சிவகங்கை மாவட்ட கலெக்டர் மலர்விழிக்கு 2016 ம்ஆண்டிற்கான சிறந்த கலெக்டர் விருது

sivagangai collecter

 சிவகங்கை.-தமிழக முதலமைச்சர்  எடப்பாடி கே. பழனிசாமி   ‘மாற்றுத்திறானாளிகளுக்கு சிறப்பாக சேவை புரிந்தமைக்காக 2016 ஆம் ஆண்டு சிறந்த மாவட்ட ஆட்சித் தலைவர் விருதினை” சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர்   தி.சு.மலர்விழி,  வழங்கி கௌரவித்தார்.
        மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரியும் தொண்டு நிறுவனங்கள், அரசு மருத்துவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோருக்கு தமிழக அரசு ஆண்டுதோரும் விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறது. கடந்த 2016ஆம் ஆண்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழகத்தில் சேவை புரிந்த மாவட்ட ஆட்சித் தலைவர்களில் சிறப்பாக சேவை புரிந்த சிவகங்கை மாவட்ட  ஆட்சித் தலைவர்  தி.சு.மலர்விழி,இ.ஆ.ப.,   தமிழக அரசால் தேர்வு செய்யப்பட்டார்.
       முன்னோடி திட்டமாக இந்தியாவிலேயே முதன் முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு நிலம் ஒதுக்கீடு செய்து அவ்விடத்தில் ரூ.20,00,000ஃ- (இருபது இலட்சம் ரூபாய்) மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான நிரந்தர தொழில் பயிற்சி இல்லத்தை கட்டமைத்துள்ளார். தமிழகத்தில் வேறு எந்த மாவட்ட ஆட்சித் தலைவரும் மாற்றுத்திறனாளிகளுக்காக இத்தகைய சிறப்பான திட்டத்தை வடிவமைத்து செயல்படுத்தியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
      உறவினர்களாலும், சமூகத்தாலும் புறக்கணிக்கப்பட்ட ஆதரவற்ற தவழும் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்தில்  மாற்றுத்திறனாளிகளுக்கான நிரந்தர தொழில் பயிற்சி இல்லத்தை உருவாக்கியதுடன் இதில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஆதரவற்ற மாற்றுத்திறனாளிகளை சேர்த்து அவர்களுக்கு நிரந்தர வருமானம் ஈட்டக்கூடிய வகையில் அரசின் மற்ற துறைகளை ஒருங்கிணைத்து தொழில் பயிற்சி வழங்கவும், தொழில் பயிற்சியின் மூலம் வருமானம் ஈட்டவும் வழிவகை செய்துள்ளதால் மாற்றுத்திறனாளிகள் தங்களது திறமையால் சுயமாக முன்னேற்றமடைந்து வருகின்றனர்.
     மேலும், அரசு நலத் திட்டங்களை மாற்றுத்திறனாளிகள் எளிதில் பெறும் வகையில் மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளுக்கு உடனுக்குடன் தீர்வு கண்டதுடன்,  மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியை மாற்றுத்திறனாளிகளின் நலத் திட்டங்களுக்கு அதிக அளவில் ஒதுக்கீடு செய்து மாற்றுத்திறனாளிகளுக்கு சேவையாற்றி உள்ளார். மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அனைத்து கட்டிடங்களிலும் மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி எளிதில் நடமாட ரூபாய் ஐந்து கோடி செலவில் சாய்வு தளப்பாதைகள் மற்றும்  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சக்கர நாற்காலியுடன் செல்லும் வகையில் மின்தூக்கி(லிப்ட்) ஆகியவற்றை நிறுவிட திட்ட மதிப்பீடு தயாரித்து அரசுக்கு சமர்ப்பித்துள்ளார்.
       சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவரின் இத்தகைய சிறப்பான சேவைகளை பாராட்டி ‘மாற்றுத்திறானாளிகளுக்கு சிறப்பாக சேவை புரிந்தமைக்கான  2016ஆம் ஆண்டு சிறந்த மாவட்ட ஆட்சித் தலைவர் விருது” 26.07.2017 அன்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில்  தமிழக முதலமைச்சர்  எடப்பாடி கே. பழனிசாமி   சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர்  தி.சு.மலர்விழி, இ.ஆ.ப அவர்களுக்கு வழங்கி கவுரவித்தார்கள்.
        இந்நிகழ்ச்சியில்  சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சர் டாக்டர் வி.சரோஜா, தலைமைச் செயலாளர் முனைவர் கிரிஜா வைத்தியநாதன் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை முதன்மைச் செயலாளர் (கூடுதல் பொறுப்பு)  முகமது நசிமுத்தின்,இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து