முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முத்தலாக் நடைமுறைக்கு இடைக்கால தடை சுப்ரீம் கோர்ட் உத்தரவு: பிரதமர் வரவேற்பு

செவ்வாய்க்கிழமை, 22 ஆகஸ்ட் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: இஸ்லாம் மதத்தில் பெண்களுக்கு விவாகரத்து அளிக்கும் முத்தலாக்  நடைமுறைக்கு  சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடைவிதித்துள்ளது. இது வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

முத்தலாக் முறையை முஸ்லிம் ஆண்கள் தவறாக பயன்படுத்தி விவாகரத்து செய்வதால், அப்பாவி பெண்கள், குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, இந்த முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் 7 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில் 5 ரிட் மனுக்களை இஸ்லாமிய பெண் ஒருவர் தாக்கல் செய்தார்.

இந்த மனுக்கள் கடந்த மார்ச் மாதம் 30ம் தேதி உச்சநீதிமன்றம் விசாரித்தது. பின்னர், இந்த மனுக்களை அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என உச்சநீதிமன்றம் அறிவித்தது.

அரசியல் அமர்வு
முத்தலாக் முறை இஸ்லாம் மதத்தின் அடிப்படை அம்சங்களில் ஒன்றுதானா, முத்தலாக் வழங்கப்படுவதில் பெண்களுக்கு பாரபட்சம் காட்டப்படுகிறதா என்பது குறித்து விசாரித்து ஆராயப்படுமென உச்சநீதிமன்றம் தெரிவித்தது. அதன்படி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ். கெஹர், நீதிபதிகள் குரியன் ஜோசப், நாரிமன், யூ.யூ. லலித், அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த விசாரணையை நடத்தினர்.

எதிர் கருத்து
இந்த விசாரணையில், அகில இந்திய முஸ்லிம்கள் தனிநபர் வாரியம், அகில இந்திய முஸ்லிம் பெண்கள் தனிநபர் சட்ட வாரியம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மற்றும் மத்திய அரசின் கருத்துக்கள் கேட்கப்பட்டன. முத்தலாக் என்ற முறையைத் தவறாக பயன்படுத்தி ஸ்கைஃப், வாட்ஸ் அப் மூலம் தலாக் சொல்லி விவாகரத்து அளிப்பதாகப் பெண்கள் அமைப்பினர் சார்பில் குற்றம்சாட்டப்பட்டன.

இடைக்காலத் தடை
முத்தலாக் முறையில் முஸ்லிம் பெண்களின் உரிமை பறிக்கப்படுவதாக மத்திய அரசின் சார்பில் வாதிடப்பட்டது. முத்தலாக் வழக்கில் விசாரணை முடிந்துவிட்ட நிலையில் அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கில் நேற்று முத்தலாக் முறைக்கு இடைக்காலத் தடையை உச்சநீதிமன்றம் விதித்துள்ளது.

புதிய சட்டம்
3 நீதிபதிகள் முத்தலாக் நடைமுறைக்கு எதிராக தீர்ப்பளித்தனர். அதேநேரம் தலைமை நீதிபதி கெஹர் மற்றும் நீதிபதி அப்துல் நசீர் ஆகியோர் முத்தலாக் நடைமுறை செல்லும் என்று தீர்ப்பளித்தனர். எனவே 3:2 என்ற நீதிபதிகளின் விகிதம் அடிப்படையில் முத்தலாக்கிற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், முத்தலாக் தொடர்பாக உரிய வகையில் புதிய சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அதுவரை முத்தலாக் நடைமுறைக்கு இடைக்காலத் தடை இருக்கும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது, உடனடி தலாக் நடைமுறை அல்லது தலாக் இ பித்தாட் என்ற நடைமுறைக்குத்தான். தலாக்-உல்-சன்னத் நடைமுறைக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதிக்கவில்லை. இது கால அவகாசம் எடுத்துக்கொண்டு முறைப்படி விசாரிக்கும் நடைமுறை என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து