முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல் ஒரு நாள் போட்டி: டிரினிடாட்டில் இந்தியா - மே.இ.தீவுகள் இன்று பலப்பரீட்சை

வியாழக்கிழமை, 22 ஜூன் 2017      விளையாட்டு
Image Unavailable

போர்ட் ஆப் ஸ்பெயின் : இந்தியா- மே.இ.தீவுகள் இடையே 5 ஒரு நாள் போட்டித் தொடரில் முதல் ஆட்டம் டிரினிடாட்டில் உள்ள போர்ட் ஆப் ஸ்பெயினில் இன்று நடக்கிறது.
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 ஒரு நாள் போட்டி மற்றும் ஒரே ஒரு 20 ஓவர் ஆட்டத்தில் விளையாடுவதற்காக மே.இ.தீவுகள் சென்றுள்ளது. சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் விளையாடி இந்திய அணி லண்டனில் இருந்து அப்படியே மே.இ.தீவுகளுக்கு புறப்பட்டு சென்றது.

5 ஒரு நாள் போட்டி

இந்தியா- மே.இ.தீவுகள் அணிகள் இடையே 5 ஒரு நாள் போட்டித் தொடரில் முதல் ஆட்டம் டிரினிடாட்டில் உள்ள போர்ட் ஆப் ஸ்பெயினில் இன்று நடக்கிறது. சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி இறுதிப் போட்டியில் பாகிஸ்தானிடம் மிகவும் மோசமாக தோற்றது. இதனால் இந்திய வீரர்கள் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.இதனால் மே.இ.தீவுகள் தொடரை முழுமையாக வெல்ல வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

ரோகித் சர்மாவுக்கு ஓய்வு

மே.இ.தீவுகள் தொடரில் ரோகித் சர்மாவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது. அவருக்கு பதிலாக அதிரடி பேட்ஸ்மேனும், விக்கெட் கீப்பருமான ரிஷப் பந்த் இடம் பெற்றுள்ளார். இதனால் தவானுடன் தொடக்க வீரராக யார் விளையாடுவார் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. ரகானே அல்லது ரிஷப் பந்த் தொடக்க வீரராக களம் இறங்கலாம். மேலும் வேகப்பந்து வீரர் பும்ராவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு குல்திப் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார். பும்ரா இடத்தில் வேகப்பந்து வீரரான முகமது ‌ஷமி அல்லது உமேஷ் யாதவ் இடம் பெறலாம்.

இந்திய அணிக்கு நெருக்கடி

இந்திய அணி கடைசி 2013-ம் ஆண்டு மே.இ.தீவுகளில் விளையாடிய 3 நாடுகள் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்றது. இதனால் இந்த தொடரில் சிறப்பாக விளையாட முடியும் என்ற நம்பிக்கையில் உள்ளது. பயிற்சியாளர் பதவியில் இருந்து கும்ப்ளே விலகியதால் இந்திய அணி இந்த தொடரில் நெருக்கடியுடன் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அணியில் மாற்றம்

மே.இ.தீவுகள் அணி சமீபத்தில் சொந்த மண்ணில் ஆப்கானிஸ்தானுடன் ஒரு நாள் தொடரில் விளையாடியது. 3 போட்டி கொண்ட இந்த தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. இந்த தொடரில் விளையாடிய வீரர்களே முதல் 2 போட்டிக்கான அணியில் இடம் பெற்றுள்ளனர். மே.இ.தீவுகள் அணியில் மாற்றம் எதுவும் இல்லை.

இரு அணிகளும் கடைசியாக 2015-ம் ஆண்டு மார்ச் 5-ந்தேதி பெர்த்தில் நடந்த உலக கோப்பையில் மோதின. இதில் இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா - மே.இ.தீவுகள் மோதும் இன்றைய ஆட்டம் இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவி‌ஷனில் இந்தப் போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

வீரர்கள் விவரம்:

இந்தியா:

விராட் கோலி (கேப்டன்), தவான், ரகானே, யுவராஜ் சிங், டோனி, ஹார்த்திக் பாண்டியா, கேதர் ஜாதவ், ஜடேஜா, அஸ்வின், புவனேஷ்வர் குமார், தினேஷ் கார்த்திக், ரி‌ஷப் பந்த், உமேஷ் யாதவ், முகமது ‌ஷபி, குலதீப் யாதவ்.

மே.இ.தீவுகள்:

ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), இவான் வீவாஸ், ரோஸ்டன் சேஸ், ஹோப், ஜேசன் முகமது, கீரன்போவெல், ஜோனதன் கார்ட்டர், ரோவ்மேன் போவெல், கெஸ்ரிக் வில்லியம்ஸ், ஆஸ்லே நர்ஸ், அல்ஜாரி ஜோசப்ஸ், தேவேந்திர பிஷு, கும்மின்ஸ்.

ஒருநாள் போட்டி கண்ணோட்டம்

இந்தியா - அணிகள் மோதிய ஒருநாள் போட்டி குறித்த கண்ணோட்டத்தை பார்க்கலாம்.

* ஒரு நாள் போட்டியில் இரு அணிகளும் இதுவரை 116 ஆட்டத்தில் மோதியுள்ளன. இதில் இந்தியா 53 போட்டியிலும், மே.இ.தீவுகள் அணி 60 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன. 2 போட்டி முடிவு இல்லை. ஒரு ஆட்டம் ‘டை’யில் முடிந்தது. இந்திய அணி 2011-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தூர் மைதானத்தில் 5 விக்கெட் இழப்புக்கு 418 ரன் குவித்ததே அதிகபட்ச ஸ்கோர் ஆகும். மே.இ.தீவுகள் அணி அதிகபட்சமாக 1983-ம் ஆண்டில் 338 ரன் (ஜாம் ஷெட்பூர்) குவித்து இருந்தது.

*  இந்திய அணி 1993-ம் ஆண்டு ஆமதாபாத்தில் 100 ரன்னில் சுருண்டதே குறைந்தபட்ச ஸ்கோராகும். மே.இ.தீவுகள் 121 ரன்னில் ‘அல் அவுட்’ ஆனது (1997 போர்ட் ஆப் ஸ்பெயின்) குறைந்தபட்ச ஸ்கோராகும். டெண்டுல்கர் 39 ஆட்டத்தில் 1573 ரன் எடுத்துள்ளார். சராசரி 52.43 ஆகும். இதில் 4 சதமும் 11 அரை சதமும் அடங்கும். அதிகபட்சம் 141 ரன் குவித்துள்ளார். டெஸ்ட்மான்ட் கெய்னஸ் 1357 ரன்னும், ராகுல் டிராவிட் 1348 ரன்னும் எடுத்துள்ளார்.

*  ஷேவாக் ஒரு ஆட்டத்தில் 219 ரன் குவித்து முதல் இடத்தில் உள்ளார். 2011-ம் ஆண்டு இந்தூர் மைதானத்தில் இந்த ரன்னை எடுத்தார். கெய்னஸ் 152 ரன்னும், சந்திரபால், விவியன் ரிச்சர்ட்ஸ் தலா 149 ரன்னும் எடுத்துள்ளனர். கார்ட்னி வால்ஷ் அதிகபட்சமாக 44 விக்கெட் கைப்பற்றி உள்ளார். கபில்தேவ் 43 விக்கெட்டும் எடுத்துள்ளார். கும்ப்ளே 12 ரன் கொடுத்து 6 விக்கெட் கைப்பற்றியதே சிறந்த பந்துவீச்சு ஆகும். 1993-ம் ஆண்டு கொல்கத்தா மைதானத்தில் இந்த முத்திரையை பதித்து இருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து