முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காய்ச்சல், தொற்று நோய்கள் குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் விஜயபாஸ்கர் வீடியோ கான்பரன்சிங் ஆய்வு

வெள்ளிக்கிழமை, 21 ஜூலை 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை, தமிழகத்தில் காய்ச்சல் தொற்றுநோய்கள் மற்றும் பருவகால நோய்கள் குறித்து மாவட்ட அளவில் அதிகாரிகளுடன் அமைச்சர் விஜயபாஸ்கர், வீடியோ கான்பரன்சிங் மூலம் சென்னையில் ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்தில் காய்ச்சல், தொற்று நோய்கள் மற்றும் பருவகால நோய்கள் குறித்து அனைத்து மாவட்டங்களைச் சார்ந்த மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் காணொலிக் காட்சி மூலம் நடைபெற்றது. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில்  தமிழ்நாட்டில் காய்ச்சல் மற்றும் தொற்று நோய்கள் நிலைமை குறித்து மாவட்ட வாரியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும், அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கத் தேவையான வசதிகள் குறித்து ஆய்வுசெய்யப்பட்டது. அரசு மருத்துவமனைகளில் போதுமான படுக்கை வசதிகள், காய்ச்சல் பரிசோதனை வசதிகள், தேவைப்படும் மருந்துகள் கையிருப்பு போன்றவைகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. மேலும், மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்து கடைகளில் மருந்துகள் விற்பதை தடுப்பது மற்றும் போலி மருத்துவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் விரிவான அறிவுரைகள் வழங்கப்பட்டது.கொசுக்களை கட்டுபடுத்தும் நடவடிக்கைகளான கொசு மருந்து தெளித்தல் மற்றும் புகை மருந்து அடித்தல் போன்ற பணிகள் தொடர்ந்து சிறப்பாக நடைபெற அறிவுரைகள் வழங்கப்பட்டன. இப்பணிகளைதொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ள பல்வேறு துறைகளுக்கான ஒருங்கிணைப்பு குழுகூட்டம் அவ்வப்போது நடைபெற வேண்டுமென்று எடுத்துரைக்கப்பட்டது. மேலும், காய்ச்சல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மருத்துவ முகாம்கள் மேற்கொள்ளுதல், பாதுகாப்பான குடிநீர் வழங்குவதை உறுதி செய்தல், பள்ளி கல்லூரி மாணவர்கள் மூலம் விழிப்புணர்வு பேரணி மற்றம் குறும்படங்கள் திரையிடுதல் போன்ற நடவடிக்கைகளும் தொடர்ந்து தீவிரமாக நடைபெற அறிவுரைகள் வழங்கப்பட்டன.

மேலும், பொது சுகாதாரத்தைநிலை நிறுத்தும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் ஆய்வு செய்திட மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. மேலும் பொது சுகாதாரம் மற்றும்நோய்தடுப்பு மருந்து துறை தலைமை அலுவலகத்தில் பணியாற்றி வரும் கூடுதல் மற்றும் இணை இயக்குநர்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு களப்பணியாற்றும் மாவட்ட துணை இயக்குநர்களின் பணிகளுக்கு உறுதுணையாக இருந்து செயல்பட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் இயக்குநர், பொது சுகாதாரம் (ம) நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர்  கு.குழந்தைச்சாமி பல்வேறு மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று களப் பணிகளை ஆய்வு செய்து வருகிறார். இதனை தொடர்ந்து காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து கணிசமாக குறைந்து வருகிறது. மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் இராதாகிருஷ்ணன் மாவட்ட கலெக்டர்களுடன் தினந்தோறும் தொலை பேசியில் தொடர்பு கொண்டு காய்ச்சல் நிலவரத்தை கண்காணித்து வருகிறார் என்று அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து