முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

35 அரசு மருத்துவமனைகளில் யோகா, இயற்கை மருத்துவ வாழ்வியல் மையம்: அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தகவல்

புதன்கிழமை, 21 ஜூன் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை, உலகம் முழுவதும் ஆண்டுதோறும் ஜூன் 21--ம் தேதி உலக யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு மூன்றாவது உலக யோகா தினம் அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு நேற்று (21-ந் தேதி) மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பாக, சென்னை ஓமாந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் 100-க்கும் மேற்பட்ட தன்னார்வ தொண்டர்கள் யோகா பயிற்சியில் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் பங்கேற்று பேசியதாவது:-

சாதி, மதம், இனம், மொழி, நாடு போன்ற பல்வேறு வேறுபாடுகளைக் கடந்து அனைவருக்கும் பொதுவானதாக, உடல் மற்றும் மனதின் ஆரோக்கியத்திற்கு உறுதுணையாக இருப்பதே யோகா. இது ஓர் உள்ளார்ந்த அறிவியலை தன்னோடே கொண்டுள்ளது. இதன் மூலம் தன்னைத்தானே புரிந்துகொள்ளக்கூடிய, சுயம் உணர்தல் என்ற நிலையை எளிதாக அடையலாம். யோகா ஆன்மாவிற்கு அத்தியாவசியமான ஒன்று அது ஆன்மாவின் கருவிகளை உடல் மற்றும் மனதை ஒருங்கிணைக்கிறது. ஆண்டுதோறும் ஜூன் 21–-ம் தேதி வருடத்தின் நீண்ட பகல் கொண்ட தினம் என்பதினாலும், யோகா நம் வாழ்வின் ஆயுளை நீட்டிப்பதினாலும் இந்த நாளில் உலக யோகா தினம் கொண்டாடப்படுகிறது. யோகாவின் வியக்க வைக்கும் பயன்கள், ரத்தக்கொதிப்பு, நீரிழிவு, சுவாசக் கோளாறு, உடல்பருமன் போன்ற வாழ்வில் நோய்களுக்கு தீர்வு காண்பதற்கு யோகா பெரிதும் உதவுகிறது என்று ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

மன அழுத்தம், மனச்சோர்வு, கவலை, பதற்றம்

மேலும், மன அழுத்தம், மனச்சோர்வு, கவலை, பதற்றம் போன்றவற்றை குறைப்பதற்கு உதவுகிறது. பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் மற்றும் ஹார்மோன் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண உதவுகிறது. யோகாவை சரியான முறையில் எப்படி செய்யவேண்டும் என்று அதற்குரிய யோகா மருத்துவரிடம் அல்லது பயிற்சியாளரிடம் கற்றுக்கொண்ட பிறகு செய்வதால் அதனுடைய முழுமையான பயனை நாம் பெறலாம். யோகாவின் அவசியத்தையும், அதனால், கிடைக்கும் நன்மைகளையும் உலக மக்கள் அனைவரும் அறிந்து கொள்வதோடு, அதன் பயன்களையும் பெறவேண்டும் என்பதே இந்த உலக யோகா தினத்தை அனுசரிப்பதற்கான முக்கிய நோக்கமாக உள்ளது.அம்மாவின் அரசில் தமிழ்நாட்டில் உள்ள யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியில் யோகா பட்ட படிப்பும், யோகா பட்ட மேற்படிப்பும் மற்றும் பட்ட மேற்படிப்பில் இயற்கை மருத்துவம், யோகா மற்றும் அக்குபஞ்சர் பாடங்கள் சிறப்பு பிரிவுகளாக பயிற்றுவிக்கப்படுகிறது.புரட்சித்தலைவி அம்மா 110 விதியின் கீழ் 2013–ம் ஆண்டு அறிவித்ததின் பொருட்டு யோகா மற்றும் இயற்கை மருத்துவ வாழ்வியல் மையம் 19 மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் 31 மாவட்ட தலைமை மருத்துவ மனைகளிலும் ஆரம்பிக்கப்பட்டு யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சை முறைகளை வழங்கி வருகிறது. சென்ற ஆண்டு தமிழகத்தில் 23,53,623, நோயாளிகள் யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தால் பயன்பெற்றுள்ளனர். இவ்வனைத்து மையங்களிலும் தலா ஒரு ஆண் மற்றும் பெண் சிகிச்சை உதவியாளர்கள், யோகா மற்றும் இயற்கை மருத்துவர் ஆலோசனைப்படி மசாஜ் சிகிச்சை, மண் சிகிச்சை, வாழை இலை, குளியல், யோகா சிகிச்சை, அக்குபஞ்சர், இயன்முறை மருத்துவம் போன்ற பக்க விளைவுகளற்ற இயற்கை முறை சிகிச்சைகளை வழங்கி வருகின்றனர்.

31 தாலுகா மருத்துவமனைகளிலும்…

மேலும், யோகா மற்றும் இயற்கை மருத்துவத்திற்கு பொதுமக்களிடையே உள்ள வரவேற்பை உணர்ந்து மறைந்த அம்மாவின் அறிவிப்பின்படி 31 தாலுகா மருத்துவமனைகளிலும், சென்னை அரசினர் ராயப்பேட்டை மருத்துவமனை, கே.கே. நகர் அரசு புனர்வாழ்வு மருத்துவமனை, கீழ்பாக்கம் அரசு மனநல காப்பகம், எழும்பூர் அரசு மகப்பேறு மற்றும் மகளிர் நோய் இயல் நிலையம் உட்பட மொத்தம் 35 யோகா மற்றும் இயற்கை மருத்துவ வாழ்வியல் மையம் தொடங்க இவ்வாண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை அரும்பாக்கம், அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இயற்கை வழியில் உடற்பருமனை குறைக்க சிறப்பு சிகிச்சைகள் தொடங்கி வைக்கப்பட்டது. இச்சிகிச்சை முறையில் எவ்வித பக்கவிளைவுகள் இல்லாத சிகிச்சைகளான நீராவி குளியல், வாழை இலை குளியல், மண் குளியல், இயற்கை உணவு, உண்ணா நோன்பு, இயற்கை மூலிகை சிகிச்சை மற்றும் யோகா சிகிச்சையும் எவ்வித கட்டணமுமில்லாமல் அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இவ்விழாவில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை ஆணையர் மோகன் பியாரே, தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்க திட்ட இயக்குனர் கி. செந்தில்ராஜ், மருத்துவ கல்வி இயக்குனர் எட்வின் ஜோ மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து