முதலமைச்சர் மருத்துவ காப்பீடு திட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு தனியார் ஆஸ்பத்திரியில் இலவச சிகிச்சை - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

வெள்ளிக்கிழமை, 11 ஆகஸ்ட் 2017      தமிழகம்
vijaya-bhaskar 2017 6 3

ஈரோடு : முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் தனியார் ஆஸ்பத்திரிகளில் டெங்கு காய்ச்சலுக்கு இலவசமாக சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

பயப்படத் தேவையில்லை

ஈரோடு அரசு தலைமை ஆஸ்பத்திரியில் நேற்று நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன், சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் டெங்கு காய்ச்சல் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, டெங்கு பாதிப்பினால் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை சந்தித்து குறைகள் குறித்து கேட்டறிந்தனர். அதன்பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் டெங்கு முழு கட்டுப்பாட்டிற்குள் உள்ளது. காய்ச்சல் ஏற்பட்டால் டெங்குவாக இருக்கும் எனக் கருதி பயப்படத் தேவையில்லை.


15 பேர் மட்டுமே ...

ஈரோடு மாவட்டத்தில் டெங்கு கட்டுப்படுத்தப் பட்டுள்ளது. டெங்கு பாதிப்பால் 100 சதவீதம் உயிரிழப்பு இல்லாத நிலையை உருவாக்க டாக்டர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. தமிழகத்தில் 5 ஆயிரம் பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு குணப்படுத்தக் கூடிய காய்ச்சல்தான். காய்ச்சல் ஏற்பட்டால் அருகில் உள்ள மருந்து கடைகளுக்கு சென்று மருந்து வாங்கவேண்டாம். உடனடியாக அரசு ஆஸ்பத்திரிகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ளவேண்டும். கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து தற்போது வரை டெங்கு பாதிப்பினால் 15 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். 20 பேர் டெங்கு மற்றும் பிற நோய்களின் தாக்குதல் காரணமாக உயிரிழந்துள்ளனர்.

இலவசமாக சிகிச்சை...

தனியார் ஆஸ்பத்திரிகளில் டெங்கு சிசிச்சைக்காக சேர்க்கப்படும் நோயாளிகள் குறித்து சுகாதாரத்துறை ஆய்வாளர்கள் மூலமாக தினமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அங்கீகரிக்கப்பட்ட 870 தனியார் ஆஸ்பத்திரிகளில் முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் டெங்கு காய்ச்சலுக்கு இலவசமாக சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து