முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பூர் மாவட்டத்தில் பசலி 1426-க்கான வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது

செவ்வாய்க்கிழமை, 16 மே 2017      கோவை
Image Unavailable

திருப்பூர் மாவட்டம், காங்கயம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 1426-ம் பசலிக்கான வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி)  வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன்  முன்னிலையில் மாவட்ட கலெக்டர் ச.ஜெயந்தி   தலைமையில் நடைபெற்றது.

ஜாமபந்தி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களிலும் 1426-ம் பசலிக்கான வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) இன்று (16.05.2017) முதல் நடைபெற உள்ளது.  வருவாய்த் தீர்வாயம் என்பது ஒவ்வொரு பசலி ஆண்டிற்கும் கிராம நிர்வாக அலுவலர் பராமரிக்கும் கிராமக் கணக்குகள் சரியாக உள்ளனவா என ஆய்வு செய்தும், அதை சரியாக உள்ளன என உறுதி செய்து, அதன் அடிப்படையில் கிராமத்தில் நிலவரி மற்றும் பல்வகை அரசு வருவாயை நிர்ணயம் செய்து முடிவு செய்திடும் பணியாகும்.  மேலும், இதன் தொடர்ச்சியாக வருவாய்த் தீர்வாயத்தில் (ஜமாபந்தி) மக்கள் தொடர்பு பணியும் விரிவுபடுத்தப்பட்டு, கிராம மக்கள் வருவாய்த் தீர்வாய அலுவலரிடம் நேரடியாக மனுக்கள் கொடுத்து, உடனடியாக அதை பரிசீலனை செய்து, ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு வருகிறது.  ஆக வருவாய்த் தீர்வாயம் என்பது மக்கள் சேவையில் ஒரு அங்கமாக அமைந்துள்ளது. 

திருப்பூர் மாவட்ட கலெக்டர் காங்கயம் வட்டத்திற்கு வருவாய்த் தீர்வாயம் நடத்தும் அலுவலர் ஆவார். இன்று (16.05.2017) முதல் 23.05.2017 வரை நடைபெறவுள்ள வருவாய்த் தீர்வாயத்தின் (ஜமாபந்தி) முதல் நாளான இன்று காங்கயம் உள்வட்டத்திற்குட்பட்ட கத்தாங்கண்ணி, கணபதிபாளையம், படியூர், சிவன்மலை, தம்மரெட்டிபாளையம், ஆலாம்பாடி, காங்கயம், வீரணம்பாளையம், வட்டமலை மற்றும் காடையூர் ஆகிய பத்து வருவாய் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டு, அதன்மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு அனைத்துத்துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர்  அறிவுறுத்தினார்.  மேலும், இந்த பத்து கிராமங்களைச் சேர்ந்த கிராமக் கணக்குகளையும் மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.

முன்னதாக  காங்கயம் உள்வட்டத்தைச் சேர்ந்த பத்து கிராமங்களான நில அளவை சங்கிலி மற்றும் கோண கட்டை அளவுகளையும் மாவட்ட கலெக்டர்  சரி பார்த்தார்.  இந்நிகழ்வின் போது காங்கயம் சட்டமன்ற உறுப்பினர் உ.தனியரசு, காங்கயம் வட்டாட்சியர் தே.வெங்கடலட்சுமி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெகதீசன், காங்கயம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், காங்கயம் வட்ட துணை வட்டாட்சியர்கள் மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் உட்பட அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்