முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி., மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் மாயாவதி போட்டியிடுவதைத் தடுக்க பா.ஜ.க திட்டம்

செவ்வாய்க்கிழமை, 8 ஆகஸ்ட் 2017      இந்தியா
Image Unavailable

லக்னோ: உத்தரபிரதேசத்தில் விரைவில் நடைபெறவுள்ள மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி திட்டிமிட்டிருந்தார். ஆனால் அவரது முயற்சியை முறியடிக்க பாரதிய ஜனதா திட்டமிட்டுள்ளது.

கடந்த மக்களவை தேர்தலில் உ.பி.யின் கோரக்பூர் தொகுதியில் 5-வது முறையாக பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி.யானார் யோகி ஆதித்யநாத். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உத்தரபிரதேச முதல்வராக யோகி பொறுப்பேற்றார். இதுபோல பூல்பூர் மக்களவை தொகுதி எம்.பி.யான கேசவ் பிரசாத் மவுரியா, மாநிலத்தின் இரு துணை முதல்வர்களில் ஒருவராக பொறுப்பேற்றார்.
எனினும், ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி  தேர்தல் முடிந்த பிறகு இருவரும் தங்களது எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய திட்டமிட்டிருந்தனர். அவ்வாறு ராஜினாமா செய்தால் இரு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த மாதம் 18-ல், மாநிலங்களைவையில் தலித் பிரச்சினை பற்றி தனக்கு பேச வாய்ப்பளிக்கவில்லை எனக் கூறி கடும் கோபமடைந்த மாயாவதி, தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து, பூல்பூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட மாயாவதி திட்டமிட்டிருந்தார். பா.ஜ.க.வை தோற்கடித்துவிட்டால், அது 2019 மக்களவை தேர்தலின்போது உ.பி.யில் பா.ஜ.க.வுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என மாயாவதி கணக்கிட்டிருந்தார். அவ்வாறு போட்டியிட்டால், பா.ஜ.க.வை தோற்கடிப்பதற்காகவே சமாஜ்வாடி மற்றும் காங்கிரஸ் ஆகிய எதிர்க்கட்சிகளும் மாயாவதிக்கு ஆதரவளிக்கும் என தகவல் வெளியானது.

இதனிடைய இதுபோன்ற சூழல் ஏற்படுவதைத் தடுக்கும் முயற்சியில் பா.ஜ.க இறங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. அதாவது, பூல்பூர் எம்.பி.யாக கேசவ் பிரசாத் மவுரியாவை தொடர வைத்து, அவருக்கு மத்திய அமைச்சரவையில் இடம் தர முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து பா.ஜ.க.வின் தேசிய நிர்வாகிகள் கூறியபோது, “2019 மக்களவை தேர்தல் வரை எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய எந்த வாய்ப்பையும் அளிக்கக் கூடாது என்பது பா.ஜ.க.வின் திட்டம். இதனால், கேசவ் பிரசாத் மவுரியாவை துணை முதல்வர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, அவரை மத்திய அமைச்சராக்க திட்டமிடப்பட்டுள்ளது. துணை முதல்வர் பதவியை வேறு ஒருவருக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதேநேரம், கோரக்பூர் மக்களவை தொகுதியில் யோகி ஆதித்யநாத் தொடர்ந்து 5 முறை எம்.பி.யாக வெற்றி பெற்றுள்ளார். எனவே கோரக்பூர் இடைத் தேர்தலில் போட்டியிட்டு வெல்ல மாயாவதியால் முடியாது. இதன்மூலம், அவரது முயற்சி முறியடிக்கப்படும்” என்றனர்

யோகி ராஜினாமா
ஜனாதிபதி , துணை ஜனாதிபதி தேர்தல் முடிந்த நிலையில், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது மக்களவை எம்.பி பதவியை ராஜினாமா செய்தார். இவர், உத்தரபிரதேச மேல்சபைக்கு தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், துணை முதல்வர் மவுரியா தனது பூல்பூர் தொகுதி எம்.பி.பதவியை ராஜினாமா செய்யவில்லை. எனவே, கோரக்பூர் தொகுதிக்கு மட்டும் இடைத்தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பா.ஜ.க மாநில தலைவராக இருந்த மவுரியா தலைமையில் உ.பி. சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. மவுரியாவுக்கு முதல்வர் பதவி வழங்கப்படும் என எதிர்பார்த்த நிலையில், துணை முதல்வராக நியமிக்கப்பட்டார். அப்பதவியும் தற்போது மாயாவாதியால் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து