லண்டனில் வேன் மோதிய சம்பவம் பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் - பிரிட்டன் பிரதமர் தெரசாமே

லண்டன் : லண்டனில் வேன் மோதிய சம்பவம் பயங்கரவாத தாக்குதலாக இருக்க கூடும் என அந்நாட்டு பிரதமர் தெரசாமே தெரிவித்துள்ளார்.
மீண்டும் தாக்குதல்
இங்கிலாந்தில் அண்மைக்கலாமாக பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. ஐ.எஸ் பயங்கரவாத இயக்கம் இந்த தாக்குதல்களை நிகழ்த்துகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு மீண்டும் வேன் மூலம் மோதி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வடக்கு லண்டனில் உள்ள செவன் சிஸ்டர்ஸ் சாலையில் உள்ள மசூதி ஒன்றில் தொழுகை நடத்தி விட்டு வந்த பொதுமக்கள் மீது வாகன தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. நடைபாதையில் நடந்து சென்ற மக்கள் மீது வேன் ஒன்று மோதியது. இதனால் அலறியடித்துக் கொண்டு பொதுமக்கள் ஓட்டம் பிடித்தனர். இச்சம்பவத்தால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது.
8 பேர் காயம்
பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் விரைந்து வந்து வேன் ஓட்டி வந்தவரை கைது செய்தனர். ஆனால் அந்த நபர் குறித்து போலீசார் எந்தவித தகவலும் தெரிவிக்கவில்லை. ஆனால் அந்த வேனை சம்பந்தப்பட்ட நபர் திட்டமிட்டு மசூதி தொழுகை முடிந்து திரும்பியவர்கள் மீது மோதி இருக்கிறார் என பிரிட்டன் முஸ்லிம் கவுன்சில் தலைவர் ஹருன்கான் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில் ஒருவர் பலியானார். 8 பேர் காயம் அடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் சந்தேகம்
இந்த நிலையில், லண்டனில் பாதசாரிகள் மீது வேன் மூலம் நிகழ்த்தப்பட்ட தாக்குதல் பயங்கரவாத தாக்குதலாக இருக்க வாய்ப்பிருப்பதாக அந்நாட்டு பிரதமர் தெரசாமே தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல் தொடர்பாக அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையும் நடத்தினார்.