முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மருத்துவ மேற்படிப்பில் அரசு மருத்துவர்களின் 50 சதவீதம் இட ஒதுக்கீட்டை உறுதி செய்க : மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

வெள்ளிக்கிழமை, 21 ஏப்ரல் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை  - தமிழக அரசு விதிகளின்படி மருத்துவ மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் 50 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.  இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''மருத்துவக் கல்வியில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு சம்பந்தமாக எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல்  அரசு  உள்ளது.  மருத்துவக் கல்வியில் சேருவதற்கு நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவிற்கு இதுவரை அதிமுக அரசால் சட்ட அந்தஸ்தை பெற முடியவில்லை.

தமிழக சட்டப்பேரவை மசோதாவிற்கு உரிய அழுத்தம் கொடுத்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறவில்லை என்பதால் மருத்துவ மேற்படிப்பில் சேர வேண்டிய அரசு மருத்துவர்கள் இன்றைக்கு வீதிக்கு வந்து போராட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. தமிழகத்தில் உள்ள மருத்துவ மேற்படிப்புகளில் அரசுப் பணியில் இருக்கும் மருத்துவர்கள் சேர்ந்து படிக்கும் வாய்ப்பு பறிபோயிருக்கிறது.  கடந்த 17.4.2017 அன்று சென்னை உயர் நீதிமன்றம், ''இந்திய மருத்துவக் கவுன்சில் வகுத்துள்ள விதிகளின்படி தமிழகத்தில் மருத்துவ மேற்படிப்பிற்கு அனுமதிக்க வேண்டும்'' என்று அளித்துள்ள தீர்ப்பால் இன்றைக்கு பல்வேறு பிரிவுகளில் மருத்துவ மேற்படிப்பிற்கான 1225 இடங்களில் சேருவதற்கான வாய்ப்பு கிராமப்புறங்களிலும், மலை கிராமங்களிலும், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு கிடைக்காமல் போகும் அபாயம் உருவாகி விட்டது. தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் மசோதாவிற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை அதிமுக அரசு குறித்த காலத்தில் பெற்றிருந்தால் இப்படியொரு அவல நிலைமை ஏற்பட்டிருக்காது.

இதனால் மருத்துவ மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு நடைமுறையில் வழங்கப்பட்டு வரும் 50 சதவீத இட ஒதுக்கீட்டிற்கும் பேராபத்து உருவாகியிருக்கிறது. இது கிராமப்புறம் மற்றும் மலைவாழ் மக்களின் சுகாதாரத் தேவைகளுக்காக அயராது பணியாற்றி வரும் அரசு மருத்துவர்களுக்கு பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தி, எதிர்காலத்தில் கிராமப்புற மருத்துவமனைகளை அரசு மருத்துவர்கள் விரும்பாத ஒரு நிலையை ஏற்படுத்தி விடும். ஆகவே அதிமுக அரசு உடனடியாக இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்து, தமிழக அரசு விதிகளின்படி மருத்துவ மேற்படிப்பிற்கு அரசு மருத்துவர்களை சேர்க்கவும், அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் 50 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்யவும் முன் வரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்