அ.தி.மு.க எனும் சிங்கத்துடன் மோதுகிறார் கமல்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பாய்ச்சல்

செவ்வாய்க்கிழமை, 15 ஆகஸ்ட் 2017      அரசியல்
rajendrabalaji 2017 06 02

சென்னை,  தமிழக அரசை விமர்சித்து நேற்று டுவிட்டரில் பதிவிட்டுள்ள கமல் ஹாசனுக்கு தமிழக அரசை விமர்சிக்கும் யோக்கியதை கிடையாது என்று பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல் சுதந்திர தினமான நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில்  முதல்வரைப் பற்றி விமர்சனம் செய்திருந்திருந்தார்.

இதற்கு கடும் கண்டனத்தை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். மேலும், தமிழக அரசை விமர்சிக்கும் யோக்கியதை கமல்ஹாசனுக்கு இல்லை என்று தெரிவித்துள்ள ராஜேந்திர பாலாஜி, விளம்பரத்துக்காகத் தேவையில்லாமல் சிங்கத்துடன் கமல் மோதுகிறார் என்று எச்சரித்துள்ளார்.

ஜெயலலிதா இறந்த போதே, கிண்டல் செய்வது போன்றுதான் அறிக்கை வெளியிட்டவர் கமல். தனிப்பட்ட வாழ்க்கையில் ஒழுக்கமே இல்லாதவர் அவர் அ.தி.மு.க.வை விமர்சிக்கத் தேவையில்லை என்றும் கூறினார். தமிழகத்தில் வகுப்பு சண்டை, இனச் சண்டை, மதச் சண்டை என எதுவுமே நடைபெறவில்லை. பொத்தாம் பொதுவாக சொல்லாமல் என்ன ஊழல் நடந்தது என்று கமல் சொல்ல வேண்டாமா என்றும் ராஜேந்திர பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், விஸ்வரூபம் பட பிரச்சனையில் இருந்தே கமலுக்கு அ.தி.மு.க.வின் மீது காழ்ப்புணர்ச்சி இருந்து வருகிறது என்று அமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார். அதனால்தான் தொடர்ந்து கமல் அதிமுகவை விமர்சித்து வருகிறார் என்றும் ராஜேந்திர பாலாஜி கூறினார்.

கமல்ஹாசன் பேசும் கருத்தெல்லாம் திமுக நடிகரின் கருத்தாகவே நாங்கள் பார்க்கிறோம் என்றும் தி.மு.க.வின் குரலாகவே கமல்ஹாசன் பேசி வருகிறார் என்றும் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் எங்கு ஊழல் இருக்கிறது என்று ஆணித்தரமாக நிரூபிக்க முடியுமா எனறும்  அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து