சமாஜ்வாடி கட்சிக்கு தொடர்ந்து பின்னடைவு: மேலும் ஒரு எம்.எல்.சி. விலகினார்

புதன்கிழமை, 9 ஆகஸ்ட் 2017      அரசியல்
mulayam singh yadav(N)

லக்னோ, உத்திரப்பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாடிக்கு தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டு வருகிறது. மேலும் ஒரு எம்.எல்.சி. அந்த கட்சியிலிருந்து விலகினார்.

உத்திரப்பிரதேச மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்ததில் இருந்து அந்த கட்சியில் இருந்து பல தலைவர்களும் மாநில மேல்சபை உறுப்பினர்களும் விலகி வருகிறார்கள்.  முதலில் டாக்டர் சரோஜினி அகர்வால் ராஜினாமா செய்துவிட்டு அவர் பாரதிய ஜனதாவில் சேர்ந்துள்ளார். சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவிற்கு மரியாதை கொடுக்காததால் கட்சியில் இருந்து விலகிவிட்டேன் என்று அகர்வால் காரணம் கூறியுள்ளார்.

அதனையடுத்து பாரதிய ஜனதா தலைவர் அமீத்ஷா உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு வந்திருந்தார். அப்போது சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த எம்.எல்.சி.கள் புக்கல் நவாப், யஷ்வந்த் சிங் ஆகியோரும் பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து தாகூர் ஜெய்வீர் சிங்கும் விலகி பாரதிய ஜனதாவில் சேர்ந்துள்ளார். தற்போது சமாஜ்வாடி கட்சியில் இருந்து மேலும் ஒரு எம்.எல்.சி அசோக் பஜ்பாய் விலகி பாரதிய ஜனதாவில் சேர்ந்துள்ளார். இதனால் ஆளும் கட்சியினான பாரதிய ஜனதாவை சேர்ந்தவர்கள் எம்.எல்.சி.யாகுவதற்கு வழி ஏற்பட்டுள்ளது.

மாநில முதல்வராக இருக்கும் யோகி ஆதித்யா நாத், துணைமுதல்வர்களாக இருக்கும் கேசவ் பிரசாத் மவுரியா, தினேஷ் சர்மா மற்றும் அமைச்சர்கள் ஸ்வதந்த்ரா தேவ் சிங், மொஹிசின் ரசா ஆகியோர் எந்த சபையிலும் உறுப்பினர்களாக இல்லை. அதனால் இவர்கள் பாரதிய ஜனதா சார்பாக எம்.எல்.சி.யாக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு உள்ளது. மாநிலத்தில் தற்போது 300-க்கும் மேற்பட்ட பாரதிய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். மாநிலத்தின் மேல்சபையில் தற்போது சமாஜ்வாடி கட்சிக்கு 63 உறுப்பினர்கள் உள்ளனர். பகுஜன்சமாஜ் கட்சிக்கு 9, பாரதிய ஜனதா 8 மற்றும் இதர கட்சிகள், சுயேட்சை உறுப்பினர்கள் உள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து