முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை, மெரீனா கடற்கரையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிரம்மாண்ட நினைவு மண்டபம் - சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

புதன்கிழமை, 28 ஜூன் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் அனைவரும் பாராட்டத்தக்க வகையில் நினைவு மண்டபம் அமைக்கப்படும் என்று சட்டசபையில் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

நல்லடக்கம்

அ.தி.மு.க. பொதுச்செயலாளராகவும், தமிழக முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5-ம் தேதி மரணமடைந்தார். சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாள்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சைபலனின்றி அவர் மரணமடைந்தார். அவரது உடல் சென்னை மெரீனா கடற்கரையில், மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் நினைவிட வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

கண்ணீர் அஞ்சலி

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் ஆயரிக்கணக்கான மக்கள் நாள்தோறும் தொடர்ந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருவதை இன்றளவும் காண முடிகிறது. மக்களுக்காக பல நல்ல திட்டங்களை கொண்டு வந்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. அம்மா குடிநீர், அம்மா உப்பு, அம்மா உணவகம், அம்மா சிமெண்ட் போன்ற பல்வேறு பயனுள்ள திட்டங்களை கொண்டு வந்த ஜெயலலிதா பெண்களுக்காக பல்வேறு ஒப்பற்ற திட்டங்களையும் கொண்டு வந்தார்.

பல்வேறு திட்டங்கள்

ஏழை பெண்களின் திருமணத்திற்கு தாலிக்கு தங்கம் இல்லத்தரசிகளுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி போன்ற திட்டங்களை கொண்டு வந்து பெண்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் ஜெயலலிதா எனவே அவருக்கு நினைவு மண்டபம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்களும், தாய்மார்களும் விருப்பப்பட்டனர். அவர்களின் விருப்பம் விரைவில் நிறைவேற உள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிரம்மாண்ட நினைவு மண்டபம் மெரீனா கடற்கரையில் அமைக்கப்படும் என்று நேற்று முதல்வர் பழனிசாமி சட்டசபையில் அறிவித்துள்ளார்.

நினைவுமண்டபம்

தமிழக சட்டசபையில் நேற்று பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை மானியக்கோரிக்கை விவாதத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார். அப்போது நினைவு மண்டபம் குறித்து அவர் பேசியதாவது:-

பொன்மனச் செம்மல் மக்கள் திலகம், வள்ளல் பெருமான் என்றெல்லாம் மக்களால் போற்றிப் புகழப்பட்ட மறைந்த முன்னாள் முதல்வர் பாரத ரத்னா, எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, சென்னையில் அவரின் நினைவாக நூற்றாண்டுவிழா வளைவு அமைக்கப்படும். உலகத் தலைவர்களின் வரிசையில் ஒருவராக விளங்கிய, மறைந்த முதல்வர் ஜெயலலிதா நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில், பிரம்மண்டமான நினைவுமண்டபம் அமைக்க உலகளாவிய கட்டட கலைஞர்கள் நிறுவனங்களிலிருந்து வரைபடங்களைபெறுவதற்கு விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. எல்லோரும் பாராட்டும் வகையில் நிபுணர்கள் குழு மூலம்,சிறந்த வரைபடங்களை தேர்வு செய்து நினைவு மண்டபம் அமைக்கப்படவுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் இந்த அறிவிப்பால், அ.தி.மு.க.வினரும், பொதுமக்களும் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து