முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீலகிரி மாவட்டம் கூடலூரில் வாசனை திரவியக்கண்காட்சியின் நிறைவு விழாவில் சிறப்பாக அரங்குகள் அமைத்தவர்களுக்கு மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார்.

திங்கட்கிழமை, 15 மே 2017      நீலகிரி
Image Unavailable

நீலகிரி மாவட்டம் கூடலூரில் இன்று வாசனை திரவியக்கண்காட்சியின் நிறைவு விழாவில் சிறப்பாக அரங்குகள் அமைத்தவர்களுக்கு மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர்   பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார்.
பரிசுகளை வழங்கி மாவட்ட ஆட்சியத்தலைவர்  பேசியதாவது, “இந்த வாசனை திரவிய கண்காட்சியின் நோக்கமே மக்களிடத்தில் வாசனை திரவியங்களின் நற்பண்புகளையும், பயன்களையும் விளக்குவதன் மூலம், வாசனை திரவியங்களின் பயன்பாட்டை அதிகரிப்பது. அதன்மூலம் வாசனை திரவியங்களை பயிர் செய்யும் விவசாயிகளுக்கு நல்ல இலாபத்தை பெற்று தருவதே ஆகும். அதேபோல இக்கண்காட்சியின் மற்றொரு நோக்கம், வாசனை திரவியங்களை பயிர் செய்யும் விவசாயிகளிடம், வாசனை திரவியங்களை எவ்வாறு மதிப்பு கூட்டுவது என்பது குறித்த விழிப்புணர்வை உருவாக்குவதாகும்.

பண்டைகாலம் கொண்டே வாசனை திரவியங்களை அடையாளம் கண்டு, அதை முறையாக பயன்படுத்தியவர்களும், தேவைக்கு அதிகமாக இருந்தபொழுது அதை வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தவர்களும் இந்தியர்கள். குறிப்பாக சொல்ல வேண்டுமானால், மிளகு, ஏலக்காய், கிராம்பு போன்றவற்றை மேலை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ததாக வரலாறு கூறுகிறது. நமது முன்னோர்கள் உணவே மருந்து, மருந்தே உணவு என வாழ்ந்தனர்.  மருத்துவ குணங்கள் அடங்கிய இவ்வாசனை திரவிய பொருட்களை பயன்படுத்தினர். எனவேதான் நோய் நொடியில்லாமல் வாழ்க்கை நடத்தினர். உதாரணமாக குருமிளகு இரத்த ஓட்டத்தை அதிகரித்து, புற்றுநோயை தடுக்கும். விஷத்தன்மையை முறிக்கவல்லது. ஏலக்காய் சிறுநீரகத்தில் கல் உண்டாவதை தடுக்கும், சிறந்த மனமுடையது, நுரையீரலுக்கு வலு சேர்த்து ஆஸ்துமா நோயை குணப்படுத்தும். கிராம்பு பல் வலிக்கு சிறந்த நிவாரணம் தரவல்லது. பட்டை இரத்த ஓட்டத்தை சீராக்கும், வயிற்றுப்போக்கு, இருமலுக்கு சிறந்த மருந்து. இப்படி ஒவ்வொரு வாசனை திரவிய பொருட்களுக்கும் ஒவ்வொரு மருத்துவ பயன்கள்  உண்டு.

ஆதலால்தான் மொத்தமுள்ள 109 வாசனை திரவியங்களில் 70 வகையான வாசனை திரவிய செடிகளை நாம் பயிரிட்டு வருகிறோம். அதனடைப்படையில் வாசனை திரவிய பயிர்கள் வளர்ப்போரை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் 758 பயனாளிகளுக்கு 500 ஹெக்டர் பரப்பில் இஞ்சி நாற்றுகள் பயிரிடவும், 150 பயனாளிகளுக்கு 105 ஹெக்டர் பரப்பில் கிராம்பு பயிரிடவும், 154 பயனாளிகளுக்கு 160 ஹெக்டர் பரப்பில் ஜாதிக்காய் பயிரிடவும், 452 பயனாளிகளுக்கு 375 பரப்பில் மிளகு பயிரிடவும் வழங்கப்பட்டுள்ளது. 
இவ்விழாவில் ஏலக்காய், கிராம்பு, பட்டை, சோம்பு, சீரகம், ஜாதிபத்திரி, வெந்தயம், மிளகாய், கொத்தமல்லி, குருமிளகு ஆகியவற்றைக் கொண்டு வாசனை திரவிய ஹெலிகாப்டர் வடிவம் அமைக்கப்பட்டுள்ளது சுற்றுலா பயணிகளை கவருவதாக உள்ளது. அதேபோல வாசனை திரவிய பொருட்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ள அலங்கார வளைவு சிறப்பாக உள்ளது. அதை அமைத்த தோட்டக்கலை அலுவலர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து அரங்கங்கள் அமைத்துள்ள விவசாய பெருங்குடி மக்களுக்கும் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். எனவே இங்கு வந்துள்ள சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் அனைவரும் வாசனை திரவிய பொருட்களின் பயனறிந்து, அதனை வெறும் உணவிற்கு சுவை சேர்ப்பதற்காக மட்டும் சேர்க்காமல், அதன் மருத்துவ பயன்களை முறையாக அறிந்து அதனை நாம் பெறும் வகையில் முறையாக பயன்படுத்த வேண்டும்” என்றார்.

இவ்வாசனை திரவியக்கண்காட்சியின் நிறைவு விழாவில் சிறப்பாக அரங்குகள் அமைத்த 20 நபர்களுக்கு மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர்   பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார்.  இந்நிகழ்ச்சியில் கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் மு.திராவிடமணி, கூடலூர் வருவாய் கோட்டாட்சியர் ரா.தினகரன், வட்டாட்சியர் சிவக்குமார் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்