ஜனாதிபதி தேர்தல்: மாறி வாக்களிப்பா? தேசியவாத காங். திட்டவட்ட மறுப்பு
மும்பை, ஜனாதிபதி தேர்தலில் மாறி வாக்களிக்கவில்லை என்றும் ராம்நாத் கோவிந்த்துக்கு வாக்களித்திருப்பதாக கூறுவது வெறும் வதந்தி என்று தேசியவாத காங்கிரஸ் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் ஆளும் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக ராம்நாத் கோவிந்த்தும் காங்கிரஸ் தலைமையிலான 17 எதிர்க்கட்சிகள் சார்பில் மீராகுமாரும் நிறுத்தப்பட்டுள்ளனர். நேற்று ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சிகள் சார்பில் இருக்கும் சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் எம்.பி.க்களும், எம்.எல்.ஏ.க்களும் ராம்நாத் கோவிந்த்துக்கு வாக்களித்ததாக கூறப்படுகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 185 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். ஆனால் 205 எம்.எல்.ஏ.க்கள் ராம்நாத் கோவிந்த்துக்கு வாக்களித்துள்ளதாகவும் அதாவது காங்கிரஸ் தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது என்றும் மாநில பாரதிய ஜனதா கட்சி தலைவர் ஒருவர் தெரிவித்தார். மேலும் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 14 முதல் 15 எம்.எல்.ஏ.க்கள், தேசிய ஜனநாயக கூட்டணி முகாமை தொடர்பு கொண்டதாக சுயேட்சை எம்.எல்.ஏ. ரவி ராணா கூறியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதை தேசியவாத காங்கிரஸ் திட்டவட்டமாக மறுத்துள்ளது. நாங்கள் ஆரம்பம் முதலே மீராகுமாருக்கு ஆதரவாகத்தான் இருந்தோம். அவருக்கு ஆதரவு திரட்டினோம். எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களோ, எம்.பி.க்களோ யாரும் ராம்நாத் கோவிந்த்துக்கு வாக்களிக்கவில்லை என்று தேசியவாத காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நவாப் மாலிக் நேற்று மும்பையில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார். அனைத்தும் வெறும் வதந்திகள்தான். இவைகளை ஒதுக்கித்தள்ளிவிட வேண்டும் என்றும் மாலிக் மேலும் கூறியுள்ளார்.
288 உறுப்பினர்களை கொண்ட மகாராஷ்டிரா சட்டசபையில் பாரதிய ஜனதாவுக்கு 122, அதன் கூட்டணி கட்சியான சிவசேனாவுக்கு 63 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர். காங்கிரசுக்கு 42, தேசியவாத காங்கிரசுக்கு 41 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர். 7 சுயேட்சை உறுப்பினர்களும் மற்றும் இதர கட்சிகளின் உறுப்பினர்களும் உள்ளனர். மாநிலத்தில் 48 எம்.பி.க்கள் உள்ளனர். இதில் பாரதிய ஜனதாவுக்கு 23-ம் சிவசேனாவுக்கு 18, தேசியவாத காங்கிரசுக்கு 4, காங்கிரசுக்கு 2, சுயேட்சை உறுப்பினரும் ஒருவர் உள்ளார். மகாராஷ்டிரா மாநித்தில் மொத்தம் 19 ராஜ்யசபை உறுப்பினர்கள் உள்ளனர். மாநிலத்தில் மொத்தம் 355 ஓட்டுக்கள் உள்ளன. இதில் 288 எம்.எல்.ஏ.க்கள் 48 லோக்சபை எம்.பி.க்கள், ராஜ்யசபை எம்.பி.க்கள் 19. பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 248 ஓட்டுக்கள் உள்ளன. இதில் 199 எம்.எல்.ஏ.க்களும் 49 எம்.பி.க்களும் அடங்கும். காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்களை சேர்த்து 104 ஓட்டுக்கள் உள்ளன. இதை வைத்துப்பார்த்தால் தேசிய ஜனநாயக கூட்டணியின் 248 ஓட்டுக்கள் மதிப்பானது 69ஆயிரத்து 517 ஆகும். ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஓட்டுக்கள் 104 ஆகும். இவைகளின் மதிப்பு 27 ஆயிரத்து 728.