம் ரன்களை எட்டிய முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார். தொடர்ந்து விளையாடிய கெய்ல் 38 பந்தில் 5 பவுண்டரி, 7 சிக்சருடன் 77 ரன்கள் குவித்தார்.

18 சதங்கள் ...

டி20 போட்டிகளில் இந்த போட்டிக்கு முன்பு வரை 289 போட்டிகளில் 18 சதங்கள், 60 அரைசதங்கள் அடித்திருந்தார். இதில் 736 சிக்சர்களும், 764 பவுண்டரிகளும் அடங்கும்.

கெய்லை காப்பாற்றிய ‘தொப்பி’

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் பிரன்டன் மெக்கல்லம் அணிந்திருந்த வட்டவடிவிலான தொப்பியால் பெங்களூரு வீரர் கிறிஸ் கெய்ல் ஆட்டம் இழக்காமல் தப்பினார்.

3-வது நடுவர்

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நேற்று முன்தினம் அரங்கேறிய 20-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும், குஜராத் லயன்சும் பலப்பரீட்சை நடத்தின. இந்த ஆட்டத்தில் பெங்களூரு வீரர் கிறிஸ் கெய்ல் 38 ரன்களில் ஆடிக்கொண்டிருந்த போது, ரவீந்திர ஜடேஜா வீசிய பந்தை சிக்சர் நோக்கி தூக்கினார். அப்போது ‘லாங்-ஆப்’ திசையில் நின்ற குஜராத் பீல்டர் பிரன்டன் மெக்கல்லம் பாய்ந்து ஒற்றைக்கையால் பந்தை கேட்ச் செய்தார். இதையடுத்து குஜராத் அணியினர் மகிழ்ச்சியில் திளைக்க, கெய்ல் பெவிலியன் நோக்கி நடக்க ஆரம்பித்தார். நடுவருக்கு, மெக்கல்லம் கேட்ச் செய்த விதத்தில் சந்தேகம் வர, கெய்லை நிற்க சொல்லி விட்டு, 3-வது நடுவரின் உதவியை நாடினார்.

எல்லைக்கோட்டில் ...

ரீப்ளேயில், மெக்கல்லம் பந்தை பிடித்து உருண்ட போது, அவர் அணிந்திருந்த வட்டவடிவிலான தொப்பி லேசாக எல்லைக்கோட்டில் உரசுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அது சிக்சராக மாற்றப்பட்டது. கெய்லும் தொடர்ந்து விளையாடி அரைசதத்தை கடந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்