காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு

சனிக்கிழமை, 17 ஜூன் 2017      தமிழகம்
Mettur Dam 2017 6 17

பெங்களூரு : கர்நாடகா மற்றும் கேரளாவில் மழை தொடரும் பட்சத்தில் மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் மேட்டூர் அணையை நம்பியுள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பருவ மழை தீவிரம்

கர்நாடக மாநிலத்தில் கடந்த 10 நாட்களாக பெங்களூரு உள்பட பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. ஆனால் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யவில்லை. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்தள்ளது. இதில் காவிரி நதி உருவாகும் குடகு மாவட்டத்தில் உள்ள தலக்காவிரி, பாகமண்டலா உள்ளிட்ட நீர்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.


கிருஷ்ணராஜசாகர் அணைக்கு ...

இதே போல மைசூரு, மாண்டியா, ராம்நகர் பெங்களூரு ஆகிய மாவட்டங்களிலும் இரவு நேரங்களில் தொடர் மழை பெய்து வருவதால் வறண்டு கிடந்த காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மாண்டியா மாவட்டத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்றும் கூடுதலாக தண்ணீர் வந்தது.

தண்ணீர் வரத்து அதிகரிப்பு

கடந்த வாரத்தில் வினாடிக்கு 600 கன அடி தண்ணீர் வந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை அணைக்கு வினாடிக்கு 1500 கன அடியாக தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் வறண்டு கிடந்த கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் மெல்ல மெல்ல உயர தொடங்கி உள்ளது. மொத்தம் 124.8 அடி கொள்ளளவு கொண்ட கிருஷ்ணராஜசாகர் அணையில் நேற்று நிலவரப்படி 68.60 அடி நீர் இருப்பு உள்ளது. அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிக்கும் பட்சத்தில் இனி வரும் நாட்களில் நீர் மட்டம் கணிசமாக உயர வாய்ப்புள்ளது.

விவசாயிகள் மகிழ்ச்சி

இதே போல கேரளாவில் பருவ மழை தீவிரம் அடைந்துள்ளதால் மைசூரு மாவட்டத்தில் உள்ள கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் உயர தொடங்கி உள்ளது. காவிரியின் குறுக்கே உள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய இரு முக்கிய அணைகளுக்கும் கணிசமான அளவில் நீர்வரத்து அதிகரித்து இருப்பதால் கர்நாடக விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேட்டூர் அணை

கர்நாடகா மற்றும் கேரளாவில் பலத்த மழை பெய்து வருவதால் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பும் போது தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விட வாய்ப்புள்ளது. இந்த தண்ணீர் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வந்தடையும். இந்த மழை தொடரும் பட்சத்தில் மேட்டூர் அணைக்கும் இனி வரும் நாட்களில் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் மேட்டூர் அணையை நம்பியுள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நீர்மட்டம் சரிவு

கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் கர்நாடகா-தமிழக எல்லையான பிலிகுண்டுலு பகுதியில் தற்போது 800 கன அடி தண்ணீர் வருகிறது. இந்த தண்ணீர் நேராக ஒகேனக்கல் வருவதால் ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது. காவிரி ஆற்றிலும் தண்ணீர் ஓடுகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 130 கன அடியாக இருந்த நீர் வரத்து நேற்று மேலும் சரிந்து 106 கன அடியானது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்கு 500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணைக்கு வரும் தண்ணீரை விட கூடுதல் தண்ணீர் அணையில் இருந்து வெளியேற்றப்படுவதால் அணையின் நீர் மட்டம் சரிந்து வருகிறது. நேற்று முன்தினம் 23.04 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 22.91 அடியாக சரிந்தது.

இந்த வார ராசிபலன் - 17.06.2018 முதல் 23.06.2018 வரை | Weekly Tamil Horoscope from 17.06.2018 to 23.06.2018

Kashmiri Capscicum Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து