ரூ.15 கோடி மதிப்பீட்டில் ஜெயலலிதா நினைவு மண்டபம் அமைக்க அரசாணை: அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்

வெள்ளிக்கிழமை, 14 ஜூலை 2017      தமிழகம்
jayalalitha RK Nagar1

Source: provided

சென்னை : எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில், ஜெயலலிதா நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில், ரூ.15 கோடி மதிப்பீட்டில் அவரது நினைவு மண்டபம் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டு, உலகளாவிய ஒப்பந்தம் கோரப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சட்டசபையில் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் செய்தி மற்றும் விளம்பரத்துறை மானியக்கோரிக்கை விவாதம் நேற்று நடைபெற்றது. விவாதங்களுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியதாவது:-

2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் களத்திலே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் பிறந்த நாள் நூற்றாண்டு விழாவை கழக அரசுதான் கொண்டாடும் என்று உறுதியுடன் சொன்னார். அவர் சொன்ன அந்த தெய்வ வாக்கு பலித்து, இன்று எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் நூற்றாண்டு விழாவை அ.தி.மு.க  அரசுதான் கொண்டாடிக் கொண்டிருக்கிறது.


மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க அண்ணா நினைவிட வளாகத்திற்குள் உள்ள 3 ஏக்கர் பரப்பிலான இடத்தினை மேம்படுத்தி, சென்னை மாநகராட்சி மூலம் இயற்கை எழில்கொஞ்சும் பூங்கா ரூ.2.62 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு, முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். திண்டுக்கல் மாவட்டத்தில் ஹைதர் அலி - திப்பு சுல்தான் மணிமண்டபம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சுவாமி சகஜானந்தா மணிமண்டபம் ஆகியவற்றிற்கான கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்று திறப்பு விழா காணும் நிலையில் உள்ளன.

முத்தாய்ப்பாக ஒருபுறத்தில் வங்கக் கடல் அலை வந்து வந்து தாலாட்ட, மறுபுறத்தில் மக்கள் கடல் அலையாய் வந்து வந்து கண்ணீர் வடிக்க, மக்கள் திரள் தினந்தோறும் வந்து வந்து வழிபட்டு மகிழும் ஒரு புனிதத்தலம் சென்னையில் உள்ளது. அங்கிங் கெனாதபடி எங்கும் பிரகாசமாய், ஆனந்த கீர்த்தியாகி அல்லலுறும் ஏழைகளே இல்லையெனும் நிலைமைதனை ஆக்கிய மூர்த்தியாகி தங்குதடை ஏதுமின்றி தமிழகம் முன்னேறதான் தேய்ந்து புனிதமாகி தரணியெங்கும் புகழுடலால் தான் நிறைந்துவான் கலந்த வரலாறாய் மாறிவிட்ட அம்மா நல்லடக்கம் செய்யப்பட்ட இடம் தான் அது.

சென்னையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில், ரூ.15 கோடி மதிப்பீட்டில், நினைவு மண்டபம் அமைக்க செய்தி மக்கள் தொடர்புத்துறையால் அரசாணை வெளியிடப்பட்டு, தொடர் நடவடிக்கையாக உலகளாவிய ஒப்பந்தம் கோரப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க,கோயம்புத்தூர் மாவட்டம், கொண்டையம் பாளையம் கிராமத்தில், உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவுக்கு ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் மணிமண்டபம் அமைக்க இத்துறையால் அரசாணை வெளியிடப்பட்டு தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்ட அனைத்து பணிகளும் இத்துறையில் 100 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னையில் தமிழ்நாடு அரசின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள மணிமண்டபங்கள் குறித்து தமிழக மக்கள் மட்டுமின்றி, உலக மக்கள் அனைவரும் பார்த்து அறிந்து கொள்ளும் வகையில் 360 டிகிரியில் படம் எடுக்கப்பட்டு அதனை செய்தி மக்கள் தொடர்புத்துறை இணையதளம் மற்றும் கூகுள் இணையதளம் ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவினை ஜூன் 2017 முதல் ஜனவரி 2018 வரை தமிழ்நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆணையிட்டுள்ளார் என்பதைத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக்குழு அங்கீகாரத்துடன் பயிற்சி அளிக்கப்பட்டு வந்த பட்டயப் படிப்புகள் இளங்கலை காட்சிக்கலை நான்காண்டு பட்டப்படிப்புகளாக மாற்றப்பட்டுள்ளது. 2016-2017 ஆம் கல்வியாண்டு முதல் தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலை பல்கலைக் கழகத்துடன் இணைந்து ஆறுபட்டப் படிப்புகள் பயிற்று விக்கப்படுகின்றன.

இதுவரை, செய்தி-மக்கள் தொடர்புத் துறையால் 183 அரசுப் பொருட்காட்சிகள் நடத்தப்பட்டு, அதன் மூலம் அரசுக்கு, ஏறத்தாழ 37 கோடியே 65 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் நிகர வருவாய் கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து