முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க தலைவராக என்.ராமச்சந்திரன் போட்டியின்றி தேர்வு

சனிக்கிழமை, 17 ஜூன் 2017      விளையாட்டு
Image Unavailable

சென்னை :  தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க தலைவராக 68 வயதான என்.ராமச்சந்திரன் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஐகோர்ட்டில் வழக்கு

தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க புதிய நிர்வாகிகள் தேர்தல் (2017-2021) சென்னையில் கடந்த மாதம் (மே) 27-ந் தேதி நடந்தது. இந்த தேர்தலை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. கோர்ட்டு உத்தரவின் படி தேர்தல் முடிவு அறிவிக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

ஒருமனதாக தேர்வு

இந்த நிலையில் வழக்கு வாபஸ் பெறப்பட்டதை தொடர்ந்து தேர்தலை நடத்திய அதிகாரியான முன்னாள் நீதிபதி எஸ்.சம்பந்தம் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க நிர்வாகிகள் தேர்தல் முடிவை வெளியிட்டார். தலைவர் பதவிக்கு என்.ராமச்சந்திரனை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை. இருப்பினும் உறுப்பினர்கள் வாக்களித்ததன் அடிப்படையில் அவர் 55 வாக்குகளுடன் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 68 வயதான என்.ராமச்சந்திரன் இந்திய ஒலிம்பிக் சங்க தலைவராகவும், தமிழ்நாடு ஸ்குவாஷ் சங்க தலைவராகவும், இந்திய ஸ்குவாஷ் சம்மேளன புரவலராகவும் உள்ளார்.

துணை தலைவர்கள்

ஐசரி கே.கணேஷ் (தேக்வாண்டோ), எஸ்.வாசுதேவன் (கைப்பந்து), சோலைராஜா (கபடி), எம்.ராமசுப்பிரமணி (ஹேண்ட்பால்), நாராயணசாமி (டிரையத்லான்), டி.வி.சீத்தாராமராவ் (துப்பாக்கி சுடுதல்) ஆகியோர் துணைத்தலைவராகவும், பெர்னாண்டோ (கால்பந்து) பொதுச்செயலாளராகவும், கே.ராஜேந்திரன் (ஸ்குவாஷ்) பொருளாளராகவும், பாலாஜி மரடாபா (துடுப்பு படகு), ஏ.சரவணன் (ஹேண்ட்பால்) ஆகியோர் இணைசெயலாளராகவும், ஏ.கே.கருணாகரன் (குத்துச்சண்டை), எம்.தமிழ்செல்வன் (பளுதூக்குதல்), ஹிதேன் குமார் ஜோஷி (டென்னிஸ்), ஏ.ஷபியுல்லா (கபடி), பி.பிரபு (ஜிம்னாஸ்டிக்ஸ்), எஸ்.ராதாகிருஷ்ணன் (சைக்கிளிங்), செந்தில் தியாகராஜன் (ரக்பி), டி.ஜெயராமன் (நீச்சல்), அப்பாவு பாண்டியன் (கோ-கோ) ஆகியோர் செயற்குழு உறுப்பினர்களாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

மேம்படுத்த நடவடிக்கைகள்

தலைவராக தேர்வு செய்யப்பட்ட என்.ராமச்சந்திரன் அளித்த பேட்டியில், ‘16 ஆண்டு காலமாக தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க தலைவராக இருந்த டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் எந்தவித சர்ச்சைக்கும் இடம் அளிக்காமல் ஆக்கப்பூர்வாக விளையாட்டு துறையின் வளர்ச்சிக்கு பணியாற்றினார். அவரது வழியில் செயல்பட்டு தமிழகத்தில் விளையாட்டு கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

தனியாக கட்டிடம்

தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்துக்கு தனியாக கட்டிடம் கட்ட முயற்சி மேற்கொள்ளப்படும். விளையாட்டு வீரர்-வீராங்கனைகளின் நலனுக்கு முக்கியத்துவம் அளித்து செயல்படுவோம். மாநில விளையாட்டு சங்கங்களின் நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து அந்தந்த விளையாட்டு வளர்ச்சிக்கு தேவையான நிதியை ஸ்பான்சர் மூலம் திரட்ட வழிவகை செய்யப்படும். 2032-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்துவதற்கான ஆரம்ப கட்ட பணிகளை இந்திய ஒலிம்பிக் சங்கம் மேற்கொண்டுள்ளது’ என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து