யது குல கிருஷ்ணர் பிறந்த நாளே கிருஷ்ண ஜெயந்தி

வெள்ளிக்கிழமை, 11 ஆகஸ்ட் 2017      ஆன்மிகம்
krishna-jayanthi

இந்து சமய விழாக்களில் ஆண்டு தோறும் கிருஷ்ணரின் பிறப்பை கிருஷ்ண ஜெயந்தி என்றும், சமஸ்கிருதத்தில் கிருஷ்ண ஜென்மாஷ்டமி என்றும் கொண்டாடப்படுகிறது. தென்னிந்தியாவில் கோகுலாஷ்டமி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. இந்தியா முழுவதும் பரவலாக அனைத்து இந்துக்களாலும் கொண்டாடப்படும் விழாவாகும்.  ஆவணி மாதத்தின் தேய்பிறை எட்டாம் நாளான அஷ்டமியும் ரோகினி நட்சத்திரம் சேர்ந்த நன்நாளில் கிருஷ்ணர் அவதரித்தார்.

மகாவிஷ்ணு துவாபராயுகத்தில் கம்சன், சிசுபாலன், துரியோதனன், கர்ணன், நூற்றுக்கணக்கான கௌரவர்கள் ஆகியோரை அழிக்க கிருஷ்ணாவதாரம் எடுத்தார். தர்மத்துக்கு எதிராக பல அதர்மங்களை செய்த கம்சனை அழிக்கும்படி பிரம்மாவிடம் பூமாதேவி முறையிட்டாள். மகாவிஷ்ணு கிருஷ்ணாவதாரம் எடுத்து தர்மத்தை நிலைநிறுத்துவார் என வாக்குறுதி கொடுத்தார் பிரம்மா. அதன்படி வசுதேவருக்கும், தேவகிக்கும் எட்டாவது குழந்தையாக கண்ணனை பிறக்க வைத்து தன் வாக்குறுதியை நிறைவேற்றினார்.

கம்சனின் தங்கையான தேவகிக்கும், வசுதேவருக்கும் பிறக்கும் எட்டாவது குழந்தையால் கம்சனுக்கு மரணம் நிச்சயம் நிகழும் என்று வானத்தில் இருந்து ஒரு குரல் அசரீரியாக ஒலிக்க, அச்சமுற்றான் கம்சன். உடனடியாக தேவகியை கொல்ல முற்பட்டபோது, அதனை தடுத்த வசுதேவர் தனக்கு பிறக்கும் குழந்தைகளை கம்சனிடமே ஒப்படைப்பதாக வாக்களித்தார். அதனை ஏற்ற கம்சன் அவர்களை சிறையில் அடைத்து கண்காணித்து வந்தான். தேவகிக்குப் பிறந்த ஆறு குழந்தைகளையும் கம்சன் கொன்றான்.

தேவகிக்கு ஏழாவது குழந்தை கருவுற்றதும், மகாவிஷ்ணு, மாயை என்ற பெண்ணைப் படைத்து தேவகியின் வயிற்றில் உள்ள ஏழாவது சிசுவை, வசுதேவரின் முதல் மனைவியான ரோகிணியின் வயிற்றில் சேர்த்து விடு என்றார். பிறகு நீ நந்தகோபனின் மனைவி யசோதையின் வயிற்றில் கருவாக இருக்க வேண்டும் என்றார். அதன்படியே மாயை அவ்வாறு செய்ய, தேவகிக்கு ஏழாவது கர்ப்பம் கலைந்துவிட்டதாக கூறிவிட்டனர். அதை கம்சன் அப்படியே நம்பிவிட்டான். தேவகியின் ஏழாவது குழந்தை ரோகிணியின் வயிற்றில் வளர்ந்தது. அவனே பலராமன். தேவகி எட்டாவதாக கருவுற, மகாவிஷ்ணு அவள் வயிற்றில் கருவானார். ஆவணி மாதம் தேய்பிறையின் அஷ்டமியும், ரோகிணி நட்சத்திரமும் கூடிய நன்நாளில் அவதரித்தார். தன்னை நந்தகோபன் மனைவி யசோதையிடம் விட்டு விட்டு, அவளுக்குப் பிறந்துள்ள பெண் குழந்தையை இங்கே எடுத்து வந்து கம்சனிடம் ஒப்படைக்குமாறு பகவானே வசுதேவரிடம் அருளினார்.

அதன்படி வசுதேவர் கோகுலத்தில் வசித்த யசோதையின் அருகில் தன் குழந்தை கிருஷ்ணனை கிடத்திவிட்டு, அவளுக்குப் பிறந்த பெண் குழந்தையை எடுத்து வந்துவிட்டார். மயக்க நிலையில் இருந்த யசோதைக்கு இது தெரியாது. அந்தப் பெண் குழந்தையைக் கொல்ல கம்சன் வந்தான். அது வானில் எழுந்து எட்டு கைகளிலும் ஆயுதம் ஏந்தி, ‘துர்க்கையான என்னை, உன்னால் கொல்ல முடியாது, உன்னைக் கொல்லக்கூடியவன் ஏற்கனவே கோகுலத்தில் பிறந்து விட்டான்!’ என்று சொல்லி மறைந்தது. பின்னர் கிருஷ்ணன் வளர்ந்து கம்சனைக் கொன்றார்.
யது குல கிருஷ்ணர் பிறந்த நாளை கிருஷ்ண ஜெயந்தி என்னும் பெயரில் இந்து சமய மக்களால் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. கிருஷ்ணர் பிறந்த சிறையின் அறை, கிருஷ்ணர் கோயிலின் கர்ப்பகிரகமாக அமைந்துள்ளது.

ராசலீலா மற்றும் தகி அண்டி என்ற தயிர்க் கலசம் என வட இந்தியாவில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ராசலீலா என்பது கிருஷ்ணரின் இளமைக் கால வாழ்க்கையை கோகுலத்தில் கோபியர்களுடன் விளையாடிய காதல் விளையாட்டுக்களை நடிப்பதாகும். மகாராஷ்டிரத்தில் பிரபலமாக உள்ள தகி அண்டி என்பது உயரத்தில் தொங்க விடப்பட்டுள்ள வெண்ணத்தாழியை சிறுவர்கள் கோவிந்தா வேடமிட்டு நாற்கூம்பு எனப்படும் பிரமிடு வடிவமைத்து மேலேறி அதனை உடைப்பதாகும். அவ்வாறு கோவிந்தாக்கள் கூம்பின் மேலேறும் போது நாற்புறமும் தண்ணீர் அடித்து அவர்களை ஏறவிடாமல் தடுப்பதும் விளையாட்டை ஆர்வமிக்கதாக ஆக்குகிறது.

கிருஷ்ண ஜெயந்தியன்று கேரளாவில் குருவாயூர் கோவிலில் மிகச்சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகை, அன்றைய தினம் மட்டும் ஒரு லட்சத்திற்கு அதிகமான பக்தர்கள் உலகெங்கிலும் இருந்து வருகின்றனர். தென்னிந்தியாவில் ஸ்ரீஜெயந்தி, கோகுலாஷ்டமி, ஜென்மாஷ்டமி என்றும், குறிப்பாக தமிழ்நாட்டில் யாதவர்கள், செட்டியார்கள், பிள்ளைமார் மற்றும் பிராமணர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். தற்காலத்தில் உறியடி மற்றும் தேரோட்டம் நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.

கிருஷ்ணன் நடுநிசியில் பிறந்ததாகக் கருதப்படுவதால் பூஜைகள் மாலை நேரத்தில் தொடங்குகின்றன. மேலும் இந்த நாளில் கிருஷ்ணருக்குப் பிடித்த உணவுப் பொருட்களை செய்தும், கிருஷ்ணரின் சிலைகளை நன்றாக அலங்கரித்தும் கிருஷ்ணரை தங்கள் இல்லங்களுக்கு வரவழைக்கும் விதமாக, குழந்தையின் கால் பாதங்களை வரைந்தும், கண்ணன் சிறு குழந்தையாக வீட்டிற்குள் அடி எடுத்து வைப்பது போல் பாவித்து குழந்தைகளின் கால் தடங்களை வீட்டு வாசலில் இருந்து பூஜையறை வரை தடம் பதித்து, கண்ணனே தம் வீட்டிற்குள் வருவது போல் பிரமித்து மகிழ்வர். தங்கள் வீடுகளில் உள்ள ஆண் குழந்தைகளுக்கு கண்ணணைப் போன்றும், பெண் குழந்தைகளுக்கு கோபியர்களைப் போல அலங்கரித்தும் மகிழ்கின்றனர். கிருஷ்ணன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகளும், பூஜைகளும் நடத்தப்படுகின்றன. ஏராளமான பக்தர்கள் கிருஷ்ணர் கோயில்களுக்குச் சென்று தரிசனம் செய்கின்றனர்.

இந்த நாளில் உரியடித் திருவிழாவும், மனித பிரமிடுகளை எழுப்புதலும் நடைபெறும். அதாவது மிக உயர்ந்த இடத்தில் வெண்ணை நிரப்பப்பட்ட பானையை கட்டி தொங்கவிடப்படும். அதை இளைஞர்கள் ஒருவர் மீது ஒருவர் ஏறி பிரமீடு போன்ற தோற்றத்தில் அந்த பானையை உடைத்து அதில் இருக்கும் வெண்ணையை உண்பது சிறப்பம்சமாகும்.

மேலும் குழந்தைகளுக்கு பிரியமான லட்டு, அதிரசம் போன்ற இனிப்பு வகைகளும் சீடை, முறுக்கு போன்ற கார வகை பட்சனங்களும் படைத்து வணங்குவர். மேலும் கும்குமப்பூ கலந்த கோதுமை பொங்கல், முந்திரி, பாதாம், பிஸ்தா, ரவா லட்டு, சர்க்கரை கலந்த வெண்ணை, மோர் குழம்பு, இனிப்பு பூரி, பாசிப்பருப்பு பாயாசம், தேன் குழல் போன்ற பிரசாதங்கள் படைத்து குழந்தைகளுக்கு வழங்குவர்.

போர்க்களத்தில் அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் கூறிய ஆலோசனைகளே இந்துக்களின் புனித நூலான பகவத் கீதையாக போற்றப்படுகிறது.

நண்பனாக வளரும் செல்லப்பிராணி PUG | review and care about pug dogs

PETTA Audio Launch Updates | Rajinikanth, Vijay Sethupathi, Simran, Trisha

Ragi paal | kelvaragu milk | BABY FOOD for 4 Months old | குழந்தைகளுக்கு கேழ்வரகு / ராகி பவுடர்

Learn colors with 10 Color Play doh and Bumblebee | Learn numbers with Clay and balloons and #TMNT

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து