முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நன்மைகள் தரும் மாதம் ரமலான்

வியாழக்கிழமை, 22 ஜூன் 2017      ஆன்மிகம்
Image Unavailable

விவசாயிகளுக்கு அறுவடைக்காலம் மகிழ்ச்சியைத்தரும் ஒரு சீசன். இது போன்றே அனைத்து வியாபாரத்திற்கும் லாபங்களை வாரி வழங்கும் ஒரு சீசன் உண்டு. அந்தக் காலங்களில் இரவு, பகல் பாராமல் எப்படி நாம் உழைத்து உலக வருமானத்தைப் பெருக்கிக் கொள்ள முயற்சி செய்கிறோமோ அதைப் போலவே மறுமையில் நாம் நிம்மதியாக இருப்பதற்காக தான் படைத்த பன்னிரண்டு மாதங்களில் இரவு, பகல் 24 மணி நேரமும் நல்ல அமல்களில் ஈடுபடும் ஒரு சீசனாக ரமலானை அல்லாஹ் நமக்கு அருளியுள்ளான்.

பாவங்கள் அழிக்கப்படும் மாதம்:

இறை நம்பிக்கையாளர்களே.. உங்களுக்கு முன் இருந்த (நபிமார்களை பின்பற்றிய)வர்கள் மீது நோன்பு கடமையாக்கப்பட்டதை போன்று உ;ஙகள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டிருக்கிறது. (அதன் மூலம்) நீங்கள் இறையச்சமுள்ளவர்களாய்த் திகழக்கூடும் (அல்குர்ஆன் 2:183)

ஹிஜ்ரீ இரண்டாம் வருடம் ஷபான் மாதம் மேற்கூறப்பட்ட இறை வசனத்தின் மூலமாக அல்லாஹ் முஸ்லிம்களின் மீது நோன்பை கடமையாக்கினான்.

ரமலான் என்பது ரமல் என்னும் மூலச் சொல்லிலிருந்து பிறந்ததாகும். ரமல் என்பதற்குக் கரித்தல், பொசுக்குதல் என்பது பொருளாகும்.

இப்புனிதமிகு மாதத்தில் நோன்பு நோற்று இறை வழிபாட்டில் ஈடுபட்டு அருள் மறை குர்ஆனை ஓதி, இரவுக்காலத்தில் நின்று வணங்கி, இறைவனிடம் கையேந்தி இறையஞ்சிடும் பொழுது அடியாரின் பாவங்கள் கரிக்கப்படுகின்றன.

அல்லாஹ்விற்குச் சொந்தமானது

ஆதமின் மகனுடைய ஒவ்வொரு செயலும் அவனுக்கே உரியது. நோன்பைத் தவிர, நோன்பு எனக்குரியது. நனே அதற்குரிய கூலியைக் கொடுக்கிறேன். அல்லாஹ_த்தஆலா ஹதீஸ் குத்ஸியில் கூறியுள்ளான். நோன்பு அல்லாஹ்வுக்கு சொந்தமானதாகும். எனவேதான் எல்லா வணக்கங்களும் அல்லாஹ்வுக்குச் சொந்தமானவையாகயிருந்தாலும் நோன்பு மேலானதாக ஆக்கப்பட்டிருக்கிறது. பூமி முழுவதும் அல்லாஹ்வுக்குச் சொந்தமானதாயிருந்தாலும் பைத்துல்லாஹ் என்னும் அல்லாஹ்வின் வீடு மட்டும் அல்லாஹ்வுக்கும் அதற்குமுள்ள விசேஷ உறவின் காரணமாக மேலானதாக ஆக்கப்பட்டிருப்பதை உதாரணமாக கூறலாம்.

தராவீஹ் தொழுகை

தராவீஹ் என்பது தர்வீஹ் என்ற சொல்லின் பன்மையாகும். இவ்வார்த்தைக்கு இளைப்பாறுதல், ஓய்வு பெறுதல் என்பது பொருள். இந்தத் தொழுகையை தொழக்கூடியவர்கள் ஒவ்வொரு நான்கு ரக் அத்துகளுக்கு மத்தியில் சற்று நேரம் ஓய்வு பெறுவதால் இத்தொழுகைக்கு தராவீஹ் என்று பெயரிடப்பட்டது. ரமலான் மாதத்தில் ஒரு இரவில் ஹஜ்ரத் உமர்(ரலி) அவர்களுடன் நான் பள்ளிவாசலுக்குச் சென்றேன். மக்களில் சிலர் தனியாகவும் மற்றும் சிலர் சிறு சிறு கூட்டமாகவும் நின்று தராவீஹ் தொழுது கொண்டிருந்தார்கள். இதைப் பார்த்த ஹஜ்ரத் உமர்(ரலி)  மக்கள் இப்படி பிரிந்து, பிரிந்து தொழுவதை விட ஓர் இமாமின் பின் ஒன்றாகச் சேர்ந்து தொழுவது நன்றாக இருக்கும் எனக்கூறி எல்லோரையும் ஹஜ்ரத் உபை இப்னு கஅப் (ரலி) அவர்களுக்குப் பின்னால் நின்று ஜமாஅத்தாக தொழுவதற்கு ஏற்பாடு செய்தார்கள்.

அறிவிப்பவர்: ஹஜ்ரத் அப்துர் ரஹ்மான்(ரலி). ஆதாரம்: புஹாரி, முஸ்லிம்.

இந்த ஹதீஸின் படி தராவீஹ் தொழுகையை இமாம் ஜமாஅத்துடன் நிறைவேற்றுகின்ற முறையை ஏற்படுத்தியவர் ஹஜ்ரத் உமர்(ரலி)  என்று தெளிவாகிறது. அவர்களுது காலத்திலே இருந்த எந்த ஸஹாப்பகளும் இதைத் தடுக்கவில்லை. எனவே ஏகோபித்த முடிவின்படி தராவீஹ் தொழுகை 20 ரக்அத் இமாமம் ஜமாத்துடன் தொழுவதை ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்களின் காலம் முதல் சுன்னத் ஆக்கப்பட்டது.

தராவீஹ் தொழுகையை பேணுதலாக தொழ வேண்டும்.தராவீஹ் தொழாமல் நோன்பு வைப்பது, மணல் மட்டும் வைத்து வீடு கட்டுவது போல் என்று நபி (ஸல்)  கூறினார்கள்.
நோன்பின் நிய்யத்:

பஜருக்கு முன்பே நோன்பு வைக்க எவர் எண்ணவில்லையோ அவருக்கு நோன்பு இல்லை என நபி(ஸல்)  கூறினார்கள்
அறிவிப்பவர் உமர்(ரலி), ஆதராம்: அபூதாவூத்

ரமலான் மாத்ததில் நோன்பு பற்றிய எண்ணமே இல்லாமல் பகல் முழுவரும் சாப்பிடாமல் நீர் பருகாமல் இருந்தால் நோன்பை நிறைவேற்றியவனா ஆகமாட்டான்.
சுவனம்: (சுநுயுனுலு)

இப்னு அப்பாஸ்(ரலி)  அறிவிக்கிறார்கள்: ரசூலுல்லாஹ் (ஸல்)  கூறினார்கள். எனது உம்மத்தினர் ரமலானின் சிறப்பை அறிந்திடுவார்களாயின் ஆண்டு முழுவதும் ரமலானாக இருந்திட வேண்டுமென்று மேலெண்ணம் கொள்வார்கள். ஏனென்றால் அதில் தான் நற்செயல்கள் யாவும் ஒன்று திரட்டப்படுகின்றன. வணக்கங்கள் ஒப்புக் கொள்ளப்படுகின்றன. இறைஞ்சுதல் (துஆ) கள் ஏற்கப்படுகின்றன. பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. மேலும் நோன்பாளிகளுக்காக சுவனம் ஆயத்தப்படுத்தப் படுகின்றன.

ஆதாரம்: ஜூப்ததுல் வாயிளீன்

நான்கு பேர்களுக்கு சுவனம் தயார்படுத்தப்படுகின்றது

(1) குர்ஆன் ஓதுபவர் (2) நாவைப் பேணுபவர்  (3) பசித்தவர்களுக்கு உணவளிப்பவர்  (4) நோன்பாளி 

ஆதாரம்: ரவ்னக்குல் மஜாலிஸ்

 பரக்கத் என்பது ஹரக்கத்தாகிவிடும்

நாயகம் (ஸல்)  கூறியுள்ளார்கள்:

பேரீத்தம் பழத்தைக் கொண்டு நோன்பு திறங்கள்: நிச்சயமாக அதில் பரக்கத் என்னும் நன்மையுள்ளது. அதனைப் பெற்றுக் கொள்ளாவிடின் தண்ணீர் கொண்டு திறங்கள்: நிச்சயமாக அது தூய்மையுள்ளதாகும். 

ஆதாரம்: திர்மிதி, அபூதாவுது.

 நபி(ஸல்)  பரக்கத் என்று கூறியுள்ளார்கள். பரக்கத் என்பது க்களுக்கு புலப்படுவதல்ல. பேரீச்சம் பழத்தால் நோன்பு திறந்திடுங்கள் என்ற நபி(ஸல்) அவர்களின் கூற்றில் மருத்துவம் பொதிந்துள்ளது. அவர்களின் கூற்றை புறக்கணித்து விட்டு நோன்பு திறந்தவுடன், கடினமாக உணவுகளை உண்ணுவோமாயின் பரக்கத் என்பது ஹரக்கத்தாகி தூக்கம் மேலிட்டு தராவீஹ் தொழுகை விடுபட்டு போவதுடன் உடல்நலம் கெடுவதற்கு வாய்ப்பு உள்ளது.

நோன்பை வீணாக்குபவை:

ஐந்து செயல்கள் நோன்பை வீணாக்கி விடுகின்றன. அதாவது நன்மைகளை வீணாக்கி விடுகின்றன.

1)பொய்யுரைத்தல் 2) புறம் பேசுதல் 3) பொய் சத்தியம் செய்தல் 4) கோள் சொல்லுதல் 5) தீய பார்வை

ஆதாரம்: ஜூப்ததுல் வாயிளீன்

வேதங்கள் அருளப்பட்ட மாதம்

ரமலான் மாதம் எத்தகைய தென்றால் அம்மாதத்தில் தான் மனிதர்களுக்கு (முழுமையான) வழி காட்டியாகவும், மேலும் நேர்வழியில் தெளிவான அறிவுரைக் கொண்டதும், சத்தியத்தையும், அசத்தியத்தையும் பிரித்துக் காட்டக் கூடியதுமான குர்ஆன் இறக்கியருளப்பட்டது. எனவே இனி உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அம்மாதம் முழுவதும் நோன்பு நோற்க வேண்டும்.
(அல்குர்ஆன் 2:185)

ரமலான் மாதத்தின் முதல்இரவில் தான் நபி இப்ராஹிம் (அலை) அவர்களுக்கு சுஹ்புகள் அருளப்பட்டன. நபி மூஸா (அலை) அவர்களுக்கு தவ் ராத் வேதம் ரமலான் பிறை 6ல் அருளப்பட்டது. நபி தாவூத் (அலை) அவர்களுக்கு ஜபூர் வேதம் ரமலான் பிறை 24 ல் அருளப்பட்டது. நபி ஈஸா (அலை) அவர்களுக்கு இன்ஜில் வேதம் ரமலான் பிறை 13 ல் அருளப்பட்டது. நபி (ஸல்) அவர்களுக்கு ்குர்ஆன் ரமலானில் லைலத்துல் கத்ரு இரவில் அருளப்பட்டது.

மகிமை மிக்க இரவு

லைத்துல் கத்ரு மகிமைமிக்க இரவு. ஆயிரம் மாதங்களை விட மேலானதாகும்.
(அல்குர்ஆன் 109:3)

  லைத்துல் கத்ரு என்பது மகத்தான இரவைக் குறிக்கும். அவ்விரவில் செய்யப்படும் வணக்கங்கள் நற்செயல்கள் ஆயிரம் மாதம் வணக்கத்தை விடச் சிறந்தவையாகும். அல்லாஹ்வினால் நபி(ஸல்) அவர்களது உம்மத்தவர்களுக்கு கிடைத்துள்ள அருட்கொடைகளில் இது சிறப்பிற்குரியதாகும்.

இதிகாப்:

இதிகாப் என்பது ஒரு வணக்கம். சுன்னத்தாகும். பள்ளிவாசலைத் தவிர வேறு இடங்களில் இதனை நிறைவேற்ற முடியாது. ஆண்கள் பள்ளிவாசல்களிலும் பெண்கள் வீட்டிலுள்ள அறைகளிலும் தனித்து இதிகாப் இருக்க வேண்டும்.

நபி (ஸல்)  மரணிக்கும் வரைக்கும் ரமலான் மாதத்தின் கடைசிப் பத்தில் இதிகாப் இருக்கக்கூடியவர்களாக இருந்தார்கள்.  மரணித்த பிறகு அவர்களின் மனைவிமார்கள் இதிகாப் இருந்தார்கள்
ஆதாரம் : புஹாரி

நோன்பின் கடைசிப் பத்தில் இதிகாப் இருப்பதினால் லைலத்துல் கத்ரின் இரவை அடைந்து கொள்ளலாம். இறைவனிடத்தில் நமது தேவைகளை முன்வைத்து போராடக்கூடிய ஒரு அமல் இதிகாப் ஆகும்.
ஸதக்கத்துல் பித்ர்

நோன்பில் நிகழ்ந்த தவறிலிருந்து தூய்மை படுத்துவதற்காகவும், ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும் என்பதற்காகவும் நபி(ஸல்)  ஸதக்கத்துல் பித்தைக் கடமையாக்கினார்கள்.
ஆதாரம்: அபுதாவூத்

ரமலான் மாத வழிபாடுகளில் ஸதக்கத்துல் பித்ர் எனும் பெருநாள் தருமம் ஒன்றாகும்.

இஸ்லாத்தில் இரு பெரு நாட்களில் நோன்புப் பெருநாளும் ஒன்று. வருடம் முழுவதும் வறுமையில் வாடி வதங்கி உணவிற்கு வழியின்றி திண்டாடும் நம் முஸ்லிம் சகோதரர்கள் எத்தனை எத்தனையோ... இவர்கள் பெருநாளில் மட்டுமாவது தம் வறுமையை மறந்து மகிழ்வாக இருக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் நம் ஏழை சகோதரர்களின் துயர் துடைக்க இஸ்லாம் அத்தர்மத்தை செய்தவர் நோன்பு நோற்றிருக்கும் போது செய்த தவறுகளுக்கு பரிகாரமாகவும் அமைகின்றது.

ஈதுல் பித்ரு இரவை வீணாக்காதே..

நாயகம் (ஸல்)  நவின்றுள்ளார்கள். பெருநாளின் இரவில் வணக்கங்கள் புரிந்து ஹயாத்தாக்காமல் அது அவனை விட்டும் சென்று விட்டது.  இத்தகைய மனிதனின் மூக்கு நாசமாகட்டும்.
இப்புனித மாதத்தின் கடைசி இரவான ஈதுல்பித்ரு இரவில் நின்று வணங்கிட வேண்டுமென்று நபி (ஸல்)  கூறியுள்ளார்கள். ஆனால் பெரும்பாலானோர் ரமலானுடைய களைப்பால் இந்த இரவில் இன்பமாக தூங்கி வேடிக்கைகளிலும், வீண் அலங்காரம் செய்வதிலும் ஈடுபட்டு விடுகின்றனர். மாற்று மதத்தவர்கள் கொண்டாடுவது போன்று முஸ்லிம்களும் தங்கள் வீடுகளையும், தெருக்களையும் விளக்கு அலங்காரம் செய்து மகிழ்கின்றனர். இச்செயல் பித்அத்தாகும். புனித இரவுகளையும், நாட்களையும் கண்ணியப்படுத்தும் முறை அறியாது விளக்கு அலங்காரங்களில் ஈடுபட்டிடும் செயல்கள் யாவும் தூய இஸ்லாத்திற்கு எதிரானது..

அல்லாஹ்வின் சந்திப்பு

நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சி (1). நோன்பு திறக்கும் போது. (2). மறுமையில் தனது இறைவனைச் சந்திக்கும் போது
ஆதாரம்: முஸ்லிம்

இஸ்லாமிய கடமையில் மூன்றாவது கட்டளையான நோன்பின் மூலம் எண்ணற்ற நன்மைகளை மனித சமுதாயம் பெறுவதுடன் சொர்க்கத்தின் உயர்ந்த பதவிகளையும், எல்லாவற்றையும் விட அல்லாஹ்வின் சந்திப்பையும், ்பொருத்தத்தையும் முமினான அடியான் பெற்றுக் கொள்கிறான். எனவே நாம் அனைவரும் நோன்பை பேணுதலாக வைத்து, ரமலானில் நல் அமல் செய்து, அந்த பாக்கியங்கi பெற முயற்சிப்போம்.

மெளலவி எஸ்.அமானுல்லா அன்சாரி இமாம்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து