ஈரோடு மாநகர பேருந்து நிலையத்தில்

புதன்கிழமை, 21 ஜூன் 2017      ஈரோடு
21 06 2017 ph 2

ஈரோடு மாவட்ட கலெக்டர் டாக்டர்.எஸ்.பிரபாகர்   மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

உள் மற்றும் புற நோயாளிகளின் பிரிவிற்கு நேரில் சென்று நோயாளிகளை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். மேலும் உள் நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தினை பரிசோதனை செய்ததுடன் மருத்துவமனையினை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டுமென இணை இயக்குநர் (மருத்துவப்பணிகள்) அவர்களுக்கு உத்தரவிட்டார்.  

அதனைத்தொடர்ந்து ஈரோடு மாவட்ட பேருந்து நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் துப்புரவு பணியினை ஆய்வு செய்தார். பாலூட்டும் தாய்மார்களுக்கு பாலூட்டும் அறையில் உள்ள வசதிகளை கேட்டறிந்தார். மேலும் பேருந்து நிலையத்தில் இயங்கிவரும் கண்காணிப்பு அறையினை ஆய்வு செய்ததுடன் உடனடியாக 6 புதிய கண்காணிப்பு கேமிராக்களை பொருத்தவும் பொதுமக்களின் பாதுகாப்பினை பலப்படுத்த மேலும் புதிய 13 கண்காணிப்பு கேமிராக்கள் பெருத்தவும், மேலும் ஒலிபெருக்கி வசதியினையும் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து ஈரோடு மாநகராட்சியின் சார்பில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் டெங்கு கொசு ஒழிப்பு பணியினை பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.  

மேலும் கூரபாளையம், கதிரம்பட்டி ஆகிய ஊராட்சி பகுதிகளில்  மேற்கொள்ளப்பட்டு வரும் ஒருங்கிணைந்த துப்புரவு பணியினை மாவட்ட கலெக்டர்  பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து திண்டல் பகுதியில் கட்டப்பட்டுவரும் மாவட்ட வருவாய் அலுவலர் குடியிருப்பு கட்டுமானப்பணியினையும் மாவட்ட கலெக்டர் டாக்டர்.எஸ்.பிரபாகர்   பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

இந்த ஆய்வின் போது மாநகராட்சி ஆணையாளர் சீனிஅஜ்மல்கான், இணை இயக்குநர் (மருத்துவப்பணிகள்) மரு.கனகாசலக்குமார், செயற்பொறியாளர் (பொதுப்பணித்துறை) ஆர்.இளஞ்செழியன் ஆகியோர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து