மக்கும் குப்பை, மக்காத குப்பைகளைத் தரம் பிரித்து சேகரிக்க ஈரோடு மாநகராட்சி திட்டம்

செவ்வாய்க்கிழமை, 6 ஜூன் 2017      ஈரோடு
erode photo no 1

மக்கும் குப்பை, மக்காத குப்பைகளைத் தரம் பிரித்து சேகரிக்க ஈரோடு மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, மாநகராட்சிப் பணியாளர்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டம் ஈரோடு மாநகராட்சி வளாகத்தில்  நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் பேசியதாவது

குப்பைகள்

ஈரோடு மாநகராட்சிப் பகுதியை பொருத்தவரை தினசரி 240 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இந்தக் குப்பைகளை நவீன முறையில் பொதுமக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாதவாறு அழிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களிடம் குப்பைகளைத் தரம் பிரித்து குப்பைத் தொட்டிகளில் போடுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வீடுகள், வணிக நிறுவனங்கள் போன்றவற்றில் இருந்து வெளியேறும் திரவக் கழிவுகள், நீர்நிலைகளில் கலப்பதால் அதற்கு பாதிப்பு ஏற்படுகிறது.இந்த பாதிப்பு மக்களுக்கும்தான் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

தற்போது மாவட்ட நிர்வாகம் சார்பில் புதிய தொழில்நுட்பத்தில் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து நல்ல நீராக மாற்றும் சுத்திகரிப்பு நிலையம் ரூ. 2.40 கோடி மதிப்பீட்டில் சூளை பகுதியில் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

உறுதிமொழியேற்பு

 இதற்கான பணிகள் 2 வார காலத்தில் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவுள்ளது. இதன் செயல்பாடுகளைக் கண்காணிக்க ஐஐடி பேராசிரியர்கள் தலைமையில் ஒரு குழுவும், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், குடிநீர் வடிகால் வாரியம் ஆகிய துறைகளைக் கொண்ட ஒரு குழுவும் என இரு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுவினர் 3 மாதங்கள் இயந்திரத்தின் செயல்பாடுகளைக் கண்டறிந்து அறிக்கை அளிப்பார்கள். அதனடிப்படையில், தேவையான இடங்களில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படவுள்ளது. இதனை செயல்படுத்தும்போது சுற்றுச்சூழல் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என்றார். முன்னதாக, ஈரோடு வ.உ.சி.பூங்கா நடைபாதை பகுதியில் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை காலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மத்திய அரசின் ஊரக வளர்ச்சிப் பிரிவு துணை இயக்குநர் அமித்ஷாகுப்தா கலந்துகொண்டு சுற்றுச்சூழல் குறித்துப் பேசினார். இந்நிகழ்ச்சியில், ஈரோடு மக்களவைத் தொகுதி உறுப்பினர் செல்வகுமார சின்னையன், ஈரோடு கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ. தென்னரசு, மாநகராட்சி ஆணையர் சீனி அஜ்மல்கான்,செயற்பொறியாளர் விஜயகுமார்,  உதவி ஆணையர்களஅசோக்குமார், ஆறுமுகம், சண்முகவடிவு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில், நடைபயிற்சிக்கு வந்த பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டு சுற்றுச்சூழல் குறித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். மேலும், சுற்றுச்சூழலை விளக்கும் வகையில் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து